மோடியின் ஆதரவாளர்கள் ஏன் காந்தியை கண்டு அஞ்சுகிறார்கள்? அவரது கொலையாளி கோட்சேவை ஏன் போற்றுகிறார்கள்?
வீர் சங்வி
கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு காந்தி ஜெயந்தி அன்றும் நான் என்னையே இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்கிறேன். காந்திஜி படுகொலை செய்யப்பட்டு ஏழு தசாப்தங்களுக்குப் பிறகும்கூட உலகில் அவரது மதிப்பு குறையவில்லை. அவர் இன்னும் அகிம்சை வழியிலான எதிர்ப்பின் உலகளாவிய அடையாளமாகப் பார்க்கப்படுகிறார். போரும் இரத்தக் களரிகளும் உலகின் பிரச்சினைகளுக்குத் தீர்வு அல்ல என்பதை நிரூபித்த மனிதராகப் பார்க்கப்படுகிறார்.
இருப்பினும், இந்தியாவில் காந்திஜி மரபின் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்பட்டுவருகிறது. அவரது கொலையாளி நாதுராம் கோட்சேவை மகிமைப்படுத்தத் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இங்கே என் கேள்வி இதுதான்: இந்தியாவின் ‘தேசத் தந்தையின்’ மீது இவ்வளவு வெளிப்படையான தாக்குதல் நடக்கக் காரணம் என்ன?
இந்தக் கேள்விக்கு நம் அனைவருக்கும் ஒரு பதில் உள்ளது. இந்துத்துவத்தின் செல்வாக்கு அதிகரித்துள்ளது; அதன் ஆதரவாளர்கள் சிலருக்குக் காந்திஜியின் நினைவைக் கண்டிப்பது ஃபேஷனாகிவிட்டது.
இது தவறான பதில் அல்ல. உண்மையில், காந்திஜியைத் தாக்கும் பலருக்கும் இந்துத்துவச் சாய்வு உள்ளது. ஆனால் இது போதுமான விளக்கமல்ல. தர்க்கரீதியான பதில்கள் இல்லாத பல கேள்விகளையும் இது எழுப்புகிறது.
காந்திஜி மீதான பிரதமரின் அன்பு
காந்திஜியை இழிவுபடுத்தும் முயற்சிகள் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த நிலைப்பாட்டிற்கு முரணாக உள்ளன. மோடி காந்திஜியைப் பலமுறை பாராட்டியிருப்பது மட்டுமல்லாமல், அவரை குஜராத்தின் சிறந்த மகனாகக் கருதுகிறார். பெரும்பாலான குஜராத்திகள் அங்கீகரிக்கும் ஒரு நிலைப்பாடு இது. காந்தி ஜெயந்தியன்று அவர் எக்ஸ் தளத்தில் இட்ட ஒரு பதிவில் ‘அன்புக்குரிய பாபு’வைப் போற்றினார், மேலும், “விக்சித் பாரதத்தை (வளர்ச்சியடைந்த இந்தியா) உருவாக்குவதற்கான எங்கள் தேடலில் நாங்கள் அவரது வழியைப் பின்பற்றுவோம்,” என்று கூறினார்.
பிரதமர் காந்திஜி மீது வைத்திருக்கும் உயர்ந்த மரியாதை ஏன் அவரது ஆதரவாளர்கள் பலருக்கு வித்தியாசமாகத் தெரிவதில்லை?
கோட்சேவைப் புகழ்ந்தவர்களைக் கண்டிக்க மோடி தயக்கம் காட்டியதில்லை. உதாரணமாக, பிரக்யா தாக்கூர் அவரை ‘தேசபக்தர்’ என்று அழைத்தபோது, பகிரங்கமாக அவரைக் கண்டித்தார் (ராஜ்நாத் சிங்கும் கண்டித்தார்). 2024இல் போபாலில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட பிரக்யா தாக்கூருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஆனால், இது இந்துத்துவ விசுவாசிகள் காந்தியைப் பழிப்பதைத் தடுத்துவிடவில்லை.

காந்திஜியின் மீதான தாக்குதல்கள் பெரும்பாலும் கல்வி அறிவின்மையின் அறிகுறியாகும். அவரைக் கண்டிப்பவர்கள் பிரிவினைக்கு அவரைக் காரணமாகக் கருதுகின்றனர். உண்மையில், அந்தக் கால வரலாற்றைப் படித்த எவருக்கும் தெரியும், பிரிவினைக்கு வழிவகுத்த நிகழ்வுகள் சிக்கலானவை என்பது தெரியும். மேலும், பாகிஸ்தானை உருவாக்கியது காந்திஜியின் யோசனை அல்ல.
பிரிவினைக்கு அவர் பொறுப்பு என்று சொல்வது சரியாகவே இருந்தாலும், முஸ்லிம்களுக்கு ஒரு நாட்டை உருவாக்குவது மிக மோசமான விஷயம் என்று இந்துத்துவவாதிகள் ஏன் நினைக்க வேண்டும்?
பிரிவினை நிகழ்ந்திராவிட்டால்…
முஸ்லிம்கள் எப்போதும் இந்துக்களுக்குத் தீங்கு செய்யவே முயலும் நம்பகத்தன்மையற்றவர்கள் என்பதுதான் காந்திஜியைக் கண்டிக்கிற பலரின் நிலைப்பாடு. பிரிவினை நிகழ்ந்திராவிட்டால், இந்தியாவில் பாகிஸ்தான் (சுமார் 255 மில்லியன்), பங்களாதேஷ் (சுமார் 180 மில்லியன்) ஆகிய நாடுகளின் மக்கள் தொகை சேர்ந்திருக்கும். தற்போது சுமார் 230 மில்லியன் இந்திய முஸ்லிம்கள் நம் நாட்டின் முழுமையான குடிமக்களாக இருக்கிறார்கள் என்ற கருத்தை ஏற்கவே இந்துத்துவ விசுவாசிகள் சிரமப்படுகிறார்கள். 680 மில்லியன் முஸ்லிம்கள் கொண்ட ஒரு இந்தியாவை அவர்கள் எப்படிச் சமாளிப்பார்கள்?
பிரிவினை நடந்திராவிட்டாலும் இந்துக்கள்தான் இந்தியாவில் பெரும்பான்மையாக இருப்பார்கள். ஆனால் முஸ்லிம்கள் வாக்காளர்களில் குறிப்பிடத்தக்க பகுதியாக இருப்பார்கள். எனவே பாஜக ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது, மேலும் இவ்வளவு பெரிய முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட ஒரு தேசத்தில் இந்து ராஜ்ஜியம் பற்றிய பேச்சு எதுவும் எடுபடாது.

ஆக, பிரிவினை உண்மையில் இந்துத்துவவாதிகளுக்குச் சாதகமாகவே அமைந்திருக்கிறது.
எது எப்படியாயினும், இரு தேசக் கொள்கையை முன்மொழிந்தது காந்திஜி அல்ல. அது அசல் இந்துத்துவ ஆதரவாளரான வி.டி.சாவர்க்கர்தான்.
கோட்சே, இந்தியாவின் அசல் பயங்கரவாதி
மூன்றாவதாக, காந்திஜியின் மீதான தாக்குதல்கள் மதச்சார்பற்ற அரசியலின் மீதான தாக்குதலாக இருக்க வேண்டும் என்றால், இந்துத்துவ ஆதரவாளர்கள் தவறான இடத்தில் குரைக்கிறார்கள். உண்மையில் ஜவஹர்லால் நேரு அவர்கள் அஞ்சும் மற்றும் வெறுக்கும் அனைத்தையும் பிரதிபலிக்கிறார். ஆனால் காந்திஜியோ தனது இந்து மத நம்பிக்கையைப் பற்றிப் பெருமைப்பட்டார், ராம ராஜ்ஜியத்தை உருவாக்குவது பற்றிப் பேசினார், தனது உரைகளில் தவறாமல் இந்து அடையாளங்களைப் பயன்படுத்தினார். இன்றும்கூட, சுய-சார்புக்கான அடையாளமாக காந்தியடிகளின் சுயராஜ்ஜியக் கொள்கையை பிஜேபி சார்ந்துள்ளது.

அப்படியானால், அவரது மரபைக் கண்டு ஏன் இவ்வளவு பயப்பட வேண்டும்? அவரைக் கண்டிக்கும் நபர்களைப் போல அவர் ஒரு பாரபட்சமான மதவெறியர் இல்லை என்பதாலா?
ஆட்சியாளர்களைப் பற்றிய காந்திஜியின் பல கருத்துக்களுடன் ஒருவர் உடன்படாமல் இருக்கலாம். ஆனால், கோட்சே போன்ற ஒரு கொலையாளியை எப்படிப் போற்ற முடியும்? அரசியல் நோக்கங்களுக்காகப் பொதுமக்கள்மீது வன்முறை செலுத்துவது என்று வரையறுக்கப்படும் பயங்கரவாதத்தை இந்தியா முழுவதும் எதிர்த்துப் போராடும் இக்காலத்தில், சங்கப் பரிவாரத்தின் ஒரு பிரிவினர் இந்தியாவின் அசல் பயங்கரவாதியான ஒரு மனிதரை எப்படி மகிமைப்படுத்த முடியும்?
இந்தக் கேள்விகள் எதற்கும் எளிதில் பதில் கிடைக்காது.
ஒருவேளை, இவை அனைத்தும் ஆர்எஸ்எஸ்ஸைப் பாதுகாக்கும் விருப்பத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். ஆனால் அதுவும் அறியாமையிலிருந்து எழுகிறது. காந்திஜி படுகொலைக்குப் பிறகு சர்தார் படேல் ஆர்எஸ்எஸ்ஸுக்குத் தடை விதித்தார். ஆனால் அந்தத் தடை பின்னர் நீக்கப்பட்டது. ஆர்எஸ்எஸ்ஸின் எந்த முக்கியத் தலைவரும் படுகொலையை ஆதரித்துப் பேசவில்லை. அது சமூக ஊடகங்களில் அவதூறு செய்பவர்களுக்கும் சத்வி பிரக்யா போன்ற பைத்தியக்காரர்களுக்குமான தனி உரிமை.

காந்திஜி படுகொலை செய்யப்பட்ட நேரத்தில், கோட்சேயும் அவரது குரு சாவர்க்கரும் இந்து மகாசபையின் உறுப்பினர்களாக இருந்தனர். ஆர்எஸ்எஸ்ஸில் அல்ல. எனவே ஆர்எஸ்எஸ்-ஐப் பாதுகாக்க காந்திஜியை இழிவுபடுத்த வேண்டிய அவசியமில்லை. மேலும், அமைப்பின் மீதான தடை சங்கத்தையும் படுகொலையையும் நேரடியாகத் தொடர்புபடுத்தியது. எனவே தடைசெய்த சர்தார் படேலைத்தான் இந்துத்துவவாதிகள் தாக்க வேண்டும். ஆனால் விசித்திரமாக, படேல் இந்து வலதுசாரிகளுக்கு ஒரு ஹீரோ!
இந்த விசித்திரமான, முரண்பட்ட நிலைப்பாடுகளுக்கு விளக்கங்களைக் காணும் முயற்சியை நான் கைவிட்டுவிட்டேன். மதவெறியிலும் வெறுப்பிலும் தர்க்கத்தையும் காரணத்தையும் கண்டுபிடிக்கும் எந்தவொரு முயற்சியும் தோல்வியடையடையும்.
வெறுப்பவர்களுக்கென்று ஒரு வழி உள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக, இந்தியாவில் இன்னும் காந்திஜியின் வழி உள்ளது. அவரது வழி “மனித வரலாற்றின் போக்கை மாற்றியது.” அவர் “தைரியமும் எளிமையும் பெரிய மாற்றத்திற்கான கருவிகளாக எப்படி மாறக்கூடும்” என்பதை நிரூபித்தார்.
இதைச் சொன்னது யார் தெரியுமா? சாட்சாத் நரேந்திர மோடி. இந்த ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று இப்படிச் சொன்னார்.
இந்துத்துவ நிலைப்பாட்டில் உள்ள முரண்பாடுகளை இதிலிருந்தே அறியலாம்!
வீர் சங்வி, அச்சு, தொலைக்காட்சி ஊடகவியலாளர், விவாத நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பவர்.
