பாஜகவின் புதிய தேசியத் தலைவர் யார் என்பது குறித்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் செப்டம்பர் 5 முதல் 7-ந் தேதி வரை நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.
பாஜகவின் தேசியத் தலைவர் ஜேபி நட்டாவின் பதவிக் காலம் 2023-ல் முடிவடைந்தது. மக்களவைத் தேர்தலை முன்வைத்து அவர் பதவியில் நீடித்தார்.
தற்போது ஜேபி நட்டாவுக்கு பதில் புதிய பாஜக தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. பாஜக தலைவரை தேர்வு செய்வதில் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் எப்போதும் முக்கிய பங்கு வகிக்கும்.
இதனடிப்படையில் செப்டம்பர் 5-ந் தேதி முதல் செப்டம்பர் 7-ந் தேதி வரை ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் 3 நாட்கள் மாநாட்டில் பாஜகவின் புதிய தலைவர் யார்? என்பது தொடர்பாக விவாதிக்கப்பட இருக்கிறது.
ஜோத்பூர் மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத், பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹொசபலே, ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர்கள் மற்றும் அந்த இயக்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய பாஜக, ஏபிவிபி, பாரதீய மஸ்தூர் சங்கம், பாரதீய கிஷான் சங்கம், சுதேசி ஜாக்ரன் மஞ்ச், வனவாசி கல்யாண், சேவா சமிதி ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
பாஜக சார்பில் அக்கட்சியின் தற்போதைய தலைவர் ஜேபி நட்டா, அமைப்பு பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ், மூத்த தலைவர்கள் சுனில் பன்சால், ஷிவபிரகாஷ், சவுதான் சிங், வி.சதீஷ் உள்ளிட்டோரும் ஆர்.எஸ்.எஸ்.-ன் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். இம்மாநாட்டில் கடந்த ஓராண்டு கால இயக்க செயல்பாடு, இந்தியா மீதான அமெரிக்காவின் வரி உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. மேலும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக அந்த இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
