இன்று (டிசம்பர் 9) புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
வழக்கமாக விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி என்றால், அவரது வருகையும் பேச்சும் வைரலாகும். ஆனால் இன்றைய கூட்டத்தில், அவரது பேச்சைக் காட்டிலும் அங்கு பாதுகாப்புக்கு வந்திருந்த பெண் எஸ்.எஸ்.பி இஷா சிங்கின் பேச்சும் கோபமும் தான் இணையத்தை ஆக்கிரமித்திருக்கிறது.
புதுச்சேரியில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதில் முக்கியமானது, இந்த கூட்டத்தில் வெறும் 5000 பேர் தான் பங்கேற்க வேண்டும் என்பது.
இந்த 5000 பேரை தாண்டி, கூடுதலாக போலி க்யூஆர் கோடுடன் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி காவல்துறை எச்சரித்து, நேற்று இரவு முதல் கூட்டம் நடைபெறும் உப்பளம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டது.
இன்று காலை, 5000 பேரை தாண்டியும் விஜய்யை பார்க்க தொண்டர்களும் ரசிகர்களும் குவிந்திருந்தனர். எனவே சரியான க்யூஆர் கோடு வைத்திருப்பவர்களை மட்டுமே போலீசார் அனுமதித்துக்கொண்டிருந்தனர். அந்த இடத்தில் புதுச்சேரி எஸ்.எஸ்.பி இஷா சிங்கும் நின்று கூட்டத்தை கட்டுப்படுத்திக்கொண்டிருந்தார்.
அப்போது, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள், க்யூஅர் கோடு இல்லாதவர்களை உள்ளே அழைக்க முயற்சித்தனர்.
இதனால் கோபமான ஐபிஎஸ் இஷா சிங், அங்கே 40 பேர் செத்திருக்கிறார்கள்… இங்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லக் கூடாது என்று காட்டமாக தெரிவித்தார்.
தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த் தொண்டர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது அவரது கையில் இருந்த மைக்கையும் பிடுங்கிக் கொண்டார்.
எனவே இன்று விஜய்யின் பேச்சு மற்றும் செயல்பாடுகளை காட்டிலும் ஐபிஎஸ் இஷா சிங்கின் பேச்சும், செயல்பாடும் பேசு பொருளாகியிருக்கிறது.
யார் இந்த இஷா சிங் ஐபிஎஸ்?

புதுச்சேரியில் லஞ்ச ஒழிப்புத் துறையில் எஸ்.பியாக பணியாற்றிய இவர், இரண்டு மாதங்களுக்கு முன்புதான் எஸ்.எஸ்.பியாக பதவி உயர்வு பெற்றார்.
இவரது பூர்வீகம் மகாராஷ்டிரா. இஷா சிங்கின் தாத்தாவும், அப்பாவும் ஐபிஎஸ் அதிகாரிகளாக இருந்தவர். மூன்றாவது தலைமுறையாக இவரும் ஐபிஎஸ்-ஆக பணியாற்றி வருகிறார்.
தந்தை ஒய்.பி. சிங் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி (1985ஆவது பேட்ச் ) என்பதுடன், ஊழலுக்கு எதிராகப் போராடியவர். ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்ததற்காக ‘தண்டனை’ என்று கருதப்படும் பொறுப்புகளுக்கு மாற்றப்பட்டு வந்துள்ளார். இதனால் 2004ஆம் ஆண்டு தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்தார். இஷா சிங்கின் அம்மா அபா சிங், இந்திய தபால் துறையில் பணியாற்றியவர். தற்போது வழக்கறிஞராக உள்ளார்.
இந்நிலையில் தந்தையை பார்த்து நேர்மையாகவும் உண்மையாகவும் மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று நினைத்த இஷா சிங், பெங்களூருவில் உள்ள தேசிய சட்ட கல்லூரியில் 2018ஆம் ஆண்டு பட்டம் பெற்றார்.
அதன் பிறகு மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். குறிப்பாக பொதுநல வழக்குகளில் ஆஜராகி வாதாடி வந்தார்.

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி இறந்த3 துப்புரவுத் தொழிலாளர்களின் மனைவிகளுக்காக வாதாடி தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு பெற்றுத் தந்தது, அவரது மனிதநேய மிக்கப் பக்கத்தை வெளிப்படுத்தியது.
நீதி மற்றும் சமூக மாற்றத்தைக் கொண்டுவருவதே இவரது நோக்கம். குறிப்பாக சட்டம் மற்றும் பொதுச் சேவையின் மூலம் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பிய இஷா சிங், யுபிஎஸ்சி தேர்வு எழுத திட்டமிட்டார்.
ஒருபக்கம் மனித உரிமை வழக்குகள் ஆஜராகிக் கொண்டே இன்னொரு பக்கம் யுபிஎஸ்சி தேர்வுக்கும் தயாரானார்.
2020ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வெழுதி 191வது ரேங்க் பெற்றார். தனது இரண்டாவது முயற்சியிலேயே வெற்றி பெற்றார். அவர் AGMUT (அருணாச்சலப் பிரதேசம்-கோவா-மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பிரிவைக் குறிக்கும்) 2021 பேட்ச் அதிகாரி ஆவார்.

இரண்டு ஆண்டு பயிற்சிக்கு பிறகு 2023ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் போலீஸ் அகடெமியில் நடைபெற்ற ஐபிஎஸ் தேர்ச்சி அணிவகுப்பில் நின்ற தகுதியான 155 அதிகாரிகளில் இஷா சிங்கும் ஒருவர்.
அப்போது இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் இருந்து இஷா சிங், மணிப்பூர் சட்டக் கோப்பை (Manipur Law Trophy) மற்றும் தடயவியல் துறையில் சிறந்து விளங்கியதற்கான கோப்பைகளை (Trophy for Excellence in Forensics) பெற்றார்.
அவர் ஐபிஎஸ் அதிகாரி ஆனவுடன், மும்பையில் அவரது வீட்டுக்கு வெளியே பல ஆண்டுகளாக செருப்பு தைத்துக்கொண்டிருந்த ஒரு தொழிலாளி பூங்கொத்துடன் வந்து, ‘நீ என் கண் முன்னே ஒரு சின்னப் பெண்ணாக இருந்தாய். இப்போது நீ ஒரு பெரிய அதிகாரியாகியிருக்கிறாய்” என்று வாழ்த்தியிருக்கிறார். அப்போது அவரிடம், இனி நான் உங்களுக்காக வேலை செய்பவள்… பொது ஊழியராக உங்களுக்காக வேலை செய்வேன்’ என்று மனித நேயத்துடன் பதிலளித்திருக்கிறார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி இடமாற்ற உத்தரவுகளுக்குப் பிறகு புதுச்சேரி கிழக்கு மண்டலத்தின் எஸ்.பி.யாக இஷா சிங் நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவின் சீனியர் கண்காணிப்பாளராக (SSP – கூடுதல் எஸ்பி/கூடுதல் டிசிபிக்கு சமமான பதவி) நியமிக்கப்பட்டார்.
இந்தசூழலில் தான் இன்று விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டத்தை கட்டுப்படுத்தி, தனது அசாத்திய துணிச்சலாலும், சட்டத்தை நிலைநாட்டுவதில் காட்டும் அசைக்க முடியாத உறுதியாலும் ‘சிங்கப் பெண்’ என்று சமூக வலைத்தளங்களில் பாராட்டப்பட்டு வருகிறார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்றைய பேச்சில் புதுச்சேரி போலீஸை பார்த்து தமிழ்நாடு போலீஸ் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
