நம் அரசியல் பயணத்தை தடுக்கப் பார்க்கிறது திமுக அரசு – விஜய் குற்றச்சாட்டு

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

நம் அரசியல் பயணத்தை, மக்கள் சந்திப்பை, பிரச்சார முன்னெடுப்புகளை இந்தக் கபட நாடகத் தி.மு.க. அரசு தடுக்கப் பார்த்தாலும், முடக்க முயன்றாலும், அது அணுவளவும் நடக்காது என விஜய் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் கரூர் சம்பவம் நடந்து 72 நாட்களுக்கு பின் இன்று (டிசம்பர் 9) புதுச்சேரியில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், புதுச்சேரி அரசின் கூட்டணி ஆட்சியில் இருந்தாலும் புதுச்சேரியை ஒன்றிய அரசு எதிலும் கண்டுகொள்ளவில்லை என்பது புதுச்சேரி மக்களான உங்களுக்கு நன்றாகவே தெரியும். மாநில அந்தஸ்து கோரிக்கையை மட்டும் கண்டுகொள்ளவில்லை. இங்கே வளர்ச்சி ஏற்படுவதற்கும் துணை நிற்கவே இல்லை என கேள்விப்படுகிறோம் என்று மத்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இந்நிலையில் நம் அரசியல் பயணத்தை திமுக அரசு தடுக்கப்பார்ப்பதாக விஜய் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “என் நெஞ்சில் குடியிருக்கும் புதுச்சேரி மாநில மக்களுக்கு என் அன்பான வணக்கம்.

எல்லைகள் கடந்து, மொழியாலும் மனத்தாலும் எப்போதும் இணைந்திருக்கும் நாம், ஒரு புதிய அரசியல் வரலாற்றுக்கான அத்தியாயத்தை இன்று புதுச்சேரி மண்ணில் தொடங்கியிருக்கிறோம்.

ADVERTISEMENT

நிலப் பரப்பிலும், நிர்வாகக் கட்டமைப்பிலும் சிறிய யூனியன் பிரதேசம் என்றாலும், கட்சி பேதமின்றி, வெறுப்புணர்வின்றி எதிர்க்கட்சியான நம் நிகழ்வுக்கு மிகப் பெரிய ஒத்துழைப்பு கொடுத்து நம் பாதுகாப்பிலும் பொதுமக்கள் பாதுகாப்பிலும் ஜனநாயக அரசியல் மாண்போடு புதுச்சேரி அரசு நடந்துகொண்டிருக்கிறது.

அந்த வகையில், புதுச்சேரி அரசுக்கும் முதல்வர் அவர்களுக்கும் உள்துறை அமைச்சர், பொதுப்பணித் துறை அமைச்சர் மற்றும் புதுச்சேரி மாநிலக் காவல் துறைக்கும் நமது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

ADVERTISEMENT

எழுச்சி மிக்க நம் இளைஞர் படையினரும் கட்டுக்கோப்பும் பொறுப்பும் மிக்கவர்கள் என்பதை அவதூறாளர்களுக்குப் புரிய வைத்துள்ளார்கள்.

அதிகாரத்தை வைத்துக்கொண்டு, சட்டத்தை வளைத்து, சூழ்ச்சிகள் உட்பட என்னென்னவோ திட்டம் போட்டு நம் அரசியல் பயணத்தை, மக்கள் சந்திப்பை, பிரசார முன்னெடுப்புகளை இந்தக் கபட நாடகத் தி.மு.க. அரசு தடுக்கப் பார்த்தாலும், முடக்க முயன்றாலும், அது அணுவளவும் நடக்காது.

கழகத்தின் எதிர்பார்ப்பை, வேண்டுகோள்களை, உத்தரவுகளை மனதார மதித்து, நிகழ்வை வெகு வெற்றிகரமாக நடத்த ஒத்துழைத்த, அதற்குக் காரணமாயிருந்த தமிழகம், புதுச்சேரி மக்களுக்கும் கழகத் தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றி! வென்று காட்டுவோம்!
வாகை சூடுவோம்!” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share