விஜய்யை தவிக்க வைக்கும் ஆளுநர் : யார் இந்த அர்லேகர்?

Published On:

| By Kavi

தமிழ்நாடு பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உள்ளார். தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தனிபெரும் கட்சியாக உள்ளது.

108 இடங்களில் வென்ற போதிலும் பெரும்பான்மை கிடைக்காததால் உடனடியாக ஆட்சியமைக்க முடியாத சூழல் உள்ளது.

ADVERTISEMENT

நேற்று, இன்று என அடுத்தடுத்து ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உரிமை கோரிய போதிலும், பெரும்பான்மை ஆதரவு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று ஆளுநர் கூறியுள்ளார். இதனால் ஆட்சியமைக்க முடியாமல் தமிழக வெற்றிக் கழகம் திணறி வருகிறது.

இந்தசூழலில் ஆளுநர் அர்லேகரின் செயலுக்கு திமுக கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  ஆளுநர் பின்னால் பாஜக இருப்பதாக கூறி காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

சரி… யார் இந்த பொறுப்பு ஆளுநர் அர்லேகர்?

தமிழ்நாட்டில் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி மேற்கு வங்கத்துக்கு மாற்றப்பட்ட பிறகு கடந்த மார்ச் 12ஆம் தேதி தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்டார் அர்லேகர். இவர், கேரள ஆளுநராகவும் செயல்பட்டு வருகிறார்.

ADVERTISEMENT

விடுதலை பெற்ற பிறகு கோவாவில் இருந்த ஆர்.எஸ்.எஸ் கிளைகளில் இருந்து தொடங்கி, இன்று தென்னிந்தியாவின் மிக உயரிய அரசியல் சாசன பதவிகள்  வரை நீண்டதொரு அரசியல் பயணத்தை அர்லேகர் கடந்து வந்துள்ளார். 

கோவா மாநிலம் பனாஜியில் 1954ல் பிறந்தவர் அர்லேகர். 1961ல்  போர்ச்சுகீசியர்களிடம் இருந்து கோவா விடுதலை பெற்ற பிறகு இருந்த ஒரு குழப்பமான அரசியல் சூழலில் வளர்ந்தவர் அர்லேகர். அப்போது பாஜக பெரிய கட்சி எல்லாம் கிடையாது. 

கோவாவில் ஒரு சிறிய கிளையாக ஆர்.எஸ்.எஸ். செயல்பட்டது. அப்போது தனது சிறு வயதிலேயே ஆர்.எஸ்.எஸில் இணைந்தார் அர்லேகர். 

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1975ல் அறிவித்த எமெர்ஜென்சி காலம் அர்லேகருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இவரும் , இவருடைய தந்தையும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தோடு இணைந்து எமெர்ஜென்சிக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டதற்காக இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுகுறித்து அர்லேகர், “ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற அவரது நம்பிக்கையை சிறைவாசம் பலப்படுத்தியது” என்று அவர் கூறியிருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்காக துன்பங்களை அனுபவித்த ஒரு அமைதியான தொண்டர் என்பது அவரது அடையாளமாக மாறியது.

தொடர்ந்து 1989-ல் அர்லேகர் அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தார். அப்போது கோவாவில் பாஜக மிகவும் பலவீனமான கட்சியாகவே இருந்தது.

எப்போதும் பாஜக

அந்தச் சமயத்தில் கோவாவில் காங்கிரஸ் கட்சியே ஆதிக்கம் செலுத்தியது. அதேபோல் மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி போன்ற உள்ளூர் கட்சிகளும் அங்கு வலுவாக இருந்தன.

மனோகர் பாரிக்கர், ஸ்ரீபாத் நாயக் மற்றும் லட்சுமிகாந்த் பர்சேகர் போன்ற தலைவர்கள் வாழ்ந்த அதே காலத்தைச் சேர்ந்தவர் அர்லேகர்.

எனினும் மக்களால் விரும்பப்படும் தலைவராகவும், சிறந்த நிர்வாகியாகவும் உருவெடுத்த மனோகர் பாரிக்கரைப் போலல்லாமல், அர்லேகர் எப்போதும் கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்தும் ஒருவராகவே இருந்தார்.

பல ஆண்டுகளில் அவர் பல்வேறு முக்கியக் கட்சிப் பதவிகளை வகித்தார்; குறிப்பாக கோவா மாநில பாஜக பொதுச் செயலாளர், தெற்கு கோவா பாஜக தலைவர் மற்றும் 2003 முதல் 2007 வரை கோவா மாநில பாஜக தலைவராகவும் பணியாற்றினார்.

கோவாவின் மூத்த பத்திரிகையாளர் விட்டல்தாஸ் ஹெக்டே அர்லேகரை பற்றி கூறுகையில்,  “அர்லேகர் மென்மையான குணம் கொண்டவர், அதே சமயம் கூர்மையான அரசியல் அறிவு படைத்தவர். அவரை இரண்டு முறை பாஜக முதல்வர் பதவிக்கு பரிந்துரைத்திருக்கிறது” என்கிறார். 

முதல்முறையாக சட்டமன்றத்தில் காலடி

2002-ஆம் ஆண்டு வாஸ்கோ  தொகுதியில் இருந்து முதன்முறையாக கோவா சட்டமன்றத்திற்குள் நுழைந்தார் அர்லேகர். 2007-ஆம் ஆண்டு வரை அவர் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். பின்னர்  2012-ஆம் ஆண்டு வட கோவாவில் உள்ள பெர்னெம்  தொகுதியிலிருந்து மீண்டும் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது கோவா சட்டப்பேரவையின் சபாநாயகராகவும் செயல்பட்டார். 

அவர் சபாநாயகராக இருந்த காலத்தில், இந்தியச் சட்டமன்ற வரலாற்றில் மிகப்பெரிய சீர்திருத்தம் ஒன்றை மேற்கொண்டார். ஒட்டுமொத்தச் சட்டமன்றத்தையும் காகிதங்களே இல்லாத “காகிதமில்லாச் சட்டமன்றமாக  மாற்ற முயற்சி எடுத்தார்.

ஆரம்பத்தில் பல எம்.எல்.ஏ-க்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். சிலருக்கு டேப்லெட்டுகள்  மற்றும் டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்துவதில் சிரமம் இருந்தது. அவரது தலைமையின் கீழ் 2015-ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் “காகிதமில்லாச் சட்டமன்றமாக” கோவா உருவெடுத்தது.

இதுபற்றி பின்னாளில் அர்லேகர்,  “தொழில்நுட்பத்தைக் கொண்டு வருவதை விட, அரசியல்வாதிகளிடம் இருக்கும் காகிதப் பழக்கத்தை விடுவிப்பதுதான் மிகவும் கடினமாக இருந்தது” என்று  பொது மேடைகளில் நகைச்சுவையாக கூறியிருக்கிறார். 

2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமரான பிறகு கோவா முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கரை பாதுகாப்பு அமைச்சராக டெல்லிக்கு அழைத்துச் சென்றார். 

அந்த சமயத்தில் கோவாவின் அடுத்த முதலமைச்சர் பதவிக்கு அர்லேகரின் பெயர் பலமாக அடிபட்டது. ஆனால், பாஜக தலைமை அவருக்குப் பதில் அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த பர்சேகரைத் தேர்வு செய்தது. இதனால் கட்சிக்குள் அதிருப்தி நிலவும் என்று பலரும் எதிர்பார்த்தனர்.

பதவி முக்கியமல்ல

அப்போது அர்லேகர் தனது ஆதரவாளர்களிடம், நான் பதவியையெல்லாம் எதிர்ப்பார்க்கவில்லை. நான் சாதாரண தொண்டன் என கூறினார். இதன்மூலம் அவர், பதவி முக்கியமல்ல, கடமையைச் சரியாகச் செய்வதுதான் முக்கியம் என்ற தனது கொள்கையில் உறுதியாக இருக்கிறார் என்று அர்லேகரை கோவா அரசியல்வாதிகள் பாராட்டினர்.

அரசியலில் கட்சி மாறுவதும், தலைமைக்கு எதிராகக் கலகம் செய்வதும் சாதாரணமாக நடக்கும் ஒரு சூழலில், தலைமை எடுத்த முடிவை அர்லேகர் பொதுவெளியில் எதிர்க்கவில்லை. அவரது அமைதியான போக்கு, ஆர்.எஸ்.எஸ் – பாஜக அமைப்பிற்குள் அவருக்கு இருந்த மதிப்பையும் செல்வாக்கையும் இன்னும் அதிகமாக்கியது.

2015-ல், கோவா முதல்வர் பர்சேகர் தலைமையிலான அமைச்சரவையில் வனம், சுற்றுச்சூழல் மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சாராக பணியாற்றினார். 2017 வரை இரண்டு ஆண்டுகள் அந்த பதவியில் நீடித்தார். 

இப்படி மாநில அரசியலிலும், ஆட்சியிலும் பதவி வகித்த அர்லேகருக்கு அரசியலமைப்புச் சார்ந்த உயரிய பதவிகள் வழங்கப்பட்டன. 

இமாச்சல் முதல் தமிழ்நாடு வரை

ஜூலை 2021-ல் அவர் இமாச்சலப் பிரதேச ஆளுநராகப் பொறுப்பேற்றார். பின்னர், பிப்ரவரி 2023-ல் பீகார் மாநில ஆளுநராக மாற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து, ஜனவரி 2025-ல் கேரள மாநில ஆளுநராகப் பதவியேற்றுக்கொண்டார்.

இப்போது, 2026-ல், தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராகவும் திகழ்கிறார்.

அர்லேகர் தற்போது வரலாற்றுச் சிறப்புமிக்க அரசியல் அத்தியாயத்தின் மையப்புள்ளியாகத் திகழ்கிறார்.

விஜய்யின் அரசியல் நகர்வு வெற்றியைத் தேடித்தந்துள்ள நிலையில்,  அவர் பெரும்பான்மையுடன் வரும்போது விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்போவது ஒரு ஆடம்பரமான தேசியத் தலைவர் அல்ல, மாறாக, தனிநபரை விட அமைப்பே மேலானது என்பதைத் தனது பொதுவாழ்வில் ஆழமாக நம்பும், கோவாவைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மூத்த தலைவர்தான் இந்த அர்லேகர். 

இவரை பாஜகவினர் காவியின் காவலர் என்று அழைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share