ஸ்டாலின் சொன்னால் விஜய்க்கு ஆதரவு – ஐயூஎம்எல் திட்டவட்டம்

Published On:

| By Pandeeswari Gurusamy

IUML

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், ஆளுநர் அவர்களுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, சிபிஎம், சிபிஐ, விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளிடம் தவெக தரப்பு ஆதரவு கோரியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, தவெக நிர்வாகி அருண்ராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) தலைவர் காதர் மொகிதீனை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காதர் மொகிதீன், “தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தவெக தலைவர் விஜய்க்கு முதலமைச்சர் பதவியை வழங்க வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது. சட்டப்படி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும். ஆளுநர் காலம் கடத்துவது முறையல்ல. உடனடியாக விஜய்க்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உடன்படுகிறோம்” என்றார்.

ADVERTISEMENT

மேலும் அவர் பேசுகையில், “திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான கூட்டணியில் ஐயூஎம்எல் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கூட்டணியில் உள்ள பல கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சி மட்டும் கூட்டணியிலிருந்து விலகி, புதிதாக அமைய உள்ள ஆட்சிக்கு தங்கள் ஆதரவை அறிவித்துள்ளது. இது அவர்களின் முடிவு. எங்களுக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ஐயூஎம்எல்லைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளோம். கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்டாலின் எடுக்கும் முடிவை ஏற்போம் என்பதே எங்கள் நிலைப்பாடு. இதுவரை ஸ்டாலின் விஜய் கட்சியைப் பற்றி எந்த முடிவும் அறிவிக்கவில்லை. ஸ்டாலின்,திமுக கூட்டணி சார்பாக விஜய்க்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தால், அதை நாங்கள் நிச்சயம் செய்வோம். முடிவெடுக்கும் பொறுப்பு ஸ்டாலினிடம் உள்ளது. கூட்டணித் தலைவராக அவர் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். இது தொடர்பாக இன்று மாலை 7 மணிக்கு ஸ்டாலினை சந்திக்க உள்ளதாகவும் காதர் மொகிதீன் அறிவித்தார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share