தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் ஆட்சி அமைக்க 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலை உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தவெகவிற்கு நிபந்தனையுடன் ஆதரவு அளித்துள்ளது.
இந்நிலையில் விசிக, சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகளுக்கு ஆதரவு கோரி தவெக கடிதம் எழுதி உள்ளது. இந்நிலையில் இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலினை சிபிஐ, சிபிஎம், விசிக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் நேரில் சந்தித்து பேசினர்.
இந்நிலையில் இன்று தவெக இணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் சிபிஐ மற்றும் சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளின் அலுவலகங்களுக்கு நேரில் சென்று ஆதரவு கோரினார்.
சிபிஐ அலுவலகத்தில் செய்தியார்களிடம் பேசிய நிர்மல் குமார் விசிக கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் ஆதரவு கேட்டு உள்ளோம். ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என சொல்லியிருக்கிறார்கள். என்டிஏ கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆதரவு தரும் கட்சிகளுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு தருவோம். ஐயூஎம்எல் கட்சிக்கும் அழைப்பு விடுத்துள்ளோம்.
ஆளுநர் மாளிகையில் இருந்து தான் தவெகவுக்கு அழைப்பு வந்தது. அதேசமயம் போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் என்று விஜய் தான் தெரிவித்தார். ஆளுநர் அரசமைப்பு சட்டப்படி நடப்பார் என்று நம்புகிறோம், இல்லை எனில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பின்னர் சிபிஎம் அலுவலகத்திற்கு நேரில் சென்ற சிடிஆர் நிர்மல் குமார் பெ.சண்முகம் உள்ளிட்ட அக்கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.
