60 ஆண்டு காலமாக திமுக கூட்டணியில் இருந்த ஐயூஎம்எல் இன்று (ஜூன் 20) அக்கூட்டணியில் இருந்து விலகியதாக அறிவித்தது.
இதுதொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,
“யார் நண்பர்கள், யார் பகைவர்கள் என்பதை இந்த தேர்தல் அடையாளம் காட்டிவிட்டது. நல்ல பாடமாகிவிட்டது. மிக விரைவில் மாற்றம் வரும். வருகிறபோது நாங்கள் யார் என்பதை காட்டுவோம். இதுபோல சந்தர்ப்பவாதம் செய்பவர்களுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்.
ஒரு கட்சியின் பெயரைச் சொல்லி, ஒரு கட்சியினுடைய, தொண்டனுடைய உழைப்பில் வெற்றி பெற்றுவிட்டு, 10 நாளுக்குள்ளாகவே மாறிப்போவது, பேச்சை மாற்றுவது என்பது எவ்வளவு வித்தியாசமான ஒன்று, கேவலமான ஒன்று என்பதை அவர்கள் அறிவார்களோ இல்லையோ, தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள்.
இப்போது அதிமுகவில் இருந்து செல்பவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்கிறார்கள் இல்லையா… அந்த முறையை இவர்களும் பின்பற்றினார்களா.
இந்தத் தேர்தலே ஒரு வித்தியாசமான தேர்தல். எந்த ஊடகம், எந்தப் பத்திரிகையாளர்கள் என யாருமே விஜய் வருவார் என்று சொல்லவில்லை. எப்படியோ வந்துவிட்டார். இப்படி ஒரு அதிசயம் நடந்துவிட்டது. அந்த அதிசயத்துக்குப் பலவீனமானவர்கள் பலியாகிவிட்டார்கள். உறுதியானவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்” என்றார்.
அவரிடம் நேற்று சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம். திமுகவும் அதிமுகவும் கூட்டணி அமைக்க ஒரு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அது சந்தர்ப்பவாதம். திமுகவோ அல்லது அதிமுகவோ அல்லாத மற்றொரு கட்சி ஆட்சி அமைக்கிறது இந்த இரண்டு கட்சிக்கும் விருப்பம் இல்லை’ என்பதை அவர் வெளிப்படுத்தி இருக்கிறாரே என்ற கேள்விக்கு.
”அதிமுகவோடு நாங்கள் ஒன்றும் பேசவில்லை, கூட்டணி வைக்கவில்லை. ஆனால் அதைப்பற்றி அவர்கள் பேசுவது தவறு. ஏற்கனவே அந்த கட்சியோடு பலமுறை கூட்டணி வைத்து, ராஜ்யசபா எம்பி பதவி வாங்கி எல்லாம் போயிருக்கிறார்கள். அதிமுக தீண்டத்தகாத ஒரு கட்சி அல்ல. பாஜக ஒரு கொள்கை ரீதியான எதிரி என்று சொல்கிறார்கள். அந்த மாதிரி கூட அதிமுகவை கடந்த காலத்தில் சிபிஐ சொல்லவில்லை. அவர்களோடு கூட்டணி வைத்தார்கள், ஜெயலலிதாவோடு கூட்டணி வைத்தவர்கள். இப்போது தவெகவோடு போய்விட்டார்கள். அதற்கு இப்படி காரணம் சொல்கிறார்கள்.
அதிமுகவோடு கூட்டணியே வைக்காதது போல இவர்கள் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.
அப்படியே நாங்கள் அதிமுகவோடு கூட்டணி வைத்தாலும் அதில் என்ன உலக மகா தப்பு? சிபிஐ, சிபிஎம் இரண்டும் 1964-ல் உடைந்தது . இப்போது இரண்டு பேரும் ஒன்றாக ஒத்த கருத்தோடு போகவில்லையா?
ஆக, எங்களை விட்டு அவர்கள் பிரிந்து போய் 54 வருஷம் ஆகிவிட்டது. அதுக்காக நாங்கள் கூட்டணி வைக்கிறோம் என்று சொல்லல. அப்படி பேசினாலும் அதில் ஒன்றும் தப்பு இல்லை. .
ஆக, நானே பலமுறை சொல்லி இருக்கிறேன்… அதிமுக என்பது எங்களுக்கு பங்காளி மாதிரி, எங்ககிட்ட இருந்து போனவங்க தானே? நாங்கள் அப்படி ஒன்றும் கூட்டணியும் பேசவில்லை. அதேசமயம் இரண்டு பேரையும் சேர்த்து ஒரே இடத்தில் உட்கார வைத்துவிட்டார்கள். இப்போது சட்டப்பேரவையில் ஒரே வரிசையில் தானே உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்.
ஆக, இதை பார்க்கிற போது, தொண்டர்கள் எல்லாமே இரண்டு பேருக்குள்ள இணைந்து விட்டார்கள் போலத்தான் தெரிகிறது. அந்த இணைப்புக்குக் காரணம் இவர்கள் தான்” என்றார்.
