கும்பகோணம் தீ விபத்தில் உயிர் தப்பிய சிறுமி ஜெனிபர், இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு எழுதி துணை ஆட்சியராகியுள்ளார்.
இந்தநிலையில் தனது வெற்றி குறித்து பேசிய ஜெனிபர், ”ஆரம்பக் காலத்தில் பொருளாதார நெருக்கடி காரணமாக, போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களுக்கு செல்ல முடியவில்லை. எங்கள் வீட்டில் கஷ்டப்பட்டோம்.
அப்போது, தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் கல்வி உதவித்தொகை கிடைத்தது. அதன் மூலம் அடையாறில் எட்டு மாதங்கள் தங்கிப் பயிற்சி பெற்றேன். அதன் பிறகுதான் இந்த குரூப் 1 தேர்வில் தேர்ச்சியடைந்தேன்” என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பான வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், ” நீங்கள் ’நான்_முதல்வன்’ சோசியல் மீடியா பக்கங்களின் பெயரை மாற்றலாம். அதில் இருந்த பதிவுகளை டெலிட் செய்யலாம்.
ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து டெலிட் செய்யவே முடியாது. அவை அவர்களின் இதயத்தில் ஆழமாக பதிவு செய்யப்பட்டுவிட்டன.
கடந்த 5 ஆண்டுகளாக, எனது ஆட்சிக்காலத்தில் “படிங்க, படிங்க, படிங்க” என்று தொடர்ந்து சொல்லி வந்தேன். அப்படி படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவத்தான் நான்_முதல்வன் எனும் என் கனவுத் திட்டத்தைத் தொடங்கினேன். அதனை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும்” என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த திமுக அரசால் தொடங்கப்பட்ட, நான் முதல்வன் திட்டத்தின் பெயர் தற்போது ‘திறன் தமிழ்நாடு’ (TN Skill) என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்ததிட்டம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட பழைய பதிவுகள் மற்றும் வீடியோக்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
மே 15ம் தேதியிலிருந்து போடப்பட்ட பதிவுகள் மட்டுமே உள்ளன.
இந்தசூழலில் தான் ஜெனிபர் வீடியோவை பகிர்ந்து முன்னாள் முதல்வர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
