“35 வருட கனவு… நான் கடவுளின் குழந்தை!” – ‘மகுடம்’ ரிலீஸான நாளில் விஷால் உருக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

vishal

‘மகுடம்’ திரைப்படத்தின் மூலம் அதிகாரப்பூர்வ இயக்குநராக எனது 35 ஆண்டு கால கனவு நனவாகியிருக்கிறது என நடிகர் விஷால் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

நடிகரும் தயாரிப்பாளருமான விஷால், இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள முதல் திரைப்படம் ‘மகுடம்’. இத்திரைப்படம் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 99-வது தயாரிப்பாகும். இந்நிறுவனம் அறிமுகப்படுத்தும் 45-வது புதுமுக இயக்குநர் விஷால் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

விஷால் இயக்கி நடித்துள்ள இத்திரைப்படத்தில் அஞ்சலி, துஷாரா விஜயன், ஜான் விஜய், ஜெயப்பிரகாஷ், அஜய், வம்சி கிருஷ்ணா, அபுசலீம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர்.பி. சௌத்ரி தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்; என்.பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்துள்ளார். இத்திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து நடிகரும், புது முக இயக்குநருமான விஷால் தனது எக்ஸ் பதிவில், “நான் விட்டுக்கொடுக்க மாட்டேன். ஆம், நான் ஒருபோதும் விட்டுக்கொடுக்கவே மாட்டேன். ஒருநாளும் மாட்டேன்.

ADVERTISEMENT

நான் கடவுளின் குழந்தை

சவால்கள் அதிகமாக அதிகமாக, நான் இன்னும் உயர்ந்து நிற்பேன். ஏனெனில், தயக்கமோ வெட்கமோ இன்றி என்னால் கண்ணாடியைப் பார்த்து நிற்க முடியும்! நான் எனது வேலையை மனவுறுதியோடும், விடாமுயற்சியோடும், மனபலத்தோடும் செய்கிறேன்.

ADVERTISEMENT

திரைத்துறையிலும் இந்தச் சமூகத்திலும் இன்று நான் இந்த இடத்தில் இருப்பதற்குக் காரணமான, நான் கடவுளுக்குச் சமமாகக் கருதும் உலகம் முழுவதிலும் உள்ள எனது அன்புக்குரிய ரசிகர்களுக்காக, ஒரு நடிகனாக எனது கடமையைச் செய்ய எப்போதும் கூடுதல் முயற்சியை எடுப்பேன்.

இன்று உங்கள் அனைவரின் முன்னும் என்னைக் கொண்டுவந்து நிறுத்துகிறேன். ‘மகுடம்’ திரைப்படத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக இயக்குநராக எனது 35 கால கனவு நனவாகியிருக்கிறது.

எனது வேலையைச் செய்து முடித்துவிட்டேன். கடந்த 14 மாதங்களாக நாங்கள் உழைத்ததை உங்களுக்குக் காட்டுவதற்காகக் காத்திருக்கிறேன்.

உலகளாவிய திரையரங்க வெளியீட்டின் மூலம் உங்களிடம் கொண்டு வந்து சேர்க்க காத்திருக்கிறேன்.

எதையும் எதிர்கொள்ளத் தயார். காட்சிகள் தொடங்கட்டும். கடவுள் ஆசீர்வதிக்கட்டும்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share