‘லார் கிப்பன்’ குரங்கு வீடியோவால் சிக்கலில் விக்ரம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

அழிவின் விளிம்பில் உள்ள அரிய வகை ‘லார் கிப்பன்’ குரங்கு குட்டியுடன் இருக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில், இது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நடிகர் விக்ரம், ‘லார் கிப்பன்’ (Lar Gibbon) என்ற அரிய வகை மனித குரங்கு குட்டியுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவலாகப் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அந்த குரங்கு குட்டி ஈரோட்டில் உள்ள ஒரு பண்ணையில் இருந்து வாங்கப்பட்டது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, ஈரோடு பெருந்துறையில் செயல்பட்டு வரும் அந்தப் பண்ணையில் வனத்துறை அதிகாரிகள் அதிரடி விசாரணையைத் தொடங்கினர். அங்கு பராமரிக்கப்பட்டு வந்த மற்றொரு லார் கிப்பன் குரங்கு உயிரிழந்த தகவலை வனத்துறைக்கு தெரிவிக்காமல் மறைத்ததும் விசாரணையில் அம்பலமானது. மேலும், பண்ணையின் உரிமையாளரான கேசவநாதன் என்பவர், கடந்த ஆண்டு ஜூன் மாதம் மணிப்பூரில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்த அரிய வகை குரங்குகளை வளர்ப்பதற்கான உரிய சட்டப்பூர்வ ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஈரோடு பண்ணையிலிருந்து விலங்குகளைப் பறிமுதல் செய்ய நோட்டீஸ் அனுப்பிய வனத்துறை, நடிகர் விக்ரம் தரப்பிற்கும் உடனடியாகச் சம்மன் அனுப்பியுள்ளது.

ADVERTISEMENT

நேற்று படப்பிடிப்பு தளத்தில் இருந்த நடிகர் விக்ரமிடம் வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று இந்த நோட்டீஸை வழங்கினர். அதில், குரங்கு வாங்கியதற்கான ஆவணங்கள் மற்றும் உரிமையாளரின் சான்றிதழ்களுடன் மூன்று நாட்களுக்குள் சென்னை வனத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட கெடுவுக்குள் நேரில் வந்து உரிய ஆவணங்களை ஒப்படைத்து விளக்கம் அளிக்கத் தவறினால், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தொடர் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share