விருதுநகர் கல்குவாரி வெடி விபத்து – உரிமையாளர்கள் 2 பேர் கைது!

Published On:

| By indhu

விருதுநகர் உப்பிலிகுண்டு கிராமத்தில் நிகழ்ந்த கல்குவாரி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உரிமையாளர்கள் 2 பேரை காவல்துறையினர் இன்று (மே 1) கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பாறை உடைக்கும் பணிக்காக வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்களை தவறாக கையாண்டதாலேயே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில், வெடி விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

இந்த பயங்கர வெடி விபத்தால் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை அதன் அதிர்வுகள் ஏற்பட்டதாக மக்கள் பதற்றமாக தெரிவித்துள்ளனர். 1 கிலோ மீட்டர் தாண்டி மனித உடலானது சிதறிக்கிடந்த நிலையில், தற்போது வரை 3 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்ககூடும் என்று கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் வெடிக்காத வெடிப்பொருட்கள் சிதறி இருக்க வாய்ப்புள்ளதாகவும், அதனை ஆய்வு செய்து செயலிழக்க செய்த பின்னரே ஆய்வு செய்யப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது அங்கிருந்த வெடிக்காத 1,200 கிலோ வெடிப்பொருட்கள் காவல்துறையினரால் கைபற்றப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், கல்குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஏற்கெனவே நடந்த அசம்பாவித சம்பவங்களின்போது குவாரி சில தினங்களுக்கு மூடப்பட்டு, பின் திறக்கப்பட்டுவிடும் எனக் கூறும் காரியாப்பட்டி கிராம மக்கள், இம்முறை நிரந்தரமாக குவாரியை மூடவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT

மக்களின் போராட்டத்தை அடுத்து, குவாரி உரிமையாளர்களான சேது மற்றும் ஸ்ரீ ராம் ஆகிய இருவரை தனிப்படை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

மேலும் தலைமறைவாக மூன்று மேலாளர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த கோர சம்பவத்தில் முறையான விசாரணை நடத்த வேண்டுமென அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “விருதுநகர் மாவட்டம் டி.கடம்பன்குளத்தில் இயங்கி வந்த தனியார் வெடிபொருள் சேமிப்புக் கிட்டங்கில் இன்று காலை ஏற்பட்ட எதிர்பாராத வெடி விபத்தில், அங்குப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இந்த வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டவுடன் அரசின் நிவாரண உதவி விரைந்து வழங்கப்படும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“நடராஜனுக்கு டி20 உலககோப்பையில் இடமில்லையா?” – சரத்குமார் கேள்வி!

பிரஜ்வல் ரேவண்ணா வழக்கு: மோடிக்கு சித்தராமையா கடிதம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share