ADVERTISEMENT

தேர்தல் களத்தில் கல்வித் தலங்களின் பாதுகாப்புக்காக ஓர் அறைகூவல்!

Published On:

| By Minnambalam Desk

அ. குமரேசன்

தேர்தல் களத்தில் ஒரு அணியைச் சேர்ந்த கட்சிகளும் தலைவர்களும் எதிரணியினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறுவதும், அவர்களை மக்கள் நிராகரிக்கக் கேட்டுக்கொள்வதும் வழக்கமானதுதான்.

கல்வி உரிமைக்காகச் செயல்பட்டுவரும் அமைப்பு ஒன்று, ஒன்றிய ஆட்சியாளர்கள் மீது ஒரு கடுமையான குற்றச்சாட்டை முன்வைக்கிறது. அந்த அடிப்படையில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாஜக–வையும், அதனோடு கூட்டணி அமைத்துள்ள அதிமுக உள்ளிட்ட கட்சிகளையும் மக்கள் புறக்கணிக்க அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

ADVERTISEMENT

வளர்ந்த இந்தியாவில் கல்வியை அரசாங்கம் தனது பொறுப்பில் வழங்க வேண்டும் என்று கூறும் அரசமைப்பு சாசனத்துக்கு நேரெதிராக ஒட்டுமொத்த உயர் கல்வியையும் தனியார் வணிகச் சந்தையிடம் ஒப்படைக்க வழி செய்யும் சட்ட முன்வரைவின் மூலம் எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் எதிர்காலக் கனவை பாஜக பறிக்கிறது என்பதே குற்றச்சாட்டு. இதை முன்வைப்பது பொதுப் பள்ளிக்கான மாநில மேடை (எஸ்பிசிஎஸ்எஸ்).

அரசமைப்பு சாசன விழுமியங்களின் அடிப்படையிலும், அனைவருக்கும் கல்வி ஓர் அடிப்படை உரிமை என்ற கோட்பாட்டோடும் இயங்கிவருவது இந்த அமைப்பு. கடந்த காலங்களில் தேசிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு, இந்தித் திணிப்பு, கல்வி வளாகங்களில் சாதியம், வணிகமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்து களமாடி வந்திருக்கிறது. வாக்குச் சாவடிக்குச் செல்வதற்கு முன் வாக்காளர்கள் மனதில் ஆழமாகக் கொள்ள வேண்டிய ஒன்றாக மோடி அரசின் புதிய உயர்கல்விச் சட்ட முன்வரைவைச் சுட்டிக்காட்டுகிறது.

ADVERTISEMENT
சாசன மீறல்

தற்போது நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் ஆய்வில் இருக்கும், சமஸ்கிருதப் பெயருடனான “விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்தான்” (விபிஎஸ்ஏ–2025) (VBSA 2025) சட்டமுன்வரைவு, சட்டமாகுமானால் மாநில அரசுகளின் நிதியில் இயங்கும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் முதலியவற்றைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை ஒட்டுமொத்தமாக ஒன்றிய அரசாங்கமே எடுத்துக்கொள்ள வழி செய்யப்பட்டிருக்கிறது. இதை மாநிலங்களின் பொறுப்பாக வரையறுத்துள்ள அரசமைப்பு சாசன வழிகாட்டலை அப்பட்டமாக மீறுகிற செயல் இது என்கிறது பொதுப்பள்ளி மேடை.

இந்த அமைப்பின் சார்பில் தமிழக மக்களுக்கான வேண்டுகோள் அறிக்கை வெள்ளியன்று (ஏப்.17) செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இதன் தலைவர் முனைவர் பி. ரத்தினசபாபதி வெளியிட, பொதுச்செயலாளர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கத்தின் தலைவர் மருத்துவர் சீ.ச. ரெக்ஸ் சற்குணம், தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச்சங்கத் தலைவர் செ. அருமைநாதன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

ADVERTISEMENT

இந்த முன்வரைவு சட்டமானால், தமிழ்நாடு அரசின் 21 பல்கலைக்கழகங்கள் உட்பட, மாநில அரசுக் கல்லூரிகள் அனைத்தையும் ஒழுங்குப்படுத்தும், கலைக்கும் அதிகாரம் ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிற்கு செல்லும். மாநில அரசிற்கு எந்த அதிகாரமும் இருக்காது‌. அதிகாரத்தை மொத்தமாகத் தன்வசம் எடுத்துக் கொள்ளும் ஒன்றிய அரசு, நிதி வழங்கல் குறித்து சட்ட முன்வரைவில் எதையும் குறிப்பிடவில்லை. மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை, ஒன்றிய அரசும் நிதி தராது என்றால், அந்தக் கல்வி நிறுவனங்கள் எப்படி இயங்கும்? ஆசிரியர்களுக்கு யார் ஊதியம் தருவார்கள் என்று அறிக்கை கேட்கிறது.

சமூக ஆரோக்கியக் கேடு

“நிதிப் பிரச்சினையைத் தாண்டி, சமூக அக்கறையே இல்லாத தலைமுறைகளை உருவாக்குவதே இதன் நோக்கமாக இருக்கிறது. ஆசிரியர்களும் மாணவர்களும் பாடப் புத்தகங்களுக்கு அப்பால் சமூக நிலைமைகளையோ அரசாங்கக் கொள்கைகளையோ விமர்சிக்கக் கூடாது. ஜனநாயகத்திற்கே அடிப்படையான இந்த விமர்சன உரிமையும், அந்தத் திறமையை வளர்த்துக்கொள்ளும் வளாகச் சூழலும் மறுக்கப்படுவது ஆரோக்கியம் குன்றிய சமூக வளர்ச்சிக்கே இட்டுச்செல்லும்,” என்றார் பிரின்ஸ்.

“நிதி இல்லை என்ற நிலையில் மாணவர்களிடம் கட்டணம் பெற்றே அனைத்துப் பாடப் பிரிவுகளும் நடத்தப்படும். பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., போன்ற பாடப் பிரிவுகளுக்கு ஆண்டிற்கு ரூபாய் ஒரு லட்சத்துக்கும் அதிகமாகக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகும். கட்டணம் செலுத்திப் படிக்கும் சுயச்சார்பு நிதி ஏற்பாட்டில் சமூகநீதிக்கான இட ஒதுக்கீடு என்னவாகும்,” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

“கற்றறிந்த ஆசிரியர்கள் மாணவர்கள் விவாதிக்கலாம், உயர்கல்வி பெறும் வாய்ப்பற்றிருக்கும் பெரும் பகுதி மக்களுக்கு எப்படி ஒரு கொள்கையின் சூட்சுமம், சிக்கல் புரியும்? யாருமே அரசை எந்த கேள்வியும் கேட்கக் கூடாது என்பதுதான் இதன் உண்மை நோக்கம். கேள்வி எழுப்ப வாய்ப்பில்லை என்றால் மக்களாட்சி பலவீனப்படும், அதன் விளைவு தனிமனித சுதந்திரத்தை இழப்போம். வாக்காளராக இருக்கலாம், இறையாண்மை கொண்ட இந்தியராக இருக்க இயலாது,” என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

கல்விக்கு அப்பால்…

அறிக்கை ஒரு வரலாற்றுப் பக்கத்தையும் காட்டுகிறது. “ஐக்கிய நாடுகள் சபை, இந்திய விடுதலைக்கு முன் 1945இல் அமைக்கப்பட்டது. ஆயினும் அப்போதே அதன் அமைப்புக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு, அதன் நிறுவன உறுப்பினர் என்ற தகுதியை இந்தியா பெற்றது. தனது விடுதலைக்குப் போராடிய காலத்திலேயே, உலகின் பல்வேறு பகுதிகளில் விடுதலைக்காகப் போராடிய மக்களுக்கு ஆதரவாக இந்தியா நின்றது.

எந்த நாட்டுடனும் இராணுவ ரீதியான உறவு வைத்துக் கொள்ளாமல், போர் இல்லாத அமைதியான உலகிற்கு பாடுபடுவது எனும் அயல் உறவு கொள்கையை வகுத்துக்கொண்டதனாலேயே இந்தியா உலக அரங்கில் பெரும் புகழுடன் விளங்கியது‌. விடுதலையடைந்த இந்தியாவின் அயலுறவு கொள்கையான பஞ்ச சீலக் கொள்கையை ஐ.நா. ஏற்றுக்கொண்டது. அணிசேரா நாடுகள் அமைப்பு உருவாவதில் இந்தியா முக்கிய பங்கு வகித்தது. பின்னர் அதன் தலைமைப் பொறுப்பை ஏற்று வழிநடத்திய பெருமையும் இந்தியாவுக்கு உண்டு.

“இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக் கொள்கையை நிராகரித்து, பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நின்றது‌, நிறவெறி அரசுக்கு எதிரான தென் ஆப்பிரிக்கா மக்களின் போராட்டத்தை ஆதரித்தது, பல நாடுகளுக்கிடையே நடந்த போர்களை நிறுத்த ஐ.நா. அமைதிப்படையில் மிக முக்கிய பங்கை ஆற்றியது உள்ளிட்ட அணுகுமுறைகளே இந்தியாவுக்கு இந்தப் பெருமைகளைப் பெற்றுத் தந்தன.

“இவ்வளவு சிறப்பு மிக்க இந்தியாவின் இன்றைய நிலை மிகவும் கவலை தருவதாக அமைந்துள்ளது. 2025ஆம் ஆண்டில் அணு ஆயுதப் போரிலிருந்து தான்தான் இந்தியாவை காப்பாற்றியதாக அமெரிக்க அதிபர் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். சமீபத்தில், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்பாக, இந்திய நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல், இந்திய மக்களுக்குத் தெரிவிக்காமல், “இந்தியா உங்களுடன் நிற்கிறது” என்று இஸ்ரேல் பிரதமரை நேரில் சந்தித்து இந்திய பிரதமர் கூறி வந்துள்ளார். கம்பீரமான வெளியுறவு கொள்கையைக் கைவிட்டு, வல்லரசு நாடுகளின் ஆதிக்கப் போரை எதிர்க்காமல், மௌனம் சாதிக்கும் நிலையில் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக வைத்துள்ளது. உலக அரங்கில் இந்தியா வகித்து வந்த இடத்தைப் பிடிக்க இன்று பாகிஸ்தானுக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளது பாஜக‌,” எனக்கூறும் அறிக்கையின் கவலை நம்மையும் தொற்றிக்கொள்ளத்தான் செய்கிறது.

கார்த்திகை தீபமும் தைப்பூசமும்

பாஜக தனது தேர்தல் அறிக்கையில் உண்மைக்குப் புறம்பான செய்தியை முன்வைத்துத் தவறான வாக்குறுதியை தந்துள்ளது என்றும் அமைப்பின் தலைவர்கள் விமர்சித்தார்கள்.

“காலம்காலமாக திருப்பரங்குன்றம் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் வழக்கமான உற்சாகத்தோடு திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட்டது. இந்த உண்மையை மறைத்து, ஏதோ தீபம் ஏற்றுவது தடைப்பட்டுவிட்டது போலவும், தீபம் ஏற்ற தாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றும் பாஜக தனது தேர்தல் அறிக்கையில் கூறுவது உண்மைக்கு புறம்பான செய்தி‌.

திடீரென ஒரு கும்பல், சம்பந்தமில்லாத தூணில் தீபம் ஏற்றப் போவதாக மிரட்டி, தேவையில்லாத கலவரத்தை ஏற்படுத்தி, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்க முயற்சி செய்தது. கோவில் வழிபாட்டு முறையைப் பின்பற்றாமல், புதிய நடைமுறையைப் புகுத்திக் கலவர பூமியாக திருப்பரங்குன்றத்தை மாற்றத் துடிக்கும் கும்பலுக்கு ஆதரவாக பாஜக தேர்தல் வாக்குறுதி தந்துள்ளது‌.

அதே போல் தைப்பூசம் தமிழ்நாடு முழுவதும் மக்களால் மகிழ்ச்சியுடன் அவரவர் பழக்கவழக்கங்களின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தில் சண்முகக் கவசம் பாடி முருகனை வழிபடுவது, சஷ்டிக் கவசம் பாடி வழிபடுவது, உருவம் இல்லாமல், ஒளியை வழிபடும் வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்க நெறியைப் பின்பற்றுவது ஆகிய மூன்று வழக்கங்களும் இங்குண்டு.

இந்நிலையில் பொதுமைப்படுத்தி மாநில அளவில் அரசு சார்பில் தைப்பூச விழா என்கிறது பாஜக. இந்த மூன்றில் எந்த வழிபாட்டைப் பின்பற்றுவது என்ற சச்சரவு ஏற்பட்டு, நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழல் உருவாக வேண்டுமா? ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் எதை விரும்புகிறார்களோ அதையே மக்கள் வழிபாட்டு முறையாக பின்பற்ற வேண்டிய நிர்பந்தத்தை உருவாக்கும் சதித் திட்டமே இது. மன்னர் கால நடைமுறைக்கு மாற்றும் இந்த வாக்குறுதி இந்திய அரசமைப்பு சாசனத்திற்கும், தமிழரின் ஆன்மீக நெறிக்கும் எதிரானது.

அமைதியாக நடக்கும் தைப்பூச விழா, பாஜகவின் குறுகிய அரசியலுக்கு பலியாகிவிடக் கூடாது. முருக பக்தர்களுக்கிடையே பகையை மூட்டும் பாஜகவின் சூழ்ச்சியை மக்கள் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும்,” என்று அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சிறுமைப்படுத்தும் குற்றப்புகார்

தமிழ்நாடு குற்றங்களின் தலைநகரமாக விளங்குவதாக பாஜக தேர்தல் அறிக்கை கூறுகிறது. பகிரங்கமாக இந்த மாநிலத்தைச் சிறுமைப்படுத்துவதோடு, குற்றங்கள் நடப்பதை அனுமதிக்க விரும்பாத தமிழ்நாடு மக்களை இழிவுப்படுத்தும் வகையில் பாஜக தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது. திரு. நரேந்திர மோடி அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது இந்தியாவில் குற்றங்களின் தலைநகரமாக குஜராத் விளங்கியது என்பதே உண்மை.

குற்றங்களைத் தடுப்பதிலும், உடனே விசாரணை மேற்கொள்வதிலும் நிர்வாகத் திறன் கொண்ட மாநிலமாகவும், பல்வேறு மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாடு மிகவும் பாதுகாப்பான மாநிலமாகவும் திகழ்கிறது. 2002 இல் குஜராத்தில் பாஜக ஆண்டபோது நடந்த வன்முறையை, 2026 ல் தமிழ்நாட்டில் அரங்கேற்றத் துடிக்கிறது பாஜக. விழிப்புடன் இருந்து தமிழ்நாடு மாநிலத்தைக் காக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கு உள்ளது என்கிறது எஸ்பிசிஎஸ்எஸ் அறிக்கை.

கட்சிகளின் அறிக்கைகளை ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டிருக்கும் தமிழக மக்கள் இந்த அறிக்கையையும் கணக்கில் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share