திமுகவின் (DMK) கூட்டணி கட்சிகளின் தயவில்தான் முதல்வர் விஜய் (Vijay) தலைமையிலான தவெக ஆட்சி நடைபெற்று வருகிறது என திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் (MK Stalin) தெரிவித்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இங்கே நம்முடைய கஜா என்கிற கஜேந்திரன் தலைமையிலே வந்து சேர்ந்திருக்கக்கூடிய நீங்களெல்லாம் வந்திருப்பதைப் பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன். பெருமைப்படுகிறேன். ஆகவே, நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. இப்போ ஆட்சி நடப்பதே நம்முடைய தயவில்தான் நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் மறந்துவிடக்கூடாது.
ஏனென்றால், நாம் வெற்றி பெற வேண்டும், திமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும், எதிர்க்கட்சிகள் எல்லாம் தோற்க வேண்டும் என்ற நிலையிலே தான் நாம் தேர்தல் களத்தை சந்தித்தோம். ஆக, நம்முடைய கூட்டணியில் இருந்த கட்சிகளுடைய தயவோடு தான் இன்றைக்கு இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்று கருதி நம்மோடு கூட்டணியில் இருந்த கட்சிகளின் தயவில்தான் இன்றைக்கு திமுக நடந்து கொண்டிருக்கிறது.
அந்தக் கட்சியினுடைய தலைவர்களே, அந்த கூட்டணி கட்சியில் இருக்கக்கூடிய தலைவர்கள் பல இடங்களில் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார்கள், நாங்கள் வருகிறபோது எங்கள் கூட்டணி கட்சியினுடைய தலைவர், திமுக தலைவர், மு.க. ஸ்டாலினிடத்திலே சொல்லிவிட்டுத் தான் வந்திருக்கிறோம் என்று சொன்னார்கள். அவர்கள் சொல்லிவிட்டுச் செல்கிற நேரத்தில் நான் சொன்னேன், ‘நீங்கள் செல்லுங்கள், உங்களுடைய விருப்பம், உங்களுக்கு இருக்கக்கூடிய ஜனநாயகம், நான் தடுக்க மாட்டேன்.’ நாட்டிலே ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக்கூடாது, அதன் மூலமாக பிஜேபி ஆட்சி தமிழ்நாட்டிற்கு வந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில்தான் அவர்களை வழி அனுப்பி வைத்தேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
