தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று (டிசம்பர் 28) காலை காலமானார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்தார். சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் சிகிச்சைக்காகச் சென்று வந்தார்.
2019 ஆம் ஆண்டு அமெரிக்காவில் அவருக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு சென்னை திரும்பிய அவர் மியாட் மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த நவம்பர் 18ஆம் தேதி காய்ச்சல், சளி, இருமல் காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 20 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று கடந்த டிசம்பர் 11ஆம் தேதி வீடு திரும்பிய நிலையில் மீண்டும் உடல் நலக் குறைவு ஏற்பட்டு நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதனையில் விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு கோவிட் உறுதிப்படுத்தப்பட்டதாக தகவல் அறிந்ததும் இன்று காலை அவரது மனைவியும் தேமுதிகவின் பொதுச் செயலாளருமான பிரேமலதா மருத்துவமனைக்கு விரைந்தார்.

விஜயகாந்துக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் செயற்கை சுவாசம், அதாவது வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில், தேமுதிக தொண்டர்கள் மியாட் மருத்துவமனைக்கும் விஜயகாந்த் வீட்டுக்கும் வரத் தொடங்கினர்.
இந்நிலையில் இன்று காலை விஜயகாந்த் காலமானார். ஆம்புலன்ஸ் மூலம் விஜயகாந்த் உடல் அவரது வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
சபரிமலை: மண்டல பூஜை நிறைவு – 30ம் தேதி மீண்டும் நடை திறப்பு!
