விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கை… தேர்தல் ஆணையத்தில் விஜயபிரபாகரன் மனு!

Published On:

| By Selvam

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார். அவர் 3,77,721 வாக்குகள் பெற்ற நிலையில், திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரிடம் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

இந்தநிலையில், விருதுநகர் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் இன்று (ஜூன் 12) புகார் மனு அளித்தார்.

ADVERTISEMENT

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபிரபாகரன், “விருதுநகர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போது குளறுபடி நடந்ததால், மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் புகாரளித்துள்ளேன்.

அதற்கு தேவையான அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளோம். இவை அனைத்தையும் ஆராய்ந்து ஒரு வாரத்தில் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவித்துள்ளனர். நிச்சயமாக நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

ADVERTISEMENT

13-ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென 19-ஆவது சுற்றுக்கு தாவினார்கள். உணவு இடைவேளையின் போது, அனைவரும் வெளியே சென்ற நிலையில் 5 சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்திருந்தது.

உணவு இடைவேளை நேரத்தை மூன்று மணி நேரமாக நீட்டித்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தபால் வாக்குகளை காலையிலேயே ஓப்பன் செய்து இரவில் அனைவரையும் அனுப்பி விட்டு தான் வாக்கு எண்ணிக்கை நடந்தது.

ADVERTISEMENT

இந்திய தேர்தல் ஆணையத்தில் நியாயம் கிடைக்காத பட்சத்தில், நீதிமன்றத்தை நாடுவோம். வாக்கு எண்ணிக்கை நடந்தபோது தேர்தல் நடத்தும் அலுவலரிடம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தோம்.

அப்போது கேட்கும் நிலையில் அலுவலர்கள் இல்லை. மேலிடத்தில் இருந்து எனக்கு பிரஷர் வருகிறது. அதனால் போனை ஆஃப் செய்கிறேன் என்று தேர்தல் நடத்தும் அலுவலர் சொல்லியிருக்கிறார்.

இது எனக்கு முதல் தேர்தல். சரியான சப்போர்ட் இல்லை. ராஜேந்திர பாலாஜி அண்ணன் அலுவலர்களிடம் கேள்வி கேட்டார்.

தோல்வியை கண்டு பயப்படுகிற கட்சி தேமுதிக அல்ல. மறுவாக்கு எண்ணிக்கை நடத்தி, தோல்வி அடைந்தால் அதை வரவேற்க தயாராக இருக்கிறோம்.

இருந்தாலும், எங்களது கோரிக்கைக்கு தேர்தல் ஆணையம் செவி சாய்க்காதபோது மன அழுத்தம் ஏற்படுகிறது. எங்களுக்கான நியாயம், அங்கீகாரம் கிடைக்காத வலியின் வெளிப்பாடாக தான் தேர்தல் ஆணையத்திற்கு வந்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அதிமுகவும், பாஜகவும் இணைந்திருந்தால் திமுகவை வீழ்த்தியிருக்க முடியுமா?

முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற அன்னியூர் சிவா

Photo of author
Selvam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share