அதிமுகவும், பாஜகவும் இணைந்திருந்தால் திமுகவை வீழ்த்தியிருக்க முடியுமா?

அரசியல் சிறப்புக் கட்டுரை

அதிமுகவும் பாஜகவும் இணைந்து போட்டியிட்டிருந்தால் தமிழ்நாட்டில் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கலாம் என்ற ஒரு விவாதம் தேர்தல் முடிவுகள் வெளியானதற்குப் பிறகு தமிழ்நாட்டில் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாஜக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளுக்கு உள்ளேயும் இந்த விவாதம் சூடாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாஜகவில் தமிழிசை செளந்தர்ராஜனும், அதிமுகவில் வேலுமணியும் இந்த விவாதத்தை பத்திரிக்கையாளர் சந்திப்புகளிலேயே சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் தேர்தல் அரசியலைப் பொறுத்தவரை 1+1=2 என்ற எண்கணிதம் ஒர்க் அவுட் ஆகுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. இந்த கேள்விக்கு கடந்த கால தரவுகள் சிலவற்றை வைத்து விடை காண முயல்வோம்.

கோவையில் கடந்த தேர்தலில் நடந்தது என்ன?

முதலில் இந்த தேர்தலில் அதிகம் பேசப்பட்ட கோவை நாடாளுமன்றத் தொகுதியைப் பார்க்கலாம். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லாமல் பாஜக மூன்றாவது அணியாக களமிறங்கியது. அப்போது கோவை தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் 3,89,701 வாக்குகளைப் பெற்றார். அந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் 4,31,717 வாக்குகள் பெற்றார். அதிமுக, பாஜக இரண்டு வேட்பாளர்களும் தனித்தனியாகப் பெற்ற வாக்குகளை சேர்த்தால் 8 லட்சம் வாக்குகளுக்கு மேல் வருகிறது.

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இரண்டு கட்சிகளுமே வலுவாக உள்ளதாகப் பார்க்கப்படும் கோவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் 3,92,007 வாக்குகளே பெற்றார். கிட்டத்தட்ட பாஜக மூன்றாவது அணியாகப் பெற்ற அதே வாக்குகளைத் தான் அதிமுகவோடு கூட்டணி அமைத்து பெற்றது. அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்த போது இரண்டு கட்சிகளும் தனித்தனியாகப் பெற்ற வாக்குகள் கூடவில்லை என்பதைப் பார்க்க முடிகிறது.

தர்மபுரியில் அன்புமணி ராமதாஸ் தோற்றது எப்படி?

இதேபோல் இன்னொரு உதாரணமாக தர்மபுரி தொகுதியைப் பற்றிப் பார்ப்போம். 2014 ஆம் ஆண்டு பாஜக கூட்டணியில் மூன்றாவது அணியாக பாமக போட்டியிட்டது. அப்போது தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் 4,68,194 வாக்குகளைப் பெற்று வெற்றியும் பெற்றார். அதேபோல் தனியாகப் போட்டியிட்ட அதிமுக 3,91,048 வாக்குகளைப் பெற்றது. 2019 ஆம் ஆண்டு பாமக, அதிமுக, பாஜக ஒன்றாக இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட்டன. 1+1=2 என்ற கணக்குப் படிப் பார்த்தால் குறைந்தபட்சம் 8 லட்சம் வாக்குகளை இரண்டு கட்சிகளும் இணைந்து தாண்டியிருக்க வேண்டும். ஆனால் அன்புமணி ராமதாஸ் 5,04,235 வாக்குகள் மட்டுமே பெற்று திமுகவிடம் தோல்வியடைந்தார். இங்கும் இரண்டு கட்சிகளும் தனித்தனியாகப் பெற்ற வாக்குகளை, கூட்டணியாக இணைந்து போட்டியிட்ட போது பெற முடியவில்லை.

இந்த இரண்டு உதாரணங்களுமே தேர்தலில் தனித்தனியாகப் பெறும் வாக்குகள் ஒன்றாக இணையும்போது அப்படியே கிடைக்காது என்பதைக் காட்டுகிறது.

டெல்லியை வென்ற பாஜக

அதேபோல் முக்கியமாக டெல்லியில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இரண்டு கட்சிகளுமே வலுவான கட்சிகள். ஆம் ஆத்மி ஆளுங்கட்சி. காங்கிரஸ் டெல்லியின் முன்னாள் ஆண்ட கட்சி. 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் டெல்லியில் தனித்தனியாக போட்டியிட்டன. ஆம் ஆத்மி கட்சி தனியாக 32.9% வாக்குகளைப் பெற்றது. காங்கிரஸ் கட்சி தனியாக 15.1% வாக்குகளைப் பெற்றது. மொத்தமாக இரண்டு கட்சிகளும் தனித்தனியாக பெற்ற வாக்குகளை சேர்த்தால் 48% வாக்குகள் வருகிறது. அந்த தேர்தலில் பாஜக தனியாக பெற்ற வாக்கு சதவீதம் என்பது 46.4% ஆகும்.

இந்த அடிப்படையில் பார்த்தால் இரண்டு கட்சிகளும் இணைந்து இந்த தேர்தலில் போட்டியிட்டதால் அவர்களின் வாக்கு சதவீதம் பாஜகவை தாண்டியிருக்க வேண்டும். ஆனால் அனைத்து தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி தோல்வியடைந்தது. இரண்டு கட்சிகள் தனித்தனியாக பெற்றுள்ள வாக்கு சதவீதங்கள் ஒன்றாக இணையும் அப்படியே இணையாது என்பதையே இந்த உதாரணமும் காட்டுகிறது.

பாமகவும், விசிகவும் ஒரே கூட்டணியில் இருந்தபோது நடந்தது என்ன?

இங்கு குறிப்பிட்ட இரண்டு உதாரணங்களும் வெவ்வேறு நாடாளுமன்றத் தேர்தல்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிடப்படுவதால், ஒரு தேர்தல் முடிந்து அடுத்த தேர்தலின்போது அரசியல் சூழல் வேறு மாதிரியாக மாறியிருக்கலாம். இதை வைத்து எப்படி நாம் இரண்டு கட்சிகளின் வாக்குகள் இணைவதை கணக்கிட முடியும் என்ற கேள்வி எழலாம்.

தமிழ்நாட்டில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலை எடுத்துக் கொள்வோம். தமிழ்நாட்டில் வட மாவட்டங்களில் இரண்டு மிகப் பெரிய சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளாக பார்க்கப்படுபவை பாட்டாளி மக்கள் கட்சியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும். இந்த இரண்டு கட்சிகளும் ஒரே அணியில் இருந்தால் வட மாவட்டங்களில் அந்த கூட்டணி மிகப்பெரும் வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இரண்டு கட்சிகளுமே 2011 ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் இருந்தன. ஆனால் அந்த தேர்தலில் திமுக பெரும் தோல்வியை சந்தித்தது. அதிமுக அணியே வெற்றி பெற்றது.

இங்கும் நிரூபணமாவது என்னவென்றால் இரண்டு வெவ்வேறு கொள்கை நிலைப்பாடுகளை உடைய இரண்டு கட்சிகள் ஒரே அணியில் இணைந்து போட்டியிட்டால், இரண்டும் தனித்தனியாகப் பெரும் வாக்குகள் முழுமையாக அந்த அணிக்கு வந்து சேராது. இரண்டு கட்சிகளும் ஒரே அணியில் இருப்பதை விரும்பாத பல வாக்குகள் பிரியக் கூடிய வாய்ப்பு உள்ளது என்பதையே 2011 தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

தேர்தலில் மக்கள் எந்த அடிப்படையில் வாக்களிக்கிறார்கள்?

தேர்தல் அரசியலைப் பொறுத்தவரை மக்கள் வாக்களிப்பதற்கு பல்வேறு முக்கிய விவகாரங்கள் காரணமாக அமைகின்றன. இந்த தேர்தலைப் பொறுத்தவரை விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, சிறுபான்மையினரின் வாக்குகள் என பல ஃபேக்டர்கள் மக்கள் வாக்களிப்பதற்கான முக்கிய அம்சங்களாக அமைந்துள்ளன. அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதற்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டதே சிறுபான்மையினரின் வாக்குகள் பாஜகவுடன் இணைந்ததால் தங்களுக்கு விழவில்லை என்பதே. எனவே அதிமுகவும் பாஜகவும் இணைந்து போட்டியிடும்போது, அதிமுகவின் வாக்கு வங்கியிலிருந்து இஸ்லாமியர்களின் வாக்குகள் பிரிந்து விடுகின்றன. அதேபோல், தமிழ்நாட்டில் மதச்சார்பின்மையை விரும்பும் பலரின் வாக்குகளும் அதிமுகவின் கணக்கிலிருந்து குறையும். இப்படி அதிமுகவும் பாஜகவும் இணையும் போது, இரண்டு கட்சிகளின் வாக்குகளும் கூடுவது மட்டுமே நடப்பதில்லை.

மோடியின் 10 ஆண்டு கால ஆட்சி நீடிக்க வேண்டுமா கூடாதா என்ற கேள்வியை மையப்படுத்தி இந்த தேர்தலை மக்கள் சந்தித்ததால், மோடி ஆட்சியின் மீதான அதிருப்திகள், அதிமுகவின் வாக்குவங்கியில் ஓட்டையை ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது. எனவே இப்போது தனியாக அதிமுக பெற்றுள்ள வாக்குகள், பாஜகவுடன் இணைந்திருந்தால், அதிமுகவிற்கு அப்படியே விழுந்திருக்கும் என்று சொல்ல முடியாது.

பல்வேறு தேர்தல் முடிவுகளை நாம் எடுத்து ஆய்வு மேற்கொண்டால் 1+1 =2 என்ற கணக்கு எல்லா தேர்தல்களிலும் ஒர்க் அவுட் ஆகாது என்பதைப் பார்க்க முடியும். எனவே அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்திருந்தால் திமுக கூட்டணியை தமிழ்நாட்டில் வீழ்த்தியிருக்கலாம் என்று சொல்லப்படுவது ஒரு கற்பனையான ஊகம் மட்டுமே. எதார்த்தத்தில் அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை.

விவேகானந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

2026 சட்டமன்ற தேர்தல்: 200+… ஸ்டாலின் டார்கெட்!

சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் வழக்கு : அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடு : ரஜினி, ஓபிஎஸிடம் கைகுலுக்கி உற்சாகமாக பேசிய மோடி

+1
0
+1
3
+1
0
+1
6
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *