சென்னையில் நடந்த திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில், நடிகர் விஜய் விஷ்வா இயக்குநர் பா.ரஞ்சித் பெயரைக் குறிப்பிட்டு “போலி போராளி” என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண்மணி ரங்கநாதன் தயாரிப்பில் சராஜ் சீலன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், அனுமோல், அர்ச்சனா குமார், விஜய் விஷ்வா, சாய் விக்கி, நயனா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பாரிஸ் கபே’ படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
விழாவில் பேசிய நடிகர் விஜய் விஷ்வா, “தமிழ்நாட்டில் ஒரு செய்தி மிகவும் பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது. நமது அண்டை மாநிலத்தில் 3 தமிழர்களைச் சுட்டுக்கொலை செய்துள்ளனர். ஆனால், சில போலிப் போராளிகள் எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அவர்கள் ஒரு குரல் கூட கொடுக்கவில்லை.
எனது முதல் படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித் சார். எனக்கு முதன்முதலில் வாய்ப்பு கொடுத்த இயக்குநர் பா.ரஞ்சித் அண்ணனுக்கு நான் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருக்கிறேன். அன்று ஒரு வீடியோவில் பார்த்தேன், ராஜ்மோகன் சார் ‘தலித் என்றே எங்களுக்குத் தெரியாது’ என்றார். ஓகே, குரல் கொடுப்பது நல்லதுதான். ஆனால் நேற்று தமிழர்கள் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். போலிப் போராளிகள் பாஸ்வேர்டை மறந்துவிட்டார்களா? என்று தெரியவில்லை. நீங்கள் எல்லாவற்றிற்கும் குரல் கொடுங்கள். சாதியை நாம் கடந்து வந்துவிட்டோம், அதனால் அதிலேயே அடைபட்டுவிடாதீர்கள்” என்றார்.
இதைத் தொடர்ந்து மேடையில் இருந்த சமூக ஆர்வலர் கௌசல்யா பேசுகையில், “நடிகர் விஜய் விஷ்வா பேசும்போது போலி போராளிகள் என்றார். அந்த வார்த்தையைச் சொல்ல நீங்கள் சரியான நபரா என்று தெரியாது. நீங்கள் அப்படிச் சொன்னதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். எந்தத் தோழர்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்று எனக்குத் தெரியாது. 10 வருடங்களாக எந்த அரசியலும் தெரியாத ஒரு பெண்ணை இந்தச் சமூகத்தில் தனது சொந்தக் காலில் நின்று வளர உறுதுணையாக இருந்தவர்கள் தான் தோழர்கள். அப்படி இருப்பவர்கள்தான் போராளிகள்.
நீங்கள் சொல்வது போல் அவர்கள் இந்த விஷயத்திற்குத் தான் குரல் கொடுத்தார்கள், இந்த விஷயத்திற்குக் குரல் கொடுக்கவில்லை என்றால்… அதேபோல் அவர்கள் போராடும் விஷயத்திற்கு இந்தச் சமூகத்தில் உள்ள எல்லாரும் குரல் கொடுத்தார்களா என்று நீங்கள் நிரூபித்தால், மற்ற அனைவரும் எல்லா விஷயத்திற்கும் குரல் கொடுப்பார்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய விஜய் விஷ்வா, “நான் பேசியதைக் கௌசல்யா தவறாகப் புரிந்துகொண்டுவிட்டார் என நினைக்கிறேன். சாதிக்காகப் போராடுகிறவர்கள் தமிழர்களுக்காகப் போராட மாட்டார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதனால் விழாவில் சிறிது நேரம் சலசலப்பான சூழல் நிலவியது.
