அப்பா- மகன் சண்டையால் நின்று போன ‘ராமதாஸ்’ திரைப்படம்.. சேரன் வேதனை!

Published On:

| By Mathi

Ayya Movie Cheran

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான ‘அய்யா’ கைவிடப்பட்டது தொடர்பாக இயக்குநர் சேரன் வேதனையைப் பகிர்ந்துள்ளார்.

‘வெங்காயம்’ பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமாரின் ‘ஒன் மேன் ONE MAN’ திரைப்படம் ஆகஸ்ட் 21-ந் தேதி திரைக்கு வருகிறது.

ADVERTISEMENT

‘ஒன் மேன்’ படத்தில் பெயருக்கு ஏற்ப தனி ஒரு மனிதனாக அனைத்து துறைகளிலும் பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார் சங்ககிரி ராஜ்குமார். யாருடைய உதவியும் இல்லாமல் ஒற்றை மனிதரால் உருவாக்கப்பட்ட படம்தான் ஒன் மேன்.

இப்படத்தின் அறிமுக விழா நிகழ்ச்சியில் இயக்குநர் சேரன் பேசியதாவது: ராமதாஸ் ஐயாவின் படத்திற்கு எனக்கு முன்னால் அந்தக் கதையை எழுத அமர்ந்தவர் சங்ககிரி ராஜ்குமார்தான். அவர்தான் ஐயாவின் படத்திற்கு கதை எழுதி இயக்கியிருக்க வேண்டும். சில காரணங்களால், அதற்கு ஒரு மதிப்பு வேண்டும், இப்படிக் கதை எடுக்க வேண்டும் என்றெல்லாம் தயாரிப்பாளர்கள் இணைந்து பேசும்போது, என்னிடம் ராஜ்குமாரை அறிமுகப்படுத்தி இவர் கதை எழுதி வைத்துள்ளார் என்று கூறினார்கள்.

ADVERTISEMENT

அப்போது அவர் நிறைய குறிப்புகளை எழுதி வைத்துள்ளதாகவும், அதை நான் எடுத்துக்கொள்ளும்படியும் கூறும்போது எனக்கு மனதிற்கு சங்கடமாக இருந்தது. அவன் எடுக்கவிருக்கும் படத்தை, அவன் எடுக்க வேண்டும் என்று நினைத்து எழுதிய படத்தை நான் ஏன் எடுக்க வேண்டும் என்று சொல்லி, நான் ராமதாஸ் ஐயாவிடம், “தம்பி எடுக்கட்டும், நான் வேணா கூட இருந்து சப்போர்ட் பண்றேன். ஏன்னா, அவனுக்கு ஒரு கனவு இருந்திருக்கும், அவனுக்கு ஒரு அடையாளம் வேண்டும். அவன் மிக அழகாக அந்தக் கதையைத் தொகுத்திருப்பான். அப்படியிருக்க அதைப்போய் நான் எடுத்தால் அவன் உழைப்பைத் தட்டிப்பறித்தது போல் இருக்கும்” என்று அவரிடம் சொன்னேன்.

அவர்கள் பின்னர் பேசிவிட்டு, “இல்லை, இந்தக் கதை இன்னும் சிறப்பாக வர வேண்டும், இப்படி வர வேண்டும், அப்படி வர வேண்டும்” என்று தயாரிப்பாளர்கள் வற்புறுத்தியபோது, நான் ராஜ்குமாரைக் கூப்பிட்டு, “தம்பி, என்னால் மறுக்க முடியவில்லை, வேறு வழியில்லை. பெரியவர்கள் கேட்கும்போது அதை வேண்டாம் என்று தூக்கி எறிந்துவிட்டு வரும் அளவுக்கு அவரகளது அன்பை என்னால் அவமதிக்க முடியாது. வேறு வழியில்லாமல் நான் ஒப்புக்கொள்கிறேன் தம்பி” என்று அவரிடம் சொன்னேன். அதற்கு அவனுக்கு என் மீது வருத்தம் இருந்தது.

ADVERTISEMENT

ஏனென்றால், அந்தச் சூழ்நிலை நம்மை அப்படி ஒரு இக்கட்டில் கொண்டு வந்து நிறுத்தும். ஆனால், வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்ட பிறகு பாருங்கள், அந்தப் படம் உனக்கும் கிடைக்கவில்லை, எனக்கும் கிடைக்கவில்லை, கடைசியில் யாருக்கும் இல்லாமலேயே போய்விட்டது.

கடைசியில் அந்தப் படமே எடுக்கப்படவில்லை. அது ராஜ்குமாரின் உழைப்பு கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் நீடித்திருக்கும், அந்த உழைப்பு வீணாகிவிட்டது. அதன்பிறகு என்னுடைய உழைப்பு கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் இருந்திருக்கும். கிட்டத்தட்ட நாங்கள் ஒரு 15 பேர் கொண்ட குழுவாகச் சென்று, இடங்களைப் பார்த்து, படப்பிடிப்புத் தளங்களைத் தேடி, எத்தனையோ இடங்களுக்கு அலைந்து, காடுகளையும் மேடுகளையும் கடந்து அந்த ஊரைக் கண்டுபிடித்தோம். ஏன்னா, அது 1987-ஆம் ஆண்டு காலத்து வரலாறு. 1987-லிருந்து நடந்த சம்பவங்களை முழுமையாகப் பதிவு செய்ய வேண்டும். இப்போபோய் தேடினால் 2026-ஆம் ஆண்டில் 1987-ன் காலத்து கிராமங்களை எங்கே போய் தேடுவது?

ஆனா, தமிழ்நாடு முழுவதும் முழுமையாக நாங்கள் அலைந்து, அந்தக்காலத்து கிராமங்களையும், சாலைகளையும் கண்டறிந்து, அப்போதைய மனிதர்களைப் போன்ற தோற்றமுடைய ஆட்களைக் கண்டுபிடித்தோம். ஏனென்றால், அன்றைய காலத்து மனிதர்களின் தோற்றமே முற்றிலும் வேறுபட்டது.

இன்றைக்கு அப்படிப்பட்ட மனிதர்களும் முகங்களும் எங்குமே இல்லை, எல்லாமே மாறிவிட்டது. அதையெல்லாம் அடிப்படையாக வைத்து, ஒன்றரை வருடங்கள் தீவிரமாக ஆய்வு (Thesis) செய்து, தகவல்களை எல்லாம் திரட்டி வைத்த பிறகும் அந்தப் படம் நடக்கவில்லை என்றால், அது எவ்வளவு பெரிய வலி பாருங்க..

அவர்கள் வேண்டுமானால் சொல்லலாம், “நாங்கள் உங்களுக்கு அந்தப் பணி செய்த வரைக்கும் சம்பளம் கொடுத்துவிட்டோமே” என்று. ஆனால் எங்களுக்குத் தேவை சம்பளம் அல்ல, எங்கள் சிந்தனையும் கற்பனையும் தான். நாங்கள் நினைத்ததை, கற்பனை செய்து எங்கள் மண்டைக்குள் ஊறிப்போன அந்தக் கதை திரையில் வெளியே வந்தால் எனக்குச் சம்பளமே கிடைக்காவிட்டாலும் நான் கவலைப்படமாட்டேன். ஏன்னா, நான் அந்த அளவுக்கு சினிமாவை நேசிக்கும் ஒரு பைத்தியக்காரத்தனமான எண்ணம் கொண்டவன். எனக்கு நான் உருவாக்கிய படம் வெளிவர வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை, நின்றுவிட்டது.

அதற்கு என்ன காரணம் என்று கேட்டால், தயாரிப்பாளர் தரப்பில் அப்பா-மகன் சண்டை போட்டனர், அதனால் படம் நின்றுவிட்டது. இப்போது அப்பா- மகனும் சேர்ந்துவிட்டார்கள், ஆனால் படம் எடுக்க ஆளில்லை. என்ன செய்வது?

இதுதான் சினிமாத் துறையின் அவலம். அதுபோலத்தான் சினிமா என்பது எங்கு நம்மைத் தூக்கி நிறுத்தும், எங்கு நம்மை ஏமாற்றும், எங்கு நம்மை வீழ்த்தும் என்று யாருக்கும் தெரியாது. இவ்வாறு இயக்குநர் சேரன் பேசினார். இவ்வாறு இயக்குநர் சேரன் பேசினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share