40 பேர் பலியான கரூர் விஜய் கூட்ட நெரிசல் வழக்கு: மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வெள்ளிக்கிழமை விசாரணை

Published On:

| By Mathi

TVK Karur High Court New

தவெக தலைவர் நடிகர் விஜய்யின் கரூர் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்குகள் மீது வரும் வெள்ளிக்கிழமையன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் விசாரணை நடைபெறும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி பிரசாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலியாகினர்.

ADVERTISEMENT

இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த போலீசார், விஜய் வேண்டும் என்றே கூட்டத்துக்கு தாமதமாக வந்ததும் ஒரு காரணம் என கூறியிருந்தனர். மேலும் தவெகவின் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே கரூர் சம்பவம் தொடர்பாக வழக்குகள் போடப்பட்டுள்ளன. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில், மதுரை மானகிரியைச் சேர்ந்த செல்வகுமார் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

ADVERTISEMENT

அதில், “தவெக கூட்டத்துக்கு 10,000 பேர் கூடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் பெண்கள், குழந்தைகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். தவெகவினர் சட்டப்பூர்வமான விதிகளை மீறினர். இதனால் 40 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். கரூர் கூட்டத்தில் குழந்தைகள், பெண்கள் பங்கேற்பதை தடுக்க தவறிவிட்டனர். ஆகையால் தவெகவின் தேர்தல் ஆணைய பதிவை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

சிவகங்கை ஆளவந்தான்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் முருகேசனும் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக வழக்கு தொடர இருக்கிறார்.

ADVERTISEMENT

ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தி, கரூர் சம்பவத்தில் காயமடைந்த செந்தில் கண்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் இந்த மனுக்கள் மீது நீதிபதிகள் தண்டபாணி மற்றும் ஜோதிராமன் பெஞ்ச் வரும் வெள்ளிக்கிழமையன்று விசாரணை நடத்த உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share