தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று (மே 8) 3-வது முறையாக ஆளுநர் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால் விஜய்க்கு மெஜாரிட்டிக்கான 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இல்லை என்பதால் அவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேகர் அழைக்கவில்லை.
விஜய்-க்கு தற்போதைய நிலையில் மொத்தம் 116 எம்.எல்.ஏ.க்கள்தான் உள்ளனர். (தவெக 107+ காங்கிரஸ் 5 + கம்யூனிஸ் கட்சிகள் 4).
கம்யூனிஸ்ட் கட்சிகளைப் போல விசிக தலைவர் திருமாவளவனும் நேற்று மாலை தமக்கு ஆதரவு என அறிவிப்பார் என்கிற எதிர்பார்ப்பு விஜய்-க்கு இருந்தது. ஆனால் மாலை 5 மணிக்கு உயர்நிலை குழுக் கூட்டத்தை ஆன்லைனில் நடத்திய திருமாவளவன் எந்த ஒரு முடிவையும் தெரிவிக்கவில்லை. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விசிகவின் செய்தித் தொடர்பாளர் பாவலன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ”நாளை காலைதான் (இன்று மே 9) திருமாவளவன் முடிவை அறிவிப்பார்” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் கம்யூனிஸ்ட்களின் ஆதரவு அறிவிப்புக்குப் பின்னர், திருமாவளவனிடம் பேசுவதற்கு விஜய் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருந்தார். ஆனால் விஜய்யால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதே நேரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை திருமாவளவன் சந்தித்து பேசினார். இதனால் விஜய் தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்தது.
தற்போதைய நிலையில், விஜய்க்கு சாதகமான முடிவை திருமாவளவன் எடுக்கமாட்டார் என்பதே கிடைத்து வரும் தகவல்கள்.
அதேநேரத்தில் திருமாவளவனை தொடர்பு கொள்ள முடியாத விஜய், 4 எம்.எல்.ஏக்களைக் கொண்டிருக்கும் பாஜக- அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவின் தலைவர் அன்புமணியை தொடர்பு கொண்டு பேசினார். ஆனாலும் அன்புமணியிடம் இருந்து விஜய்க்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை. இதனால் முதல்வர் ஆக முடியுமா? இல்லையா? என்கிற பதற்றத்தில் விஜய்யும் தவெகவும் தவித்து வருகிறது.
