அமமுக எம்.எல்.ஏ. பெயரில் விஜய்க்கு ஆதரவு என ஆளுநரிடம் போலி கடிதம்.. ஆட்சியை பிடிக்க தவெக மோசடி.. டிடிவி தினகரன் பரபர குற்றச்சாட்டு

Published On:

| By Mathi

TTV Dhinakaran Kamaraj

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் எம்.எல்.ஏ. காமராஜ் பெயரில் தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு என ஆளுநர் அர்லேகரிடம் போலி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது; இது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்க இருக்கிறோம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் நேற்று இரவு ஆளுநர் அர்லேகரை சந்தித்து 3-வது முறையாக ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது அமமுக எம்.எல்.ஏ. காமராஜ், விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளதாக கடிதம் ஒன்றும் ஆளுநரிடம் கொடுக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

ADVERTISEMENT

இதனையடுத்து ஆளுநர் மாளிகைக்கு உடனே விரைந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஆளுநர் அர்லேகரை சந்தித்தார். அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துதான் தமது கட்சி எம்.எல்.ஏ. காமராஜ் தம்மிடம் கடிதம் கொடுத்துள்ளார்; ஆளுநரிடம் தமது கட்சி எம்.எல்.ஏ. காமராஜ் பெயரில் விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு தந்துள்ளதாக கொடுக்கப்பட்ட கடிதம் போலியானது என புகார் தெரிவித்திருந்தார். இதனையே செய்தியாளர்களிடமும் டிடிவி தினகரன் கூறினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் நள்ளிரவில் ஆளுநர் மாளிகைக்கு மீண்டும் டிடிவி தினகரன் வந்தார். அவருக்கு முன்னதாக அமமுக எம்.எல்.ஏ. காமராஜ், ஆளுநர் அர்லேகரை சந்தித்து தமது பெயரில் விஜய் ஆட்சி அமைக்க போலி கடிதம் தரப்பட்டுள்ளது; அது குறித்து விசாரிக்க வேண்டும் என புகார் கொடுத்தார்.

ADVERTISEMENT

போர்ஜரி கடிதம் குறித்து ஆளுநரிடம் அமமுக எம்.எல்.ஏ. புகார்

இதனையடுத்து ஆளுநர் மாளிகை வளாகத்தில் டிடிவி தினகரன், காமராஜ் எம்.எல்.ஏ. இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஆளுநரிடம் காமராஜ் எம்.எல்.ஏ. கொடுத்த புகார் கடிதத்தை டிடிவி தினகரன் வாசித்தார். அந்த புகாரில் “மன்னார்குடி தொகுதியிலிருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் நான் காமராஜ், தந்தை பெயர் சௌந்தரராஜன். தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தமிழக வெற்றிக் கழகத்திற்கு நான் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக ஒரு கடிதம் வாட்ஸ்அப்பில் உலா வருவதாக என் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. ஆனால், நான் அத்தகைய ஆதரவு கடிதம் எதையும் வழங்கவில்லை. அந்தக் கடிதம் எனது அனுமதி இன்றி பரப்பப்படுகிறது.

நானும் எனது கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனும் இணைந்து, தமிழகத்தில் புதிய அரசு அமைக்க எடப்பாடி கே. பழனிசாமிக்கு எங்களது கட்சியின் அதிகாரப்பூர்வ லெட்டர் ஹெட்டில் ஏற்கனவே ஆதரவுக் கடிதம் வழங்கியுள்ளோம். 08-05-2026 அன்று அந்த ஆதரவு கடிதத்தை அளித்துள்ளோம். எனவே, ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட அந்த கடிதத்தையே நான் இப்போதும் உறுதியாகப் பின்பற்றுகிறேன்.

ADVERTISEMENT

யாரோ போலியாக எனது பெயரில் கடிதம் தயாரித்து ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியுள்ளனர். அது குறித்து ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது” என காமராஜ் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

என்ன நடந்தது?

மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் கூறியதாவது: ஆளுநர் மாளிகையில், நான் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பதாக என் பெயரில் ஒரு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகையிலிருந்து என்னிடம் விசாரணை நடத்தினர். நான் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்து மட்டுமே கையெழுத்திட்ட கடிதத்தைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம் வழங்கியிருந்தேன். மற்றொரு கடிதம் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. இவ்வாறு மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் தெரிவித்தார்.

ஆட்சி அமைப்பதற்குள்ளேயே மோசடி வேலையா?

டிடிவி தினகரன் கூறியதாவது: ஆளுநர் மாளிகையில் இருந்து காமராஜ் எம்.எல்.ஏ. பெயரிலான ஆதரவு கடிதம் குறித்து விசாரித்த உடனே, நாங்கள் ஆளுநரை நேரில் சந்தித்து இது குறித்துப் புகார் அளித்துவிட்டு வந்துவிட்டோம். இப்படி ஒரு போலி கடிதத்தை யார் அனுப்பியிருப்பார்கள் என்று நீங்களே கண்டுபிடித்துச் சொல்லுங்கள். நீங்கள் (விஜய்) ‘தூய சக்தி’, ‘தூய்மையான ஆட்சி’ கொடுக்கப்போவதாகச் சொல்கிறீர்கள். ஆனால், ராவணன் சீதையைக் கவர்ந்ததைப் போல இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறீர்கள். இதையேதான் நாங்கள் ‘குதிரை பேரத்திற்கு’ வாய்ப்புள்ளதாகக் கூறுகிறோம்.

எங்கள் சட்டமன்ற உறுப்பினர் பெயரில் கடிதம் அனுப்பப்பட்டிருந்தால், அதை யார் அனுப்பியிருப்பார்கள்? யாரோ ‘ராமசாமி’யா அனுப்பியிருப்பார்? ஒரு வெற்றுத்தாளில் காமராஜ் எம்.எல்.ஏ. கையெழுத்திட்டு, ‘நான் தவெக-விற்கு ஆதரவு தருகிறேன்’ என வாட்ஸ்அப்பில் தகவல் வந்ததாகவும், அதன் நகல் (Printout) இதுதான் என்றும் ஆளுநரிடம் வழங்கியிருக்கிறார்கள். ஆளுநர் மாளிகையிலிருந்து ‘அசல் கடிதம் (Original) எங்கே?’ எனக் கேட்டதற்கு, ‘இந்த வாட்ஸ்அப் நகலையே வைத்துக்கொள்ளுங்கள்’ என்று கூறியிருக்கிறார்கள்.

‘தூய சக்தி’ என்று கூறிக்கொண்டு இப்படியொரு மோசடி (Forgery) வேலையைச் செய்யலாமா? இன்னும் ஆட்சியே அமைக்கவில்லை, அதற்குள்ளாகவே நீங்கள் இவ்வளவு பெரிய மோசடி சக்தியாக இருந்தால், நாளை ஆட்சி அமைத்த பிறகு தமிழ்நாட்டில் யார்தான் இருக்க முடியும்? இதை நாங்கள் சும்மா விடப்போவதில்லை. இது குறித்துக் காவல்துறையில் புகார் அளிப்போம். இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share