விசிக தலைவர் திருமாவளவன் அமைதியாக இருப்பதால் விஜய் ஆட்சி அமைப்பதற்கு மெஜாரிட்டிக்கான 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கிடைக்கவில்லை.
விஜய் தவெகவுக்கு 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்களுடன் சேர்த்து மொத்தம் 112 பேர்தான் ஆதரவு என்ற நிலை இருந்தது.
இதனையடுத்து சிபிஐ, சிபிஎம் , விசிகவுக்கு ஆதரவு கேட்டு விஜய் கடிதம் அனுப்பினார். திருமாவளவன் உட்பட இந்த கட்சிகளின் தலைவர்களிடமும் விஜய் போனில் பேசினார்.
இந்நிலையில் இன்று சென்னையில் நடைபெற்ற சிபிஐ, சிபிஎம் மாநில குழு கூட்டங்களில் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவிக்கப்பட்டது. விஜய்க்கு சிபிஐ-ன் 2, சிபிஎம் -ன் 2 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கிடைத்தது. இதனையடுத்து விஜய்க்கு 116 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தது.
விஜய்க்கு ஆதரவை அறிவிக்கும் போது சிபிஐ செயலாளர் வீரபாண்டியன், விசிக தலைவர் திருமாவளவனும் எங்கள் முடிவை ஏற்பார்; மாலை 6.30 மணிக்கு நான், திருமாவளவன், சிபிஎம் செயலாளர் சண்முகம் மூவரும் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து அறிவிப்போம் என கூறினார்.
இதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு விசிகவின் உயர்நிலைக் கூட்டத்தை ZOOM வழியே திருமாவளவன் நடத்தினார். அதே நேரத்தில் ஆளுநர் அர்லேகரை விஜய் சந்திக்க சென்றார். அப்போது, விசிகவும் விஜய்க்கு ஆதரவு தந்துவிட்டது; அதனால் விஜய்க்கு பெரும்பான்மைக்கான 118 எம்.எல்.ஏக்கள் கிடைத்துவிட்டனர்; ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் என கூறப்பட்டது.
அத்துடன் சிபிஐ, சிபிஎம் அலுவலகங்களுக்கு நேரில் சென்று ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார் விஜய்.
ஆனால் தற்போது வரை விசிக தலைவர் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. அவர் ஏற்கனவே நாளை காலைதான் முடிவை அறிவிப்பேன் என கூறியிருந்தார். அதே நேரத்தில் விசிகவின் எம்.எல்.ஏ. வன்னி அரசு, பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் சமூக வலைதளங்களில் “பூடகமாக” கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.
இந்த பரபரப்புகளுக்கு இடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை திருமாவளவன் சந்திப்பு பேசி வருகிறார்.
விசிகவின் உயர்நிலைக் கூட்டம் முடிந்தும் திருமாவளவன் எந்த கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை; அதே நேரத்தில் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இதனால் விசிகவின் ஆதரவு கிடைக்குமா? கிடைக்காதா? என்ற தவிப்பில் தத்தளிக்கிறார் விஜய்.
தற்போதைய நிலையில் விஜய்க்கு மொத்தம் 116 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர். ஆனால் ஆட்சி அமைக்க மெஜாரிட்டிக்கு 117 எம்.எல்.ஏக்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
