திமுக தலைவர் ஸ்டாலினை திருமாவளவன் சந்தித்து பேசி வருகிறார்.
சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் தவெகவுக்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதனால் மற்ற கட்சிகளுடன் தவெக தலைமை பேசி வந்தது. இந்தநிலையில், காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
ஐயுஎம்எல் முதலில் ஆதரவளிப்பதாக தகவல் வெளியான நிலையில், அக்கட்சி தலைவர் காதர் மொகைதீன் ஆதரவு இல்லை என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே விசிக ஆதரவு என்று சொல்லப்பட்டாலும் இன்னும் அதன் தலைவர் திருமாவளவன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இன்று மாலை 5 மணிக்கு தனது கட்சி மூத்த நிர்வாகிகளுடன் காணொளி காட்சி வாயிலாக திருமாவளவன் ஆலோசனை செய்தார்.
இதைத்தொடர்ந்து விசிகவைச் சேர்ந்த வன்னி அரசு “ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு இது திருமா காலம்-இனி உயர்வோம் மேலும் மேலும்!” என்றும் பதிவிட்டுள்ளார்.
“தமிழ்நாடு குழம்பிப் போயிருக்கலாம். எழுச்சித்தமிழர் தெளிந்த நீரோடை. உளிகளை கொண்டு செதுக்க அவர் வெறும் கல் அல்ல. எழுந்து நிற்கும் இமய மலை. நாளைய பொழுது
நமக்காய் விடியும்” என்று சூசகமாக சிந்தனை செல்வன் பதிவிட்டுள்ளார்.
இந்தசூழலில் திருமாவளவன் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார்.
ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள மு.க. ஸ்டாலின் வீட்டுக்கு நேரில் சென்று அவரை சந்தித்து ஆலோசனை செய்து வருகிறார்.
கம்யூனிஸ்டுகள் முடிவை பின்பற்றுவேன் என்று திருமாவளவன் கூறியிருந்த நிலையில் தற்போது அவர் அமைதியாய் இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
