விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு தருவது ஏன்? சிபிஎம் தீர்மானம் சொல்வது என்ன?

By Mathi

|

Published on 8 May 2026, 8:17 PM

CPM Vijay Support

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்கான காரணத்தை சிபிஎம் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் விவரித்துள்ளது.

இது தொடர்பாக சிபிஎம் இன்று வெளியிட்ட அறிக்கை:

ADVERTISEMENT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் இன்று மத்தியக்குழு உறுப்பினர் என். குணசேகரன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே. பாலகிருஷ்ணன், உ. வாசுகி, மாநில செயலாளர் பெ. சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத், கே. பாலபாரதி மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்காத நிலையில், தமிழக வெற்றி கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இப்பின்னணியில் ஜோசப் விஜய் ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரி உள்ள நிலையில், அவரை ஆட்சி அமைக்குமாறும், சட்டமன்ற அவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறும் முடிவெடுக்க வேண்டிய ஆளுநர், ஜோசப் விஜய்யை அழைக்க மறுத்து இருப்பது ஜனநாயக விரோத நடவடிக்கை ஆகும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு சுட்டிக்காட்டுகிறது. ஆளுநர், அரசியல் பாரபட்சத்தோடு செயல்பட்டு வருவதும், ஏற்கனவே உள்ள மரபுகள், நீதிமன்றத் தீர்ப்புகள், அரசியல் சாசன கோட்பாடுகளை மீறி இருப்பதும் முற்றிலும் ஏற்க இயலாத நடவடிக்கை ஆகும்.

ADVERTISEMENT

தமிழக வெற்றிக் கழகம், ஆளுநரின் இத்தகைய நடவடிக்கையை வெளிப்படையாக கண்டிப்பதே மாநில உரிமைகள், கூட்டாட்சி கோட்பாடு ஆகியவற்றில் அக்கட்சி கொண்டுள்ள உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக இருக்கும் என்பது ஜனநாயக எண்ணம் கொண்டோரின் அழுத்தமான கருத்தும், எதிர்பார்ப்பும் ஆகும் என சிபிஐ(எம்) மாநிலக்குழு சுட்டிக்காட்டுகிறது.

இதற்கிடையில் திமுக – அதிமுக இடையே பேச்சுவார்த்தை நடப்பதாகவும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைக்க முயற்சிகள் நடப்பதாகவும் வரும் செய்திகள் மக்களின் தீர்ப்பிற்கு முற்றிலும் எதிரானதாகும். இதை ஏற்க இயலாது.

ADVERTISEMENT

ஆளுநரின் நடவடிக்கை தமிழ்நாட்டில் சட்டமன்றத்தை முடக்கி குடியரசுத் தலைவர் ஆட்சியை புகுத்துவதற்கும், மக்களின் தீர்ப்புக்கு மாறாக குதிரை பேரம் நடத்துவதற்கும், அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கும் வழிவகுத்து விடக்கூடாது. இது குறித்து விவாதித்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு, தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி திணிக்கப்படுவதையும், கொல்லைப் புற வழியாக பாஜக அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிப்பதையும் அனுமதிக்கக் கூடாது என்று முடிவு செய்தது.

இத்தகைய பின்புலத்தில் ஜோசப் விஜய் கடிதம் மூலம் கேட்டுக்கொண்ட அடிப்படையில் அரசு அமைக்க ஆதரவை வழங்குவது என்றும், அதன் மூலம் ஆளுநரின் ஜனநாயக விரோத நடவடிக்கையை முறியடித்து மக்கள் தீர்ப்பிற்கான மரியாதையை உறுதி செய்வது என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தீர்மானித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரும் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் போது விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள். அதேநேரத்தில் அமைச்சரவையில் பங்கேற்காமல் வெளியிலிருந்து ஆதரவு அளிப்பது என்றும் மாநிலக்குழு முடிவு செய்துள்ளது.

புதிய அரசாங்கம் மதச்சார்பின்மை, எளிய மக்களை உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி, கூட்டாட்சி, சமூகநீதி கோட்பாடுகளை உயர்த்திப் பிடித்து மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுகிற வகையில் செயல்பட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு சிபிஎம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel