சட்டமன்றத்தில் ஐயுஎம்எல் 2 உறுப்பினர்களும் ஆளுநர் மேற்கொள்ளக்கூடிய அரசு அமைப்புக்கான அனைத்து செயல்பாடுகளுக்கும் துணை நிற்பர் என்று அக்கட்சி தேசிய தலைவர் காதர் மொகைதீன் கூறியுள்ளார்.
தவெக 108 இடங்களில் வென்ற நிலையில் ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாமல் திணறி வந்தது.
இந்தநிலையில் தவெகவுக்கு இன்று சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
இந்தசூழலில் திமுக கூட்டணியில் இருக்கும் ஐயுஎம்எல் கட்சி வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில், “ தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம்பெற்று பாபநாசம், வாணியம்பாடி ஆகிய இரண்டு தொகுதிகளில் முறையே ஏ.எம். ஷாஜஹான், எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் பாஷா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஜனநாயக முறையிலான ஆட்சி நிறுவப்படுவதற்கு திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தமிழக ஆளுநருக்கு விடுத்துள்ள வேண்டுகோளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முழு மனதோடு வரவேற்கிறது.
சட்டமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகினுடைய இரண்டு உறுப்பினர்களும் ஆளுநர் மேற்கொள்ளக்கூடிய அரசு அமைப்புக்கான அனைத்து செயல்பாடுகளுக்கும் துணை நிற்பர் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.









