தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு 120 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ள நிலையில் ஆளுநர் அர்லேகரை இன்று மாலை அக்கட்சித் தலைவர் விஜய் சந்தித்தார்.
சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வென்றது தவெக. ஆனால் ஆட்சி அமைக்க தேவையான மெஜாரிட்டி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு (118- விஜய் ஒரு தொகுதியை ராஜினாமா செய்வதால் 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை) தவெகவுக்கு இல்லாமல் இருந்தது.
இதனையடுத்து திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவை தற்போது தவெக பெற்றுள்ளது. இதனால் விஜய்க்கு பெரும்பான்மைக்கு அதிகமாக 120 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கிடைத்துள்ளது.
இதனையடுத்து இன்று மாலை ஆளுநர் அர்லேகரை சந்திக்க சென்ற விஜய், பாதி வழியிலேயே திரும்பினார். ஆளுநர் அர்லேகர், நேரம் ஒதுக்காததால் அவர் திரும்பியதாக கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது ஆளுநர் அர்லேகரை விஜய் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தமக்கு 120 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளதையும் ஆதரவு தரும் கட்சிகளின் கடிதங்களையும் ஆளுநரிடம் கொடுத்து தம்மை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என மீண்டும் கேட்டுக் கொண்டார் விஜய்.
