தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டியே என பிரசாரம் செய்தார் விஜய். திமுக கூட்டணியையே “கல்லா பெட்டி” கூட்டணி என கடுமையாக சாடினார்.
இந்த தேர்தலில் விஜய்யின் தவெகவுக்கு 108 எம்.எல்.ஏக்கள் கிடைத்தனர். விஜய் 2 தொகுதிகளில் வென்றதால் தவெகவுக்கு 107 எம்.எல்.ஏக்கள்தான் உள்ளனர். விஜய் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால் சட்டசபையின் பலம் 233. இதன் அடிப்படையில் பெரும்பான்மைக்கு தேவை 117 எம்.எல்.ஏக்கள்.
திமுகவை எதிர்த்து தேர்தல் களத்தில் தீவிர பிரசாரம் செய்த விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு கோரியது திமுகவின் கூட்டணி கட்சிகளிடம்தான். முதலில் திமுக கூட்டணியில் இருந்த 5 எம்.எல்.ஏக்களைக் கொண்ட காங்கிரஸ் ஆதரவை கோரினார் விஜய். இதனை ஏற்று திமுக கூட்டணியில் இருந்து விலகி விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவு தந்தது.
இதன் பின்னர் திமுக கூட்டணியில் உள்ள சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவை கேட்டு காத்திருந்தார் விஜய். இந்த கட்சிகள் அனைத்தும் இப்போது விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
திமுக கூட்டணியில் இருந்த
காங்கிரஸ் -5
சிபிஐ -2
சிபி எம்- 2
விசிக -2
ஐயூஎம்எல் 2
என 13 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் மட்டுமே விஜய்யால் தற்போது ஆட்சி அமைக்க முடிகிறது. அதிலும் விஜய் ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதாக சொல்லி இருக்கும் சிபிஐ, சிபிஎம், விசிக, முஸ்லிம் லீக் என அனைத்து கட்சிகளுமே நாங்கள் திமுக கூட்டணியில்தான் நீடிக்கிறோம் என்கின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தந்தாலும் திமுக கூட்டணியிலேயே நீடிக்கும் இடதுசாரிகள், விசிகவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
திமுகவுக்கு எதிராக பிரசாரம் செய்த விஜய், இப்போதும் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் ஆதரவில்தான் ஆட்சி அமைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி இருப்பது ‘ஜனநாயகத்தின்’ திருவிளையாடல்!
