விஜய் ஆட்சிக்கு ஆதரவு தர 2 காரணங்கள்தான்.. தவெக ஆதரவு குறித்து ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் பேட்டி- முழுமையாக!

Published On:

| By Mathi

Thirumavalavan Press Meet May 9

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிப்பது ஏன்? என அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் இன்று மே 9-ந் தேதி செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: தமிழகத்தில் தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெற்று, 8 தொகுதிகளில் போட்டியிட்டது; 2 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். அதேபோல இடதுசாரிக் கட்சிகளும் தலா 2 இடங்களில் வெற்றி பெற்றன.

இடதுசாரிகள், விசிக

இந்த நிலையில், இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களும் விடுதலைச் சிறுத்தைகளும் முன்கூட்டியே கலந்து பேசினோம். மக்கள் நலக் கூட்டணி உருவான காலத்திலிருந்து கொள்கை அடிப்படையில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்; மக்கள் பிரச்சினைகளின் அடிப்படையில் ஒருங்கிணைந்து களமாடியிருக்கிறோம்.

ADVERTISEMENT

ஆகவே, இந்த அரசியல் நெருக்கடி உருவாகியிருக்கிற சூழலில், இடதுசாரிக் கட்சிகளும் விடுதலைச் சிறுத்தைகளும் தொலைநோக்குப் பார்வையோடு எதிர்கால அரசியலையும் கருத்தில் கொண்டு இணைந்தே முடிவெடுப்போம் என்று நாங்கள் கலந்து பேசி, அதன் அடிப்படையில் அறிவிப்புச் செய்திருந்தோம்.

இடதுசாரிக் கட்சிகள் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரு கட்சிகளும் மாநிலக் குழு எடுத்த முடிவுகளை எடுத்து, அந்த முடிவை ஒட்டி விடுதலைச் சிறுத்தைகளின் உயர்நிலைக் குழுவில் கலந்தாய்வு செய்து, அவர்களின் ஒப்புதலோடு முடிவை அறிவிப்பது என்றும் திட்டமிட்டிருந்தோம்.

ADVERTISEMENT

இடதுசாரிகளின் தவெக ஆதரவு

அதன்படி நேற்று (மே 8), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவளிப்பது என்ற முடிவை எடுத்தார்கள்.

விசிக உயர்நிலைக் குழு கூட்டம்

அந்த முடிவை முன்வைத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் நேற்று மாலை ஜூம் (Zoom) இணைப்பு வழியாக நடைபெற்றது. 30-க்கும் மேற்பட்ட தோழர்கள் அங்கம் வகிக்கும் உயர்நிலைக் குழுவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் எடுத்துள்ள முடிவை முன்வைத்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.

அந்தக் கருத்துக்களின் அடிப்படையில் நிறைவாக, கட்சியின் தலைவர் இறுதியான முடிவெடுக்கிற அதிகாரத்தை வழங்குகிறோம் என்று அந்த உயர்நிலைக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தான் இன்றைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர் தோழர் சிந்தனைச் செல்வன், நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் ரவிக்குமார் ஆகியோரோடு நான் கலந்தாய்வு செய்து ஒரு முடிவை எடுத்தோம்.

தவெகவுக்கு ஆதரவு- 2 காரணங்கள்

அதன் அடிப்படையில், தவெகவுக்கு ஆதரவு கடிதத்தையும் வழங்கியிருக்கிறோம்.

தமிழ்நாட்டில் இந்த அரசியல் நெருக்கடியைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வந்துவிடக்கூடாது; அதைத் தடுக்க வேண்டும் என்கிற அடிப்படையிலும், 108 இடங்களில் வெற்றி பெற்றும் ஆட்சி அமைக்க முடியாமல் ஒரு சிக்கலில் தவெக திணறிக் கொண்டிருக்கிற நிலையில், அவர்கள் ஆட்சி அமைப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவளிக்க வேண்டும் என்கிற அடிப்படையிலும் இந்த ஆதரவு நிலைப்பாட்டை நாங்கள் எடுத்திருக்கிறோம்.

அதாவது 2 காரணங்கள்:

  • தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகளின் நிலைப்பாடு தடையாக இருந்துவிடக் கூடாது என்பது.
  • குடியரசுத் தலைவர் ஆட்சி முறை நடைமுறைக்கு வந்துவிடக் கூடாது என்பதும் நாங்கள் விவாதத்தின் முடிவில் எடுக்கப்பட்ட நிலைப்பாடாகும்.

வெளியில் இருந்து ஆதரவு

இடதுசாரிக் கட்சிகளின் நிலைப்பாட்டை ஒட்டி நாங்கள் எங்கள் நிலைப்பாட்டையும் எடுப்போம் என்று ஏற்கனவே நான் அறிவித்திருந்தேன். அதன் அடிப்படையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஆட்சி அமைப்பதற்கு மட்டும் எங்கள் ஆதரவை நல்கியிருக்கிறோம்.

வேறு எந்த நிபந்தனையும் இல்லை; வெளியிலிருந்து எங்கள் ஆதரவை நல்குகிறோம். அவ்வளவுதான்.

திமுக கூட்டணியில் நீடிக்கிறோம்

நாங்கள் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தான் இருக்கிறோம். ஆனால் அரசியல் நெருக்கடியான இந்தச் சூழலில், ஒரு முடிவை எடுப்பதற்கு ஒரு அரசியல் கட்சி என்கிற முறையில் எங்களுக்கான சுதந்திரத்தைப் பயன்படுத்தி இந்த நிலைப்பாட்டை நாங்கள் எடுத்திருக்கிறோம். இது எந்த வகையிலும் எங்கள் உறவைப் பாதிக்கும் என்று நாங்கள் நம்பவில்லை. இந்த நிலைப்பாடு விஜய், ஆட்சி அமைப்பதற்கு உறுதுணையாக இருப்பது, குடியரசுத் தலைவர் ஆட்சி முறை வராமல் தடுப்பது, அவ்வளவுதான்.

ஜனநாயகப் படுகொலை கூடாது

ஆளுநர் விஜய்யை சந்திக்க மறுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே நாங்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பிலே கூறியிருந்தோம்; மக்கள் அவருக்குக் கூடுதலான இடங்களைத் தந்து தனிப்பெரும் கட்சி என்கிற அங்கீகாரத்தைத் தந்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஆட்சி அமைப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற கருத்தை ஏற்கனவே சொல்லியிருந்தோம்.

போதிய எண்ணிக்கை இல்லை என்று சொன்னார்கள்; அந்தப் போதிய எண்ணிக்கைக்காகத் தான் இடதுசாரிகளோடு விடுதலைச் சிறுத்தைகளும் ஆதரவை நல்கியிருக்கிறோம். மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும், குதிரைப் பேரம் நடப்பதற்கு இடம் கொடுக்கக் கூடாது, அதற்கான சூழலை உருவாக்கக் கூடாது. அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும், ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும். எனவே, ஆட்சி அமைப்பதற்குரிய எண்ணிக்கைகள் – ‘அப்சல்யூட் மெஜாரிட்டி’ (Absolute Majority) என்று சொல்லக்கூடிய 118 இடங்கள் இன்றைக்கு தவெகவுக்கு உள்ளது. இந்த நிலையில் அவரை ஆட்சி அமைக்க அனுமதிப்பதுதான் ஜனநாயகம் ஆகும். ஆளுநர் ஜனநாயகத்தைப் படுகொலை செய்யக் கூடாது என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.

விஜய்யை வரவேண்டாம் என சொன்னேன்

ஆளுநரைச் சந்தித்த பிறகு விஜய் விசிக தலைமையகத்திற்கு வருவதாகச் சொன்னார். நான் அவரிடத்திலே வேண்டுகோள் வைத்தேன்; பதவியேற்புக்குப் பிறகு சந்திப்போம், இப்போதைக்கு அலுவலகம் வரவேண்டிய கட்டாயம் இல்லை, எனவே வரவேண்டாம் என்று நான் சொல்லிவிட்டேன்.

தவெக ஆதரவு- ஸ்டாலின் சொன்னது என்ன?

ஏற்கனவே நாங்களே முடிவெடுத்திருந்தோம்; இடதுசாரிகளும் விடுதலைச் சிறுத்தைகளும் எந்த முடிவை எடுத்தாலும் அந்த முடிவை திமுக தலைமைக்கு அறிவித்து, அதன் பிறகு நாம் இதை வெளிப்படுத்துவோம் என்று கூறியிருந்தோம். அதன்படி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு இந்தத் தகவலை நாங்கள் முறைப்படி சொல்லியிருக்கிறோம்; ‘நாங்கள் இந்த முடிவை எடுக்கிறோம்’ என்று சொன்னதற்கு, ‘அது உங்கள் கட்சிக்கான சுதந்திரம், நீங்கள் அப்படி முடிவெடுப்பதாக இருந்தால் வாழ்த்துக்கள்’ என்று எங்களுடைய நிலைப்பாட்டுக்கு அவர் ஓகே சொல்லியிருக்கிறார்.

அவர் ஆரம்பத்திலிருந்தே சொன்னார்; விஜய் ஆட்சி அமைப்பதற்கு நாங்கள் ஒருபோதும் இடையூறாக இருக்க மாட்டோம் என்று சொன்னார். அந்த ஒரு பெருந்தன்மையான கருத்தை அவர் தொடக்கத்திலிருந்தே சொல்லி வருகிறார்; நேற்றும் கூட அவர் ஆட்சி அமைப்பதற்குக் காலந்தாழ்த்தக் கூடாது என்ற அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறார். இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், திமுக தலைவர், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர் அண்ணன் ஸ்டாலின் அவர்களிடத்திலே எங்கள் நிலைப்பாட்டை முன்கூட்டியே அறிவித்துவிட்டோம். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share