அரசியல் விலாங்கு மீன் விஜய் ராகுலுக்கு அளித்த விருந்து! காலாவதியாகும் காங்கிரஸ் அரசியல்!

Published On:

| By ராஜன் குறை கிருஷ்ணன்

Vijay feast to Rahul and Congress politics nearing expiry

ராஜன் குறை

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அக்டோபர் பத்தாம் தேதி சென்னைக்கு ஒரு மாணவர் சந்திப்பிற்காக வந்தார். “ஷாத்ரோன் கீ கூஞ்ச்” என்ற பெயரில் அவர் நாடு முழுவதும் மாணவர்களை சந்தித்து பேசி வருகிறார். அந்த முறையில் சென்னை வந்த அவருக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தன்னுடைய வீட்டில் விருந்தளித்தார். அதன் பிறகு ஒரு உயர் ரக காஃபி ஷாப்பிற்கும் கூட்டிச்சென்று இத்தாலிய திரமிசு என்ற கேக் வகை, காபி வாங்கிக் கொடுத்தார்.

நட்பு ரீதியான சந்திப்பு போலத் தோன்றினாலும், இருவரும் அரசியல்வாதிகள் என்பதால் அரசியல் சந்திப்பு என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். காங்கிரஸ் தலைவர்களும் உடனிருந்தனர் என்றாலும் என்ன அரசியல் பேசினார்கள் என்பது குறித்து எதுவும் பொதுவெளியில் பகிரப்படவில்லை.

ADVERTISEMENT

இதில் என்ன வேடிக்கை என்றால் மறுநாளே பிரதமர் மோடியும் பூந்தமல்லி-வடபழனி மார்க்க மெட்ரோ ரயிலை தொடங்கி வைக்க சென்னை வந்தார். அவரை விமான நிலையத்தில் சென்று வரவேற்று, அவருடன் சேர்ந்து மெட்ரோ ரயிலை துவக்கி வைத்து அதில் பயணமும் செய்தார் விஜய். பின்னர் ஐஐடி வளாகத்தில் நிகழ்ந்த கூட்ட த்திலும் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்டு உரையாற்றினார். விமான நிலையம் சென்று வழியனுப்பியும் வைத்தார்.

தேசிய அரசியலில் கடுமையாக மோதிக்கொண்டிருக்கும் ராகுல் காந்தியும், பிரதமர் மோடியும் அடுத்தடுத்த நாட்களில் முதல்வர் விஜயை சந்தித்தது விஜய் யார் பக்கம் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. விஜய் ஆதரவாளர்கள் இந்த கேள்வி கேட்பவர்களை கடுமையாகக் கோபித்துக் கொள்கிறார்கள். விஜய் கட்சித் தலைவர் என்ற முறையில் கூட்டணி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் தலைவரை சந்தித்து பேசினார். முதல்வர் என்ற முறையில் பிரதமரை வரவேற்று அவருடன் நிகழ்வுகளில் பங்கேற்றார். இதில் என்ன குழப்பம் என்று ஆவேசப்படுகிறார்கள்.

ADVERTISEMENT

மேலோட்டமாகப் பார்த்தால் அது சரிதான். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கூட முதல்வர்கள், பிரதமர் அரசு முறைப் பயணமாக வந்தால் சந்திக்க வேண்டும். நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டும். அதுதான் புரொட்டோகால் என்ற அரசு முறைமை. பிரச்சினை எங்கே வருகிறது என்றால் விஜய் அரசியல்வாதியாக பாஜக செய்யும் எதையுமே கண்டித்துப் பேசுவதில்லை என்பதுதான். மேலும் ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் தீவிரமாகப் போராடும் சமயத்திலும் ஆதரவாக எந்த அறிக்கையும் விடுவதில்லை. அவர்கள் தரப்பு நியாயத்தை ஆதரிப்பதில்லை.

ராகுல் காந்தி, காங்கிரஸ் மட்டுமின்றி இளையோர் அமைப்பான காக்ரோச் ஜனதா பார்ட்டியும், மாணவர் அமைப்புகளும் போராடும் பிரச்சினை ஒன்றும் சாதாரணமான பிரச்சினையல்ல. இந்திய மக்களாட்சியையே கேள்விக் குறியாக்கியுள்ள பிரச்சினை. பதிமூன்று கோடி பேரின் வாக்குரிமையை பறித்துள்ள மாபெரும் அநீதி குறித்த பிரச்சினை. அதில் நாட்டின் மீது அக்கறையுள்ள ஒவ்வொரு குடிநபரும் தீவிரமாக பங்கெடுப்பதே  அடிப்படை அரசியல் தன்னுணர்வாகும்.

ADVERTISEMENT

விஜய் மிகத்தீவிரமாக உருவெடுத்துவரும் இந்த போராட்ட த்தைக் குறித்து எதுவுமே பேசுவதில்லை. ராகுல் காந்தியுடன் சேர்ந்து அவர் மாணவர் நிகழ்வில் பங்கேற்றுப் பேசியிருக்கலாம். அல்லது ஒரு செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்திருக்கலாம். ஆனால் இந்திய மக்களாட்சி வரலாற்றில் மிக முக்கியமான இந்த சந்தர்ப்பத்தில் அவர் எந்த ஆர்வமும் இன்றி ராகுல் காந்தியுடன் திரமிசு சாப்பிடுவதில் கவனமாக இருக்கிறார் என்றால் அதை எப்படி புரிந்துகொள்வது என்பதுதான் கேள்வி.

அரசியல் விலாங்கு மீன்!   

விலாங்கு மீன் என்பது பாம்பினை போன்ற நீண்ட உடலும், மீனின் தலையும் கொண்ட நீர்வாழ் பிராணி. அதன் இரட்டை உருவத்தோற்றத்தால் அது இரட்டை வேடம் போடுபவர்களுக்கான உருவகமாக இருக்கிறது. “மீனுக்குத் தலையும், பாம்புக்கு வாலும் காட்டுபவர்கள்” என்று அவ்வாறு நடந்து கொள்பவர்களைக் குறிப்பார்கள். “பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்” என்பதற்கு இணையான சொலவடைதான் அது.

விஜய் பாஜக-வின் கட்டுப்பாட்டில்தான் அரசியல் செய்கிறார் என்பது அவர் செயல்பாடுகளை கூர்ந்து நோக்கும் யாரும் புரிந்துகொள்ள முடியும். ஆனால் பேச்சுக்கு, தமிழ்நாட்டில் பாஜக எதிர்ப்பு வாக்குகளைப் பெற, பாஜக தன் கொள்கை எதிரி என்று சொல்வார். அதை நம்புகின்ற சாக்கில் அவரால் காங்கிரஸ் கட்சிக்கு ஏதெனும் ஆதாயம் கிடைக்குமா என்று பார்க்க விரும்புகிறது காங்கிரஸ். குறிப்பாக ராகுல் காந்தி அதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

அதற்கு ஒரு முன் கதை இருக்கிறது. ராகுல் காந்தி பதினேழு ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் 2009-ஆம் ஆண்டு விஜய்யை டில்லிக்கு அழைத்துப் பேசினார். விஜயை காங்கிரஸில் சேர அழைத்ததாக நம்பப்படுகிறது. அந்த சமயம் இலங்கையில் தமிழர் இனப்படுகொலை நடந்து முடிந்த நேரம். தி.மு.க-விற்கும், காங்கிரஸிற்கும் உரசல்கள் நிறைய இருந்தன. ஆனால் விஜய் அப்போது காங்கிரஸில் சேரவில்லை.

காங்கிரஸிற்கு தி.மு.க-வை நேரடியாக வெல்ல முடியாது என்ற எண்ணம் 1971 தேர்தலுக்குப் பிறகு உருவான பிறகு, எம்.ஜி.ஆரை தி.மு.க-விலிருந்து பிரித்து ஒன்றிய அரசிற்கு இணக்கமான ஒரு திராவிட கட்சியை உருவாக்கிய அனுபவம் இருக்கிறது. அதன் பிறகு தொன்னூறுகளின் மத்தியில் ரஜினிகாந்தையும் நரசிம்ம ராவ், மூப்பனார் முதலிய காங்கிரஸ் தலைவர்கள் அரசியலுக்கு அழைக்கத்தான் செய்தனர்.

தி.மு.க-வின் திராவிட-தமிழர் அடையாள அரசியலுக்கு எதிராக ஒரு திரைபிம்ப தலைமையை உருவாக்குவதுதான் சரியான வழி என்பது எம்.ஜி.ஆரின் வெற்றியிலிருந்தே காங்கிரஸிற்கும், பின்னர் பாஜக-விற்கும் தோன்றக்கூடிய விஷயமாகவே இருந்து வருகிறது. விஜய்காந்த் திராவிட அடையாளம் கொண்ட மூன்றாவது மாற்றாக இயங்க முயற்சித்து ஓரளவு வெற்றியும் பெற்றது, இத்தகைய திரைபிம்ப அரசியலை நீடிக்க வைத்தது.

பாஜக ரஜினிகாந்த்தைத்தான் வெகுவாக நம்பியது. ஆனால் அவருக்கு தனிப்பட்ட முறையில் முழுநேர அரசியல்வாதியாவதில் முழுமனதான விருப்பம் இல்லை. அதனால் கிட்ட த்தட்ட கட்சியை அறிவித்து துவங்கிவிட்ட நிலையில் உடல்நிலை காரணமாக பின்வாங்கி விட்டார். ரஜினிகாந்த் அவரே முதல்வராக விரும்பாத நிலையில் அவர் ஆதரவுடன் முதல்வாராக க் கூடியவராக ஒருவர் தேவை என ஐபிஎஸ் அண்ணாமலையை பணியிலிருந்து விலகச்செய்து பின்னர் பாஜக தலைவராக்கினர்.

பாஜக-வால் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.இ.அ.தி.மு.க-வை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியவில்லை. எடப்பாடி பழனிசாமி அரசியல் ரீதியாக பாஜக-வுடன் முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருந்தாலும், தொகுதிகளைப் பகிர்வதில் கறாராக இருந்தார். நேரடியாகவே அண்ணாமலை தலைமையில் பாஜக-வை வளர்க்கும் முயற்சியும் வெற்றிபெறவில்லை. தி.மு.க நாளுக்கு நாள் வலுப்பெற்று வந்தது.

அந்த நிலையில்தான் விஜயை களமிறக்கிப் பார்க்க பாஜக முடிவு செய்தது என்று யூகிக்க இடமிருக்கிறது. தான் எடப்பாடி அ.இ.அ.தி.மு.க-வுடன் இணைந்துகொண்டு, விஜயை தனியாக களமிறக்கி தி.மு.க-வை தீவிரமாக எதிர்க்கச் செய்ய பாஜக முடிவு செய்தது. தி.மு.க கூட்டணி அமைச்சரவைக்கு ஒத்துக்கொள்ளாது என்ற நிலையில், தவெக கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தருவதாக அறிவிக்கச் செய்து தி.மு.க கூட்டணி கட்சிகளை, குறிப்பாக காங்கிரஸ், விசிக-வை தி.மு.க-விடமிருந்து பிரிக்க திட்டமிட்டது என்றும் யூகிக்கலாம்.

இந்த யூகங்களுக்கெல்லாம் என்ன அடிப்படை என்றால் ஊடகங்களில் வெளியான பல்வேறு சிறு, சிறு தகவல்களை ஒருவர் தொகுத்துத் தர இயலும். ஆனால் அதையெல்லாம் விட மிக முக்கியமான அடிப்படை பாஜக என்ன செய்தாலும் விஜய் ஒரு வார்த்தை கூட கண்டித்துப் பேச மாட்டார் என்பதுதான். இன்னொரு தெளிவான அறிகுறி தி.மு.க அலர்ஜி கொண்ட பார்ப்பனர்களின் பெருமளவிலான விஜய் ஆதரவு.

அது மட்டுமல்ல. பாஜக எதிர்ப்பை, ஒன்றிய அரசின் அதிகாரக்குவிப்பை எதிர்ப்பதையே தனது அரசியலின் மையமாக தி.மு.க அறிவித்து அணிதிரட்டிக் கொண்டிருந்த நிலையில், தி.மு.க தீயசக்தி என்று கடும் கூச்சலிடும் ஒருவராக விஜய் களமிறக்கப்பட்டார். பாஜக-வின் பாசிச முனைப்பை எதிர்த்து போராடும் தி.மு.க தீய சக்தி என்றால் பாஜக நல்ல சக்தியா என்ற கேள்வி எழவேண்டும்.

ஆனால் விஜய் பாஜக குறித்து எதுவுமே சொல்ல மறுத்தார். தி.மு.க, பாஜக இரண்டுமே தீயசக்தி என்று சொன்னால் பிரச்சினையில்லை; ஆனால் தி.மு.க மட்டுமே தீயசக்தி என்று கூவும்போது, தி.மு.க கடுமையாக எதிர்க்கும் பாஜக நல்ல சக்தி என்றுதானே பொருள்படும்? ஆனால் விஜய்க்கான நல்வாய்ப்பு என்னவென்றால் தமிழ்நாட்டு ஊடகங்கள் அவர் ஒப்புக்கு “பாஜக எங்கள் கொள்கை எதிரி” என்று சொன்னால் போதும் என்பதை ஏற்றுக் கொண்டதுதான். எந்தக் கொள்கையை எதிர்க்கிறோம் என்றாவது கூற வேண்டும் என்று அவரை யாரும் நிர்ப்பந்திக்கவில்லை.

இந்தப் பின்னணியில்தான் அரசியல் விலாங்கு மீனாக உருவெடுத்தார் விஜய். முழு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தி.மு.க ஆதரவுடன் வெற்றிபெற்ற கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை கோரிப்பெற்று ஆட்சியமைத்தார். காங்கிரஸ் பாய்ந்து சென்று அவரை ஆதரித்து 2029 நாடாளுமன்ற தேர்தல் வரை கூட்டணி என்று உடன்பாடு செய்துகொண்டது. ராகுல் காந்தி தன்னால் விஜயை பாஜக பக்கம் செல்லாமல் தடுத்து காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த முடியும் என்று நினைக்கிறார் போலிருக்கிறது. அது காங்கிரஸ் அரசியல் காலாவதி ஆகி வருவதையே காட்டுகிறது.

காங்கிரஸின் பிரச்சினை என்ன?   

மக்களாட்சிக்கு இரண்டு பரிமாணங்கள் உள்ளன. ஒன்று அரசு எவ்விதமான கொள்கைகளைப் பின்பற்றி அரசின் சட்டங்களை, திட்டங்களை தீட்டுகிறது என்பதும், மக்கள் அரசியல் கட்சிகள் மூலமாகவும், நேரடியாகவும் எப்படி அரசுடன் உறவு கொள்கிறார்கள் என்பதும். இதனைத்தான் அரசியல், ஆங்கிலத்தில் பாலிடிக்ஸ் (politics)  என்று கூறுகிறோம். 

இரண்டாவது பரிமாணம் முக்கியமானது. அது என்னவென்றால் சமூகத்திலுள்ள பல்வேறு முரண்சக்திகள் தங்களை வெவ்வேறு அரசியல் கட்சிகளுடன் இணைத்துக்கொண்டு அமைக்கும் முரணரசியல். இதனை ஆங்கிலத்தில் பொலிடிகல் (political) என்று பெயர்ச்சொல்லாகக் குறிப்பிடுகிறார்கள். இந்த முரணரசியல் களம் அந்தந்த மாநிலங்களுக்குள்தான் உருவாகும். இந்திய மாநிலங்கள் எல்லாம் வித்தியாசமான மிக நீண்டகால பண்பாட்டு, அரசியல் வரலாறுகளைக் கொண்ட பகுதிகள் என்பதால் முரணரசியல் வடிவமைப்பு மாநிலங்களில்தான் நடக்கும்.

காங்கிரஸ் கட்சி துவக்கம் முதலே ஆங்கிலம் படித்த மேட்டுக்குடியினரின் கட்சி. அது ஒன்றிய அரசின் அரசியலை நடத்துவதற்கான குடிமைச் சமூக தளத்தினைக் கொண்டது. இன்னும் குறிப்பாகச் சொன்னால் பார்ப்பனர்கள், பிற முன்னேறிய வகுப்பினர்களான 15% உயரடுக்கு மக்களில் நவீன மனம் கொண்டவர்கள் காங்கிரஸில் பங்கேற்பார்கள். அவர்களில் பழமைவாத, சனாதான பற்று கொண்டவர்கள் பாஜக-வில் இருப்பார்கள்.

காங்கிரஸின் நல்வாய்ப்பாக காந்தி மிகப்பெரிய வெகஜன அணிசேர்க்கையை சாத்தியமாக்கி காங்கிரஸிடம் அளித்துவிட்டு சென்றதால் முதல் மூன்று தேர்தல்களை நேரு தலைமையில் காங்கிரஸ் சமாளித்துவிட்டது. ஆனால் அப்போதே மாநிலங்களில் உருவாகும் கோஷ்டிப் பூசல்களை சமாளிப்பது நேருவிற்கு சவாலாகத்தான் இருந்தது. இந்த குழுவாத அரசியலால்தான் நேருவிற்குப் பின் வாரிசு அரசியலாக இந்திரா காந்தியை பிரமராக்க நேர்ந்தது.

இந்திரா ஒரு இடதுசாரி சார்பெடுத்து வங்கிகள் தேசிய மயம், வறுமை ஒழிப்பு, பசுமை புரட்சி என பல திட்டங்கள் மூலம் வெகுஜன ஆதரவைப் பெற்றார். ஆனால் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக் குழுக்களை டில்லியிலிருந்து கட்டுப்படுத்தும் ஹை கமாண்ட் (High Command) என்ற மேலிட கட்டுப்பாட்டை நிலை நிறுத்தினார். இதனால் என்ன நட ந்தது என்றால் மாநில முரணரசியல் தகுந்த தலைமையை உருவாக்க முடியாமல், மேலிட த்தால் திணிக்கப்படுபவர்கள் தலைவர்களாவது, அவர்களுக்கு எதிராக பல கோஷ்டிகள் உருவாவதும் காங்கிரஸ் கட்சியின் இயல்பாக மாறியது.

இதன் விளைவாக மாநில முரணரசியல் மூலம் தங்கள் தலைமையை உருவாக்கிக் கொள்ளும் மாநில கட்சிகள் பல்வேறு மாநிலங்களில் தோன்றின. பல இடங்களில் காங்கிரஸிலிருந்து வெளியேறிவர்களே அத்தகைய மாநில கட்சிகளின் தலைவர்களாக மாறினார்கள். மமதா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ், சரத் பவார் என பல தலைவர்கள் காங்கிரஸ் தலைவர்களாக இருந்தவர்கள்தான்.

உத்திரப் பிரதேசம், பீஹார், மேற்கு வங்கம் என பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் சமூக வேர்கள் எல்லாம் மாநில கட்சிகளுக்கு சென்றுவிட்டன. என்ன முயன்றும் காங்கிரஸால் அந்த மாநிலங்களில் மீண்டும் கட்சிக் கட்டமைப்பை உருவாக்க முடியவில்லை. ஆனாலும் மாநில கட்சிகள் தங்களுக்கு நிறைய தொகுதிகளை ஒதுக்கித் தர வேண்டும், மாநில ஆட்சியில் பங்கு தரவேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுகிறது காங்கிரஸ். அதனால் காங்கிரஸை ஆதரிக்கும் மாநில கட்சிகள் பாஜக-விடம் தோல்வியடையும் சூழ்நிலை உருவாகிறது.

பெரிய கூடார அணுகுமுறை என்ற கருத்தியல் சமரசம்

காங்கிரஸ் வலது சார்பு இடது சார்பு என பல்வேறு கருத்தியல் போக்குள்ளவர்களையும் இணைத்துக்கொள்ளும். மேட்டுக்குடி பார்ப்பனர்களும் வேண்டும், பிற்படுத்தப்பட்டவர்களும் வேண்டும், தலித்துகளும் வேண்டும் என்று நினைக்கும். ஒரு வகையில் இது வெகுஜன கட்சிக்கான அணுகுமுறைதான். ஆனால் பிரச்சினை என்னவென்றால் அது பெரும்பாலான பிரச்சினைகளில் கருத்தியல் சார்ந்து துல்லியமான முடிவு எடுக்காது என்பதுதான். உதாரணமாக சபரி மலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என்று பாஜகவுடன் சேர்ந்து கேரள காங்கிரஸ்காரர்களும் சொல்வார்கள்.

காங்கிரஸின் கருத்தியல் தடுமாற்றங்கள், சமரசங்களைப் பட்டியல் போட்டால் பெரிய நூலே எழுதலாம். உதாரணமாக பூட்டிக் கிடந்த பாபர் மசூதி வளாகத்தை திறந்துவிட்டு இந்துக்கள் உள்ளே சென்று பூஜை செய்ய அனுமதித்தவர் ராஜீவ் காந்திதான். அதிலிருந்துதான் மீண்டும் ராம் ஜென்ம பூமி பிரச்சினை பெரிதானது. என்ன கொடுமையென்றால் மத்திய பிரதேச தேர்தலில் இதைச் சுட்டிக்காட்டி, நாங்கள்தான் ராமர் கோயில் உருவாக க் காரணம் என்று பெருமையாகச் சொல்லியே வாக்குக் கேட்டார் காங்கிரஸ் தலைவர் கமல்நாத். 

இந்த பிரச்சினையால், காங்கிரஸ் கட்சியில் மாநிலங்களில் உருவாகும் கோஷ்டிப் பூசலில் பாதிக்கப்பட்ட தலைவர்கள் பாஜக கட்சியிலேயே சென்று சேர்ந்துவிடுவார்கள். அந்த பட்டியலும் உண்மையில் பெரியது. ஒரு முக்கியமான உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் பஞ்சாப் மாநிலத்தில் இருமுறை காங்கிரஸ் முதல்வராக இருந்த அம்ரீந்தர் சிங்கைச் சொல்லலாம். சமீபத்தில் ராகுல் காந்தியிடம் உங்களுக்குப் பிடித்த பாஜக தலைவர் யார் என்று கேட்டபோது அவர் அம்ரீந்தர் சிங்கைக் குறிப்பிட்டார். சொல்லப்போனால் அம்ரீந்தர் சிங் ராஜீவ் காந்தியின் பள்ளி நண்பர். காந்தி குடும்பத்திற்கு நெருக்கமானவர்.

வாக்குரிமையை காக்கும் போரில் காங்கிரஸ் தெளிவின்மை

இப்போது தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதிமூன்று கோடி பேரை வாக்காளர் பட்டியிலிலிருந்து சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் நீக்கியது நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸும், இந்தியா கூட்டணி கட்சிகளும் டில்லியில் பல போராட்டங்களில் ஈடுபடுகின்றன.

அதே சமயம் காக்ரோச் ஜனதா பார்ட்டி என்ற இளையோர் அமைப்பும், நேஹா போரா போன்ற ஆய்வு மாணவர்கள் தலைமையில் இடது சாரி மாணவர் அமைப்புகளும், கம்யூனிஸ்ட் கட்சிகளும், குடிமை சமூக அமைப்புகளும் போராடுகின்றன. காங்கிரஸ் செய்த துரோகத்தால் இந்தியா கூட்டணியிலிருந்து விலகிய தி.மு.க போராட்ட த்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. சென்னையில் போராடிய மாணவர்களை தவெக அரசு கைது செய்தபோது தி.மு.க தலைவர்கள் அவர்களுக்கு ஆதரவாக சென்று வாதாடியது குறிப்பிடத் தக்கது.

போராடுபவர்கள் என்ன நிலைபாடு எடுக்க வேண்டும்? ஒரே ஒருவரது வாக்குரிமை தவறான காரண ங்களுக்காகப் பறிக்கப்பட்டிருந்தாலும் அது அநீதியானது. அவ்வாறான SIR செயல்பாடு மொத்தமும் ரத்து செய்யப்பட வேண்டும். அந்த செயல்பாட்டின் பின் நடந்த தேர்தல்கள் அனைத்துமே செல்லாதவை என்றுதான் கருதப்பட வேண்டும் என்று கூறுவதுதான் சரியான நிலைபாடு.

ஆனால் காங்கிரஸ் கேரளாவில் அது சி.பி.ஐ(எம்) கட்சிக்கெதிராக பெற்ற வெற்றியும், தமிழ்நாட்டில் அது கூட்டணி அமைத்துள்ள விஜயின் தவெக பெற்ற வெற்றியும் மட்டும் சரியானவை என்று சொல்கிறது. தமிழ்நாட்டு தேர்தல் முடிவுகளை ஆராயும்போது எந்தத் தொகுதிகளிலெல்லாம் அதிக வாக்குகள் நீக்கப்பட்டுள்ளனவோ, அங்கேயெல்லாம் தவெக வென்றிருப்பது தெரிகிறது.

காக்ரோச் ஜனதா பார்ட்டியும், வேறு சிலரும் பாஜக-வை தீவிரமாக எதிர்த்த மாநில கட்சிகளெல்லாம் தோற்றிருப்பதை சுட்டிக் காட்டுகிறார்கள். ஆனால் காங்கிரஸ் தனக்கு வசதியானதை விலக்கிவிட்டு பிற தேர்தல்களை மட்டும் ஆட்சேபிக்கிறது. இப்படிப்பட்ட அப்பட்டமான சந்தர்ப்பவாதம் காங்கிரஸ் கட்சியின் பாஜக எதிர்ப்பு என்பது வெறும் அதிகாரப் போட்டிதானா என்ற ஐயத்தையே பலரிடமும் ஏற்படுத்துகிறது.

வெறும் இரண்டு மந்திரி பதவிகளுக்காக, பாஜக-விற்கு எதிரான முழுமையான கொள்கைப் போராட்ட த்தை நட த்திய தி.மு.க-வை விட்டுவிட்டு, பாஜக-வை எதிர்த்து ஒரு வார்த்தை பேசாத விஜயுடன் திரமிசு சாப்பிடும் ராகுல் காந்திதான் பாஜகவிடமிருந்து நாட்டை மீட்கப் போகிறார் என்றால் வேடிக்கையாக இருக்கிறது. மாநில கட்சிகளின் மூன்றாவது அணி, காக்ரோச் ஜனதா பார்ட்டி போன்ற இளையோர் அமைப்புகளையும் இணைத்துக்கொண்டு செயல்படுவதே சரியான அணுகுமுறையாக இருக்கும் என்பதே பல அரசியல் நோக்கர்கள் வந்து சேரும் முடிவாக இருக்கிறது.

Photo of author
ராஜன் குறை கிருஷ்ணன்

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share