போர்க்களமான டெல்லி.. இன்று ‘காக்ரோச்’ போராட்டம்: 23,000 துணை ராணுவத்தினர் குவிப்பு… 254 ரயில்கள் ரத்து… 45 மெட்ரோ நிலையங்கள் மூடல்- இணைய சேவை துண்டிப்பு!

Published On:

| By Mathi

Delhi-CJP Protest

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சி (CJP சிஜேபி) அமைப்பு இன்று (அக்டோபர் 10) டெல்லியில் நடத்த உள்ள போராட்டத்தால் தலைநகரம் முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் மாணவர் அமைப்புகள் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.

ADVERTISEMENT

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக சிஜேபி அமைப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்குப் பொறுப்பேற்று ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை.

இதே கோரிக்கையை முன்வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகளும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

ADVERTISEMENT

டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று போராட்டம் நடத்த சிஜேபி அமைப்பிற்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். போராட்டத்திற்கான அனுமதி கோரி குறைந்தது 10 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும், ஆனால் சிஜேபி அமைப்பு தாமதமாக விண்ணப்பித்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், ஏற்கெனவே நடைபெற்ற போராட்டங்களின்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டதையும் போலீசார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதையடுத்து பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா சட்டத்தின் 163-வது பிரிவின் கீழ் டெல்லியின் முக்கியமான பகுதிகளில் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் திட்டமிட்டபடி போராட்டத்தை நடத்துவதில் சிஜேபி அமைப்பினர் உறுதியாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT

23,000 துணை ராணுவத்தினர் குவிப்பு

சிஜேபி போராட்டத்தை முன்னிட்டு மத்திய ஆயுதக் காவல் படையின் 221 கம்பெனிகளை மத்திய உள்துறை அமைச்சகம் டெல்லி போலீசாருக்கு ஒதுக்கியுள்ளது. இந்தப் படைகளில் சுமார் 23,000 பேர் இடம்பெற்றுள்ளனர். அக்டோபர் 8-ந் தேதி முதல் அக்டோபர் 12-ந் தேதி வரை இவர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவர். இவர்களுடன் டெல்லி போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

ஜந்தர் மந்தர், ஜன்பத் சாலை, தேர்தல் ஆணைய அலுவலகம், டெல்லி போலீஸ் தலைமையகம் ஆகியவற்றைச் சுற்றியுள்ள 1.5 கிலோ மீட்டர் பகுதி மிகவும் பதற்றமான பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் மட்டும் 6,500-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட உள்ளனர்.

ஜந்தர் மந்தர் செல்லும் சாலைகளில் 7 அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. புதுடெல்லி முழுவதும் 20-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

254 ரயில்கள் ரத்து

டெல்லியில் இன்று காலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயக்கப்பட வேண்டிய 254 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் 75 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களும், 179 உள்ளூர் ரயில்களும் அடங்கும். புதுடெல்லி, ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையங்களுக்கு வந்து செல்லும் ரயில் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. காசியாபாத், மீரட், பானிபட், குருக்ஷேத்ரா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து டெல்லிக்கு வரும் பயணிகளும் ரயில் சேவைகள் ரத்தால் பாதிக்கப்படுகின்றனர். ராஜ்தானி, தேஜஸ் ராஜ்தானி, மகத் எக்ஸ்பிரஸ், சம்பூர்ண கிராந்தி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட முக்கிய ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பயணிகள் ரயில் நிலையங்களுக்குப் புறப்படுவதற்கு முன்பாகத் தங்களது ரயில்களின் நிலையைச் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

45 மெட்ரோ ரயில் நிலையங்களில் கட்டுப்பாடு

டெல்லியில் முதலில் 57 மெட்ரோ ரயில் நிலையங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் பொதுமக்களின் போக்குவரத்தை முழுமையாக முடக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து இந்த எண்ணிக்கை 45 ஆகக் குறைக்கப்பட்டது.

அக்டோபர் 9-ந் தேதி இரவு 9 மணி முதல் இன்று மாலை 6 மணி வரை இந்த 45 நிலையங்களில் பயணிகள் நுழையவும் வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜன்பத் சாலை, படேல் சவுக், சென்ட்ரல் செக்ரடேரியட், ராஜீவ் சவுக், புதுடெல்லி, மண்டி ஹவுஸ், ஐடிஓ, கான் மார்க்கெட், ஹவுஸ் காஸ், லஜ்பத் நகர், காஷ்மீரி கேட் உள்ளிட்ட முக்கிய நிலையங்கள் இதில் அடங்கும்.

24 மணி நேரத்திற்கு இணைய சேவை முடக்கம்

டெல்லியின் மத்தியப் பகுதியில் செல்போன் இணைய சேவையை 24 மணி நேரத்திற்கு முடக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
ஜன்பத் – கர்த்தவ்ய பாதை சந்திப்பிலிருந்து 4 கிலோ மீட்டர் சுற்றளவில் இந்தக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அக்டோபர் 9-ந் தேதி இரவு 10 மணிக்குத் தொடங்கிய இணைய சேவை முடக்கம், இன்று இரவு 10 மணி வரை நீடிக்கும். ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா, எம்டிஎன்எல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இதற்கான உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது.

300 கண்காணிப்பு கேமராக்கள்

போராட்டத்தைக் கண்காணிக்க 300 கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. போராட்டத்தில் பங்கேற்க வருபவர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக 12 தடுப்புக் காவல் மையங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகளையும் போலீசார் செய்துள்ளனர். ஜந்தர் மந்தரை நோக்கிச் செல்லும் சாலைகளில் வாகனச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதை ஒலிபெருக்கிகள் மூலம் பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லி எல்லைகளில் தீவிர சோதனை

டெல்லிக்கு வெளிமாநிலங்களிலிருந்து போராட்டக்காரர்கள் வருவதைத் தடுக்கும் வகையில் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தின் நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து டெல்லிக்குச் செல்லும் சாலைகளில் வாகனங்கள் சோதனை செய்யப்படுகின்றன. மீரட், பரேலி உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். லக்னோ, ஆக்ரா, மீரட், காசியாபாத், நொய்டா, பிரயாக்ராஜ், வாரணாசி உள்ளிட்ட நகரங்களில் நடைபெறக்கூடிய போராட்டங்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

அனைத்து மாநில டிஜிபிக்களுக்கும் மத்திய அரசு கடிதம்

இந்தப் போராட்டத்தை முன்னிட்டு மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல்துறை தலைவர்களுக்கும் அக்டோபர் 9-ந் தேதி கடிதம் எழுதியுள்ளார்.

அதில், அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலும் சிஜேபி அமைப்பினர் பல்வேறு வழிகளில் டெல்லிக்குள் நுழைந்து போராட்டம் நடத்த முயற்சிக்கலாம் என உளவுத்துறை தகவல்கள் கிடைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே, டெல்லி போலீசாருடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், உளவுத்துறை தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

கடைகள், வணிக நிறுவனங்கள் மூடல்

டெல்லியின் முக்கிய வணிகப் பகுதியான கன்னாட் பிளேஸில் உள்ள கடைகள், உணவகங்கள், அலுவலகங்கள் உள்ளிட்டவற்றை இன்று மூடிவைக்குமாறு புதுடெல்லி வர்த்தகர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. சாந்தினி சவுக், பகீரத் பேலஸ் உள்ளிட்ட சந்தைகளிலும் கடைகள் மூடப்படுகின்றன. டெல்லி முழுவதும் அக்டோபர் 9, 10 ஆகிய தேதிகளில் மதுபானக் கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

விமான நிலையத்திற்குச் செல்லும் பயணிகள் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில்கொண்டு முன்கூட்டியே புறப்படுமாறு டெல்லி விமான நிலைய நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

30 சாலைகளில் போக்குவரத்து மாற்றம்

டெல்லியில் சுமார் 30 முக்கிய சாலைகளில் இன்று போக்குவரத்து பாதிக்கப்படலாம் என போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர். ஜந்தர் மந்தர், கன்னாட் பிளேஸ், மண்டி ஹவுஸ், படேல் சவுக், அசோகா சாலை, ஜன்பத், லோதி சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பிவிடப்படலாம். சூழ்நிலைக்கு ஏற்ப போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், அனைத்து சாலைகளும் முழுமையாக மூடப்படாது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

உச்ச நீதிமன்றம் தலையீடு

டெல்லியில் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் பெயரில் ரயில் மற்றும் மெட்ரோ சேவைகளுக்கு விதிக்கப்பட்ட விரிவான கட்டுப்பாடுகள் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டன.

அப்போது, சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது அவசியம் என்றாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முழுமையாக முடக்கும் நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது.

குறிப்பாக வேலைக்குச் செல்பவர்கள், மாணவர்கள் மற்றும் அன்றாடப் பயணிகளின் போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share