எனது பாதையில் மகனை வென்றெடுக்க இயலாது போனதற்கு நான் பெரிதும் வருந்துகிறேன் என சிபிஐ எம்பி சுப்பராயன் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் எம்பி சுப்பராயன் மகன் பாரதி சுப்பராயன் நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலை திமுகவில் இணைந்தார்.
இதுகுறித்து திருப்பூர் எம்பி சுப்பராயன் தனது எக்ஸ் பதிவில், “எனது மகன், எனது விருப்பத்திற்கு நேர்எதிரான பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது!
அவரை எனது பாதையில் வென்றெடுக்க இயலாது போனதற்கு நான் பெரிதும் வருந்துகிறேன்!
நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட பாதை முற்றிலும் வேறானது!
நிகழ்கால தனி உடைமை சமூக அமைப்பு முறையைத் தகர்த்து, பொதுவுடைமை சமூக அமைப்பு முறையைக் கட்டுவதற்கான பாதையே எனது பாதையாகும்!
இந்தக்கொள்கையே இறுதியில் வெல்லும் என்ற சமூகவிஞ்ஞானத்தை உறுதிபட நம்புகிறவன் நான்!
அதற்கான எனது பயணம்இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பாதையிலேதான் எனது மூச்சடங்கும் வரை தொடரும்! எனது பொது வாழ்வில் கம்யூனிஸ்ட் நெறிமுறைக்கு மாறாக ஒருபோதும் நடந்ததில்லை!
இதை ஒட்டி எழுந்த எல்லா நியாயமான விமர்சனங்களையும் பணிவோடு ஏற்கிறேன்!
எனது பொது வாழ்க்கை திறந்த புத்தகம்! இதில் மூடுதிரைகள் ஏதும் இல்லை!
கமிஷன் இலஞ்ச ஊழல் கூத்தாடுகிற இன்றைய அரசியலில், அவை என்னை அண்ட அனுமதித்தததே இல்லை!
எனது பொது வாழ்க்கை குறித்த விளக்கங்களை என்னிடம் எப்போது வேண்டுமானாலும் நேரில் பெறலாம்!
கட்சிக்காக எதையும் இழக்கத் தயங்க மாட்டேன்! என்னை எந்த இடர்ப்பாடுகளும் நிலை குலைத்ததில்லை!
நான் கம்யூனிஸ்ட் என்பதால்!” என தெரிவித்துள்ளார்.
