வெற்றி பெற்றாலும் விஜய்க்கு மரண பயத்தை காட்டியிருக்கிறது இடைத்தேர்தல் – எடப்பாடி பழனிசாமி

Published On:

| By Pandeeswari Gurusamy

Strong opposition to construction in swampy land

தாராபுரம் மதுராந்தகம் தொகுதிகளில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்றுள்ள நிலையில் அதிமுக 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெற்றாலும் தீர்ந்துபோன சக்தி என்றும், மற்றும் பலர் என்றும் நம்மை கேலி செய்தவருக்கு, இந்த இடைத் தேர்தல் மரண பயத்தைக் காட்டியிருக்கிறது.

இது குறித்து முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடந்து முடிந்த சட்டமன்ற இடைத் தேர்தலில், அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்த, வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் நன்றி. கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு, எந்தக் கட்சிக்கும் தேவையான பெரும்பான்மை இடங்கள் கிடைக்கப்பெறவில்லை. இந்நிலையில், ஒருசில கட்சிகளின் ஆதரவோடு த.வெ.க. மைனாரிட்டி ஆட்சியை அமைத்ததுடன், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் த.வெ.க. அரசை, மெஜாரிட்டி அரசாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு, அதிமுக எம்எல்ஏக்களிடம், குதிரை பேரத்தை நடத்தியதன் விளைவுதான், தற்போதைய இடைத் தேர்தல் என்பதை மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள்.

ADVERTISEMENT

இந்த இடைத் தேர்தலில் தோல்வி உறுதி என்பதை உணர்ந்த த.வெ.க., வாக்காளர்களுக்கு பல்வேறு ஆசை வார்த்தைகளையும், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளையும் அளித்து, ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, அதிகார துஷ்பிரயோகம் செய்ததுடன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தாராபுரம் தொகுதி வேட்பாளர் மீதும், தொண்டர்கள் மீதும் பொய் வழக்கு புணைந்து, மாவட்டக் கழகச் செயலாளரையே சட்டவிரோதமாக அடைத்து வைத்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் பலரை அச்சுறுத்தி த.வெ.க-வில் இணைத்து, குறுக்கு வழியில் வெற்றி காண பல்வேறு யுக்திகளைக் கையாண்டது.

`அரை மணி நேரம் பேசினாலே கொத்துப் புரோட்டோ’ என்று வீர வசனம் பேசிய கூட்டணி அரசின் முதலமைச்சர் விஜய், இந்தத் தேர்தலுக்கு தெருத் தெருவாக அலைந்து விசில் ஊத வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். தேர்தல் விதிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டு, அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி இரண்டு தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டதுடன், காவல் துறையினரால் தேடப்படும் குற்றவாளியுடன் ரேக்ளா மாட்டு வண்டியில் வலம் வந்து, ஜனநாயகப் படுகொலை செய்து ஆளும் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது.

ADVERTISEMENT

இது, அதிகார பலத்திற்கும், பணநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி. பொதுவாக, இடைத் தேர்தல் ஆளும் கட்சிக்கு சாதகமாக அமையும். நான் முதலமைச்சராக இருந்தபோதுகூட விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் வெற்றி பெற்றோம். அதுபோல், இந்தத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளது. தீர்ந்துபோன சக்தி என்றும், மற்றும் பலர் என்றும் நம்மை கேலி செய்தவருக்கு, இந்த இடைத் தேர்தல் மரண பயத்தைக் காட்டியிருக்கிறது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டையில் நுழைந்துவிட்டதாக த.வெ.க. நினைக்கலாம். ஆனால், இது இடைக்கால வெற்றி மட்டுமே. இந்த தற்காலிக வெற்றியைக் கொண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அழித்துவிடலாம் என்று யாரும் கனவு காண வேண்டாம். ஏனென்றால், எம்.ஜி.ஆரும், ஜெயலலிதா கட்டிக் காப்பாற்றிய `அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ ஒரு இரும்புக் கோட்டை ஆகும்.

ADVERTISEMENT

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; இறுதியில் தர்மமே வெல்லும்’ என்பது ஆண்டவரின் தீர்ப்பு. ரீல்ஸ் ஆட்சியில் ரீல்ஸ்களில் மயங்கி மக்கள் ஆளும் கட்சிக்கு வாக்களித்துள்ளார்கள். இந்தத் தேர்தல் வெற்றியால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைய வாய்ப்பு இல்லை என்பது தெரிந்தும், இரண்டு தொகுதிகளிலும் நமக்கு நல்ல வாக்குகள் கிடைத்திருக்கிறது.

எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை உருவாக்கியபோது சந்தித்த சவால்கள் ஏராளம். ஜெயலலிதா எதிர்கொண்ட சோதனைகளும் எண்ணிலடங்காதவை. நான் முதலமைச்சரான காலத்தில் சந்தித்த பிரச்சனைகள் எக்கச்சக்கம். இப்போதும், பிள்ளை பிடிக்கும் கும்பல் போல, நம்முடைய கழக சட்டமன்ற உறுப்பினர்களை விலைபேசி பிடித்தே ஆட்சியில் இருக்கிறது தவெக எனும் தற்காலிக வெற்றிக் கழகம். இந்த சோதனையையும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முறியடிக்கும். ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஓர் ஆலமரம்; ஆயிரம் காலத்துப் பயிர்; இன்னும் எத்தனையோ தலைமுறைகளுக்கு தமிழர்களுக்காகப் பாடுபடப்போகும் நல்லியக்கம்’ என சூளுரைத்தவாறு, தமிழ் நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும், தமிழ் நாட்டின் வளர்ச்சிக்காகவும், `அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ மக்கள் பணிகளில் மேலும் உத்வேகத்துடன் ஈடுபடும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share