தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

Published On:

| By Mathi

Dharapuram-TVK Win

தாராபுரம் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்தியபாமா 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தாராபுரம் சட்டசபைத் தொகுதிக்கு அக்டோபர் 6-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் தவெக சார்பில் சத்தியபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

ADVERTISEMENT

தவெக சத்தியபாமா வெற்றி

இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (அக்டோபர் 9) எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் சில சுற்றுகளில் அதிமுக முன்னிலை வகித்தது. ஆனால் அடுத்தடுத்த சுற்றுகளில் தவெக முன்னிலை பெற்றது. அதிமுக 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டது.

தாராபுரம் வாக்கு எண்ணிக்கை முடிவுகள்

  • சத்தியபாமா (தவெக) – 66,841
  • சுகன்யா (திமுக) – 57,370
  • பானுமதி (அதிமுக) – 45,280
  • கார்த்திகா (நாம் தமிழர் கட்சி) – 5,268
  • லட்சுமணன் (சிபிஐ) – 1,157

திமுக வேட்பாளர் சுகன்யாவைவிட 9,471 வாக்குகள் கூடுதலாகப் பெற்று தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றுள்ளார்.

ADVERTISEMENT

2026-ல் அதிமுக வேட்பாளராக வென்ற சத்தியபாமா

2026-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சத்தியபாமா 81,100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் இந்திராணி 64,373 வாக்குகளும், தவெக வேட்பாளர் கௌரி சித்ரா 46,438 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திவ்யா 6,026 வாக்குகளும் பெற்றிருந்தனர். அதாவது முடிவடைந்த பொதுத் தேர்தலில் தாராபுரத்தில் தவெகவுக்கு 3-வது இடம்தான் கிடைத்தது.

16,727 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிமுக எம்.எல்.ஏ.வான சத்தியபாமா, பின்னர் அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்ததால் தாராபுரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

ADVERTISEMENT

தற்போது தவெக வேட்பாளராகப் போட்டியிட்ட சத்தியபாமா 66,841 வாக்குகள் பெற்று, திமுக வேட்பாளர் சுகன்யாவை 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக 81,100 வாக்குகள் பெற்ற சத்தியபாமா, தற்போது தவெக வேட்பாளராக 66,841 வாக்குகள் பெற்றுள்ளார்.

முந்தைய தேர்தலைவிட 14,259 வாக்குகள் குறைவாகப் பெற்றிருந்தாலும், கட்சி மாறிய பின்னரும் தாராபுரம் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

அதே நேரத்தில், 2026 பொதுத் தேர்தலில் தாராபுரத்தில் 46,438 வாக்குகள் பெற்று 3-வது இடத்தில் இருந்த தவெக, தற்போது சத்தியபாமாவை வேட்பாளராக நிறுத்தி முதலிடம் பெற்றிருக்கிறது.

வாக்கு வங்கியை தக்க வைத்த திமுக

திமுகவைப் பொறுத்தவரையில், கடந்த சட்டசபைத் தேர்தலில் வலிமையான கூட்டணி இருந்தது. ஆனால் இந்த இடைத்தேர்தலில் திமுகவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் ஆகியவை தவெகவுக்கு ஆதரவளித்தன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிட்டது.

இப்படி முக்கியமான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை இழந்த நிலையிலும் திமுக வேட்பாளர் சுகன்யா 57,370 வாக்குகளைப் பெற்றுள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிட்ட திமுக வேட்பாளர் இந்திராணி 64,373 வாக்குகளைப் பெற்றிருந்தார். தற்போது கூட்டணிக் கட்சிகள் பிரிந்த நிலையிலும் திமுகவின் வாக்குகள் 7,003 மட்டுமே குறைந்துள்ளன.

அதே நேரத்தில் கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சத்தியபாமா 81,100 வாக்குகளைப் பெற்றிருந்தார். இந்த முறை தவெக சார்பில் போட்டியிட்டு, காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் 66,841 வாக்குகளைப் பெற்றுள்ளார். இதனால் தாராபுரத்தில் கூட்டணிகள் மாறிய பின்னரும் திமுக தனது வாக்கு வங்கியில் பெரும்பகுதியைத் தக்கவைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share