திருவண்ணாமலை ஏரியில் மணல் அள்ளியது தொடர்பான வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அவரது மகன் எ.வ.குமரனுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க கூடாது என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
2025-ம் ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி நடந்த திமுகவின் இளைஞரணி மாநாட்டுக்காக, திருவண்ணாமலை மாவட்டம் மலப்பம்பாடி ஏரியில் அனுமதிபெற்ற அளவைத் தாண்டி, பொக்லைன் (Hitachi) இயந்திரங்கள் மூலம் 20 முதல் 30 அடி ஆழத்திற்கு இரவு பகலாக கனிம வளங்கள் அள்ளப்பட்டன என்றும் இதனால் அரசுக்கு 8 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது அறப்போர் இயக்கத்தின் புகார்.
இந்த புகாரின் பேரில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தங்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்.ஐ.ஆரை (FIR) ரத்து செய்யக்கோரி எ.வ.வேலு, அவரது மகன் எ.வ.குமரன் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை கடந்த அக்டோபர் 7-ம் தேதி விசாரித்த நீதிபதி லட்சுமி நாராயணன், இடைக்கால நிவாரணம் வழங்க மறுத்துவிட்டார். இருவருக்கும் எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனு தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நவம்பர் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதனிடையே இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க கோரி எ.வ.வேலு, அவரது மகன் எ.வ.குமரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை இன்று அக்டோபர் 9-ம் தேதி நீதிபதி லட்சுமி நாராயணன் விசாரித்தார். அப்போது, இந்த மனுக்கள் மீது அக்டோபர் 13-ந் தேதிக்குள் லஞ்ச ஒழிப்புத் துறை பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி லட்சுமி நாராயணன், அதுவரை எ.வ.வேலு மற்றும் அவரது மகன் எ.வ.குமரன் ஆகியோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தினார்.
