கேரள முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன், அவரது மகள் வீணா, மருமகன் முகமது ரியாஸ் ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய கேரள உயர்நீதிமன்றம் இன்று (அக்டோபர் 9) உத்தரவிட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டைல் லிமிடெட் (CMRL) என்ற நிறுவனத்துக்கும் பினராயி விஜயனின் மகள் வீணாவுடன் தொடர்புடைய எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்துக்கும் இடையே நடைபெற்ற பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக முறைகேடு புகார் எழுந்தது.
கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை எக்ஸாலாஜிக் நிறுவனத்துக்கு CMRL நிறுவனம் மாதந்தோறும் பணம் வழங்கியதாகவும், மொத்தம் ரூ.1.72 கோடி வழங்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் இந்தப் பணத்துக்காக எக்ஸாலாஜிக் நிறுவனம் எந்தச் சேவையையும் வழங்கவில்லை என்பதுதான் முக்கியமான குற்றச்சாட்டு.
இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அப்போது கோடிக்கணக்கான ரூபாய் ஹவாலா பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக கடந்த ஆகஸ்ட் 19-ந் தேதி அமலாக்கத்துறை தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 7-ந் தேதி கேரள காவல்துறை டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது. அதில் பினராயி விஜயன், அவரது மகள் வீணா, மருமகன் முகமது ரியாஸ் ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் உடனடியாக வழக்குப் பதிவு செய்யாமல், இந்த விவகாரத்தை குற்றப்பிரிவுக்கு மாற்றி சிறப்புப் புலனாய்வுக் குழு மூலம் முதற்கட்ட விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவிட்டது.
கேரள அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து வழக்கறிஞர் கே.எம்.ஷாஜகான் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அமலாக்கத்துறை ஆதாரங்களுடன் தகவல் கொடுத்த பிறகும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் முதற்கட்ட விசாரணை நடத்துவது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், கேரள அரசின் சட்ட ஆலோசகர்கள் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் பரிந்துரைத்திருந்ததாகவும், ஆனால் அரசு அதற்கு மாறாக செயல்பட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் அமலாக்கத்துறை தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. குற்றம் தொடர்பான தகவல்கள் காவல்துறைக்கு வழங்கப்பட்ட பிறகு உடனடியாக வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை வாதிட்டது.
ஆனால் கேரள அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் இருந்தால் முதற்கட்ட விசாரணை நடத்தலாம் என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஏ.பதருதீன் கடந்த வாரம் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார்.
இந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, கே.எம்.ஷாஜகான் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டார்.
