விஜய் ‘சர்க்காரை’ ஆதரித்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு- உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ்!

Published On:

| By Mathi

CBSE-AIADMK Case

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 21 பேரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் இன்று (அக்டோபர் 9) தள்ளுபடி செய்துள்ளது.

சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவுடன் முதல்வர் விஜய் தலைமையில் தவெக அரசு அமைந்தது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து மே 13-ந் தேதி சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக 144 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர்.

முன்னதாக, தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் அக்கட்சியின் கொறடா அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டிருந்தார். ஆனால் இந்த உத்தரவை மீறி எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ADVERTISEMENT

இதையடுத்து மே 14-ந் தேதி இந்த 25 எம்.எல்.ஏ.க்கள் மீதும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.

இதனிடையே அதிமுக எம்.எல்.ஏ.க்களான ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகிய 4 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இவர்களது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து 21 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பினார்.

அதிமுக தலைமை இந்த 21 எம்.எல்.ஏ.க்களின் செயல்பாட்டை மன்னித்து ஏற்றுக்கொண்டதால், அவர்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கைகளை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கைவிட்டார்.

இதற்கிடையே அதிமுக எம்.எல்.ஏ.க்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய மேலும் 2 பேரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

21 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கைகளை சபாநாயகர் கைவிட்டதை எதிர்த்து வழக்கறிஞர் பி.வி.செல்வகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார்.

கட்சியின் கொறடா உத்தரவை மீறி வாக்களித்த எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்ட பிறகு, அந்த நடவடிக்கைகளை கட்சித் தலைமை திரும்பப் பெற முடியாது என்று அவர் வாதிட்டார்.

ஆனால் கட்சித் தலைமையே சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் செயல்பாட்டை 15 நாட்களுக்குள் மன்னித்து ஏற்றுக்கொண்ட நிலையில், 3-வது நபர் ஒருவர் இதனை எப்படி எதிர்க்க முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதையடுத்து 21 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கையை சபாநாயகர் கைவிட்டது சரியே என கூறி செல்வகுமாரின் பொதுநலன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ்

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பி.வி.செல்வகுமார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு இன்று தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், கட்சியின் உத்தரவை மீறி எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்ததை ஒரு வாக்காளர் என்ற முறையில் எதிர்ப்பதாக வாதிடப்பட்டது.

இதற்கு நீதிபதிகள், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் செயல்பாட்டை அதிமுக தலைமையே மன்னித்து ஏற்றுக்கொண்ட நிலையில், கட்சிக்கு வெளியே உள்ள ஒருவர் இதனை எப்படி எதிர்க்க முடியும் என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழான நடவடிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியும் அதன் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளும்தான் முறையிட முடியும் என்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

அப்போது நீதிபதி ஜாய்மால்ய பாக்சி, அரசியலமைப்புச் சட்டத்தின் புனிதத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதே நேரத்தில் ஜனநாயக அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்து உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது. அதே நேரத்தில், கட்சித் தாவல் தடைச் சட்டம் தொடர்பாக இந்த வழக்கில் எழுப்பப்பட்ட சட்ட கேள்விகளை எதிர்கால வழக்குகளில் பரிசீலிக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share