- எஸ்.வி.ராஜதுரை
2026-ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசை நவநீதம் “நவி” பிள்ளைக்கு வழங்க நோர்வே நோபல் குழு எடுத்த முடிவு, சர்வதேச சட்டம், உலகளாவிய மனித உரிமைகள், உலகளாவிய விதிகளின் அடிப்படையிலான ஒழுங்கமைப்புக்குக் கிடைத்த மகத்தான வெற்றியாகும்.
85 வயதான, புகழ்பெற்ற தென்னாப்பிரிக்க சட்ட வல்லுநரான நவி பிள்ளை, சட்ட நேர்மையின் உச்சகட்டமாகத் திகழ்கிறார். இவர் இனவெறிக்கு எதிரான போராட்டத்தின் சோதனைக் களத்தில் உருவாக்கப்பட்ட ஒரு தொழில் வாழ்க்கையைக் கொண்டவர், அது சர்வதேச நீதியின் மிக உயர்ந்த அவைகளுக்கு உயர்த்தப்பட்டது.

கொடுமையான ஆட்சியின் கீழ் இனவெறிக்கு எதிரான சுதந்திரப் போராளிகளுக்காக வாதாடியது முதல், தென்னாப்பிரிக்காவின் உயர் நீதிமன்றத்தில் முதல் கறுப்பினப் பெண் நீதிபதியாகப் பணியாற்றியது வரை, நிறுவனமயமாக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு அடிபணிய மறுத்ததன் மூலமே பிள்ளையின் தொடக்க கால வாழ்க்கை வரையறுக்கப்பட்டது.
உலகளாவிய சட்டவியலுக்கு அவர் ஆற்றிய பிற்காலப் பங்களிப்புகள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை. ருவாண்டாவுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் (International Criminal Tribunal for Rwanda) தலைவராகப் பணியாற்றுகையில், பாலியல் வன்முறையை இனப்படுகொலையின் ஒரு கூறாக அங்கீகரித்து, சர்வதேச குற்றவியல் சட்டத்தை நிரந்தரமாக மாற்றியமைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னோடித் தீர்ப்பை அவர் வழங்கினார்.

ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஆணையராக (UN High Commissioner for Human Rights) அவரது பதவிக்காலமும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court) மற்றும் சர்வதேச நீதிமன்றத்தில் (International Court of Justice) அவர் ஆற்றிய சேவையும், ஒரே ஒரு அசைக்க முடியாத கொள்கையைத் தொடர்ந்து பிரதிபலித்துள்ளன: அதாவது, நாடுகளின் அளவு, செல்வம் அல்லது புவிசார் அரசியல் நிலைப்பாடு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், சர்வதேச சட்டம் அனைத்து நாடுகளுக்கும் சமமாகப் பொருந்த வேண்டும் என்பதே அது.
எதிர்பார்த்தபடியே, இந்தத் தகுதியான அங்கீகாரம், இஸ்ரேலிய அரசாங்கத்திடமிருந்தும் அதற்கு ஆதரவான பிரச்சார அமைப்புகளிடமிருந்தும் கடுமையான, வன்மமான கண்டனங்களைத் தூண்டியுள்ளது. இந்த விருது சமாதானத்திற்கான நோபல் பரிசை “விகாரமான ஆயுதமாக்கல்” என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் வகைப்படுத்துவதும், நவி பிள்ளை ஏதோ அரசியல் சார்பு கொண்டவராகக் குற்றம் சாட்டுவதும், நவி பிள்ளை சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை புறநிலையாகவும் நடுநிலையாகவும் பிரயோகித்தார் என்ற உண்மையிலிருந்து திசைதிருப்புவதற்கான முயற்சியாகும்.

இந்த அதிருப்தியான எதிர்வினைகள், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தினியப் பகுதியிலும் காஸாவிலும் மனித உரிமை, சர்வதேச சட்டங்கள் ஆகியவை மீறப்பட்டது குறித்த ஐ.நா. விசாரணை ஆணையத்தின் தலைமைப் பொறுப்பை அவர் வகித்ததன் மீது பெரிதும் கவனம் செலுத்துகின்றன. ஆயினும், அந்த ஆணையத்தின் பணி எந்தவிதமான காழ்ப்புணர்ச்சியாலும் உந்தப்படவில்லை. மாறாக ஜெனீவா உடன்படிக்கைகள் மற்றும் நிறுவப்பட்ட சட்டக் கட்டமைப்புகளைக் கடுமையாகப் பின்பற்றியே அந்த விசாரணை ஆணையம் செயல்பட்டது. அவைதான் அட்டூழியங்களைத் தடுக்க உலகம் நம்பியிருக்கும் தரநிலைகள்.
இந்த விமர்சகர்களால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், பிள்ளையின் வாழ்நாள் பணிகளின் பரந்த தன்மைக்கு முன்னால் அடியோடு வீழ்கின்றன. ருவாண்டா முதல் மியான்மர் வரை, உலகம் முழுவதும் குற்றவாளிகளைப் பொறுப்பேற்கச் செய்வதில் அவர் பல பத்தாண்டுகளைச் செலவிட்டுள்ளார். ஸ்ரீலங்காவில் 2009 மே மாதம் அரசு, போராளிகள் ஆகிய இருதரப்பினரும் இழைத்த மனித உரிமை மீறல்களை ஐ.நா.வின் கவனத்துக்குக் கொண்டு சென்றவர் நவி பிள்ளை.
அவரது சாதனை தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் விளைவு என்று கூறுவது, புறநிலையான, நடுநிலையான சர்வதேச நீதி என்ற கருத்தையே நிராகரிப்பதாகும்.
நெதன்யாகுவிடமிருந்தும் தற்போது சர்வதேச சட்ட அமைப்புகளின் கண்காணிப்பில் உள்ளவர்களிடமிருந்தும் வரும் எதிர்ப்பு, நோபல் பரிசு பெற்றவரின் குணத்தைப் பற்றி கூறுவதை விட, இழைக்கப்பட்ட குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளதையே அதிகம் கூறுகிறது.
சர்வதேச சட்ட நிறுவனங்கள், பெரும் புவிசார் அரசியல் அழுத்தத்தை எதிர்கொள்ளும் வரலாற்றின் இந்தத் தருணத்தில், நோபல் குழு தெளிவான செய்தியை அனுப்பியுள்ளது.
நவி பிள்ளையைக் கௌரவிப்பதன் மூலம், பொறுப்புக்கூறல் என்பது சமரசம் செய்ய முடியாதது என்பதையும், உலகளாவிய மனித உரிமைகள் அச்சமோ பாரபட்சமோ இன்றி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் சர்வதேச சமூகம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. முடிவுகளைக் கெடுப்பவர்களின் ஆத்திரமூட்டும் கூக்குரல், அவரது பணி வாழ்க்கையின் மேன்மையையோ அல்லது இந்தப் பரிசின் ஆழ்ந்த நீதியையோ குறைத்துவிட முடியாது. சர்வதேசச் சட்டத்தின் உண்மையான பாதுகாவலரான நவி பிள்ளையுடன் உலகம் துணை நிற்கிறது.
கட்டுரையாளர்

