”இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பாதுகாப்பதன் மூலம் மோடி அரசு மிகப்பெரிய தவறு செய்கிறது; மத்திய அரசின் 200 அதிகாரிகள் தங்களுடன் தொடர்பில் உள்ளனர்; 50 சதவீத போலீசார் தங்களது போராட்டத்தை ஆதரிக்கின்றனர்” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்; வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா கூட்டணி கட்சிகள் இன்று அக்டோபர் 12-ந் தேதி டெல்லியில் போராட்டம் நடத்துகின்றன.
‘சலோ டெல்லி’ என்ற பெயரில் உச்சநீதிமன்றத்தை நோக்கி இந்த பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூசன் கிளப்பில் இருந்து பேருந்துகளில் பாரகம்பா சாலைக்குச் சென்று, உச்சநீதிமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்லத் திட்டமிட்டுள்ளனர்.
இந்தப் பேரணிக்கு முன்னதாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமையகமான இந்திரா பவனில் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு நான் சொல்லும் பதில் ஒன்றுதான். நீங்கள் அப்ரூவராக மாறுங்கள்.. பதவியை ராஜினாமா செய்யுங்கள்… அதுதான் நாட்டுக்கு நீங்கள் செய்யும் சேவையாக இருக்கும். நீங்கள் எந்த மாதிரியான அழுத்தத்தில் இருக்கிறீர்கள் என்பது எங்களுக்குப் புரிகிறது.
உங்கள் மத்திய அரசாங்கத்தின் 200 அதிகாரிகள் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்கள் எங்களுக்குத் தகவல்களை வழங்கி வருகிறார்கள். எங்களது இளைஞர்களை ஏன் அடிக்கச் சொல்கிறார்கள் என்று போலீசாரே கேள்வி எழுப்புகின்றனர். மத்திய உள்துறை அமைச்சகத்திலும் துணை ராணுவப் படைகளிலும் இதே கேள்வி எழுந்துள்ளது. 50 சதவீத போலீசார், நீங்கள் செய்வது சரியானதுதான். தொடர்ந்து செய்யுங்கள் என்று எங்களிடம் கூறுகின்றனர்.
டெல்லி இன்று ஒருநாள் முழுவதும் சிறைபடுத்தப்பட்டுவிட்டது. ஏன் இந்த நடவடிக்கை? டெல்லி ஒரு கோட்டையாக மாற்றப்பட்டுள்ளது. டெல்லி வீதிகளில் 30,000 பாதுகாப்புப் படையினர் எதற்காக நிறுத்தப்பட்டுள்ளனர்? இத்தனை பேருந்துகள், கலவரத் தடுப்பு வாகனங்கள், தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வாகனங்கள் எதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ளன?.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பாதுகாப்பதன் மூலம் மோடி அரசு மிகப்பெரிய தவறு செய்கிறது. இது பொதுமக்களுக்கும் மோடி, அமித்ஷா, ஞானேஷ் குமார் ஆகியோருக்கும் இடையேயான போராட்டம். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
