இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி கட்சிகள் இன்று (அக்டோபர் 12) டெல்லியில் உச்சநீதிமன்றத்தை நோக்கிப் பேரணி (CHALO DELHI) நடத்தத் திட்டமிட்டுள்ளன.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் முறைகேடுகள் நடைபெறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்தக் குற்றச்சாட்டுகளை இந்திய தேர்தல் ஆணையம் மறுத்து வருகிறது.
இந்த விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்; வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை நிறுத்த வேண்டும்; வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ளன.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு டெல்லியின் கன்னாட் பிளேஸ் – பாரகம்பா சாலை சந்திப்பில் இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஒன்று திரள்கின்றனர். அங்கிருந்து உச்சநீதிமன்றத்தை நோக்கி அனைவரும் பேரணியாக செல்லத் திட்டமிட்டுள்ளனர்.
இந்தப் பேரணியில் கட்சி, சாதி, மதம், மாநிலம் என்ற வேறுபாடுகளைக் கடந்து ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாக்க விரும்பும் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தப் பேரணியை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் ராகுல் காந்தியும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த்தை இன்று மாலை 4 மணி முதல் 5 மணிக்குள் சந்திக்க நேரம் கேட்டிருந்தனர். ஆனால், வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட விவகாரங்கள் ஏற்கெனவே உச்சநீதிமன்ற விசாரணையில் இருப்பதால், இந்த விவகாரம் தொடர்பாகத் தனிப்பட்ட முறையில் சந்திக்க முடியாது என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
உச்சநீதிமன்றம் நோக்கிய இன்றைய பேரணியை ஒட்டி, டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கையாக
படேல் சவுக், ஜன்பத், ராஜீவ் சவுக், மண்டி ஹவுஸ், சென்ட்ரல் செக்ரடேரியட், பாரகம்பா சாலை ஆகிய 6 மெட்ரோ நிலையங்களில் இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை பயணிகள் உள்ளே செல்லவும் வெளியேறவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே அக்டோபர் 6-ந் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். அதன் தொடர்ச்சியாக தற்போது உச்சநீதிமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
