மரகதம் குமரவேல், சத்யபாமா பதவியேற்பு!

Published On:

| By Kavi

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா இருவரும் எம்எல்ஏக்களாக இன்று பதவி ஏற்று கொண்டனர். 

2026 சட்டமன்ற பொது தேர்தலில் தமிழக வெற்றி கழகம் ஆட்சியை அமைத்தது. ஆனால் பெரும்பான்மை கிடைக்காததால் மற்ற கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதல்வராக பொறுப்பேற்றார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆறு பேர் தங்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.

இதைத்தொடர்ந்து மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. 

ADVERTISEMENT

இதில் அதிமுகவிலிருந்து தமிழக வெற்றி கழகத்துக்கு வந்த சத்யபாமா (தாராபுரம்), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்) ஆகியோர் மீண்டும் களம் கண்டனர். 

இவர்களின் வெற்றிக்காக முதலமைச்சர் விஜய் கிராமம் கிராமமாக சாலை வலம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ADVERTISEMENT

இந்த சூழலில் இரு தொகுதிகளிலுமே தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றுள்ளது. 

தாராபுரத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுகன்யாவை 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் சத்யபாமா வெற்றி பெற்றார். 

மதுராந்தகம் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் பரந்தாமனை 20,040 வாக்குகள் வித்தியாசத்தில் மரகதம் குமரவேல் வெற்றி பெற்றார். 

இந்நிலையில் சத்யபாமாவும் மரகதம் குமரவேலும் தாங்கள் வெற்றி பெற்ற சான்றிதழ் உடன் தலைமைச் செயலகத்துக்கு வந்து, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் முன்பு எம்எல்ஏக்களாக பதவி ஏற்று கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், வெங்கட ரமணன், ராஜ்மோகன் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

எம்எல்ஏக்களாக பதவி ஏற்றதை தொடர்ந்து இருவரும் முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share