இடைத்தேர்தலில் திமுக தோல்விக்கு என்ன காரணம் தெரியுமா? ‘லிஸ்ட் போட்ட’ மாணிக்கம் தாகூர்

Published On:

| By Mathi

DMK-Congress-Manickam Tagore

தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளின் இடைத்தேர்தலில் திமுக தோல்விக்கு ஊழல், சட்டம் ஒழுங்கு சீரழிவு, பெண்களைப் பற்றி தவறாகப் பேசிய பேச்சுகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளை நடத்திய விதம்தான் காரணம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக மாணிக்கம் தாகூர் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: 21.2.2026 அன்று மதுரையில் நடைபெற்ற திமுக தென் மண்டல வாக்குச்சாவடிக் குழு உறுப்பினர்களுக்கான ‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’ பயிற்சி மாநாட்டில் பேசிய திமுக தலைவர் அண்ணன் மு.க. ஸ்டாலின் அவர்கள், “சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் (S.I.R.) மூலம் பல்வேறு மாநிலங்களில் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். ஆனால், தமிழ்நாட்டில் யாருடைய வாக்குகளையும் நீக்க விடாமல், பம்பரமாக உழைத்த இயக்கம் திமுக. தமிழ்நாடு முழுவதும், திமுக சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்களான BLA2-க்களைச் சந்தித்து வருகிறேன். திமுக சார்பில் 75,032 BLA2-க்கள், 5,50,000 வாக்குச்சாவடிக் குழு உறுப்பினர்கள் (BLC), 75,032 வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் (BDA) உள்ளனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றியை உறுதி செய்யப் போவது இந்த 7 லட்சம் பேர்தான்” என்றார்.

ADVERTISEMENT

ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தற்போது நடைபெற்ற இடைத்தேர்தல்களிலும் மக்கள் திமுகவை முற்றிலுமாகப் புறக்கணித்துத் தோல்வியைத் தந்தவுடன், இப்போது எஸ்.ஐ.ஆர். மூலம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதே தங்களது தோல்விக்குக் காரணம் என்று திமுகவின் செய்தித் தொடர்பாளர்கள் பேசி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் எவ்வாறு நடைபெற்றன என்பதற்கு, அன்றைய முதலமைச்சராக இருந்த அண்ணன் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களே மதுரைக் கூட்டத்தில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார்.

ADVERTISEMENT

தேர்தலுக்கு முன்னால் “வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைச் சிறப்பாக முடித்துவிட்டோம், எந்தப் பிரச்சனையும் இல்லை” என்று கூறிவிட்டு, தேர்தல் முடிந்து மக்கள் தீர்ப்பு எதிராக வந்த பிறகு மட்டும் வாக்காளர் திருத்தப் பணி மீது பழியைப் போடுவது என்ன வகையான அரசியல்?

குடியரசுத் தலைவர் அவர்களிடம் அளிக்கப்பட்ட மனுவின் 4-வது கோரிக்கையில் கூட, எங்கு வாக்குத் திருட்டிற்கான திட்டவட்டமான ஆதாரங்கள் (Conclusive evidence of vote chori) சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோ, அந்த மாநிலங்களின் தேர்தல்களை மட்டுமே ரத்து செய்யக் கோரப்பட்டுள்ளது!

ADVERTISEMENT

மேற்கு வங்கத்தில் அப்போதைய முதலமைச்சர் மம்தா பானர்ஜி எஸ்.ஐ.ஆரைச் செயல்படுத்த மறுத்தபோதிலும், ‘ஊடுருவல்காரர்கள்’ என்ற பெயரைப் பயன்படுத்தி வலுக்கட்டாயமாகப் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அதேபோல அசாமிலும் பீகாரிலும் முறைகேடுகள் நடைபெற்றன; மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் வேறு வகையான வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளது! ஆனால், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய இடங்களில் எஸ்.ஐ.ஆர். தொடர்பாக எந்தப் புகாரும் இல்லை.

வரலாறு காணாத ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பெண்களுக்கு எதிரான தவறான பேச்சுகள், கூட்டணிக் கட்சிகளை அவமதித்து தான் திமுகவின் உண்மையான தோல்விக்குக் காரணம்!

இப்போதுகூட எஸ்.ஐ.ஆரை எதிர்ப்பதாக திமுக செய்தித் தொடர்பாளர்கள் பேசி வருகிறார்களே தவிர, தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி நடைபெறும் போராட்டத்தில் திமுக எம்பிக்கள் பங்கேற்கவில்லை. தமிழ்நாட்டில் உள்ள இடதுசாரிக் கட்சிகள், விசிக, மதிமுக ஆகிய கட்சிகளின் தலைவர்கள் டெல்லிப் போராட்டத்தில் கலந்துகொண்டு கைதானார்கள். ஆனால், திமுக சார்பில் ஒரு எம்பி கூட பங்கேற்கவில்லை. இதற்கு என்ன காரணம்? எஸ்.ஐ.ஆருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றால் பாஜகவை பகைத்துக்கொள்ள நேரிடும் என்ற அச்சம்தான் இதற்குக் காரணம்.

தமிழ்நாட்டின் நலன், ஜனநாயகம், மதச்சார்பின்மை ஆகியவற்றில் திமுகவுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். மாறாக, தமிழ்நாட்டில் வாக்காளர்கள் நீக்கப்படுவதைத் தடுத்துவிட்டதாகப் பேசிவிட்டு, இப்போது வாக்காளர்கள் நீக்கப்பட்டதே திமுகவின் தோல்விக்குக் காரணம் என்று கூறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். இவ்வாறு மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share