தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும் – நம்பிக்கை வாக்கெடுப்பில் வன்னி அரசு

Published On:

| By Pandeeswari Gurusamy

VCK

தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய்யின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் உரையாற்றி வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்றக்குழு தலைவர் வன்னி அரசு ஆதரவு தெரிவித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகளின் ஆதரவோடு பொறுப்பேற்றிருக்கும் இந்த அரசு, நம்பிக்கை வாக்களிப்பில் வெற்றி பெற்று ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதற்காக முன்கூட்டியே விடுதலை சிறுத்தைகளின் சார்பில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். விடுதலை சிறுத்தைகள் கட்சியும், இடதுசாரி கட்சிகளும், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுத் தேர்தலைச் சந்தித்தோம். ஆனால் இந்தத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்குப் பெரும்பான்மை கிடைத்து ஆட்சி அமைத்துள்ளது.

ADVERTISEMENT

பாஜகவின் மறைமுக செயல் திட்டமான ஆளுநர் ஆட்சியைக் கொண்டுவருவதற்கான முயற்சியைத் தடுக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துக் கொள்கிறது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவு முக்கியமானதாக இருந்தது என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். எமது ஆதரவைப் பெற்ற இந்த அரசு மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி, மாநில உரிமைகளைக் காத்து, மிகச் சிறந்த அரசு என்ற பெயரைப் பெற்றுச் சிறப்பிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகளின் சார்பில் வாழ்த்துகிறோம்.

இந்த அரசு ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் என அனைவருக்குமான அரசாக இருக்கும் என்பதை நம்முடைய முதல்வர் அவர்கள் தனது நடவடிக்கைகள் மூலம் உணர்த்தியிருக்கிறார். முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரையும் வீடு தேடிச் சென்று அவர்களது வாழ்த்துகளைப் பெற்றது, தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கே நல்ல முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முதல்வருக்கு விடுதலை சிறுத்தைகளின் சார்பில் எனது பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

எமது தலைவர் எழுச்சித் தமிழர் தொல்காப்பியன் திருமாவளவன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றமைக்கு விடுதலை சிறுத்தைகளின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளித்திருக்கிறது.” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share