ராஜகுருவா இருந்தா பெர்சனலா வச்சுக்கணும் – முதல்வர் விஜயை முகத்திற்கு நேராக விளாசிய பிரேமலதா

Published On:

| By Pandeeswari Gurusamy

Premalatha

தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய்யின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் உரையாற்றி வருகின்றனர்.

அந்த வகையில், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், “பேரவைத் தலைவர் அவர்களே, முதலமைச்சர் அவர்களே, எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே… மதச்சார்பற்ற வெற்றிக் கூட்டணியினுடைய தலைவர் அண்ணன் ஸ்டாலின் அவர்களுக்கும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்களை வணங்கி, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அவையிலே இன்றைக்கு மிக முக்கியமான நாளான இந்த நாளில் என்னுடைய உரையிலே…

ADVERTISEMENT

நேற்றே முதலமைச்சர் அவர்களுக்கு இன்றைக்குப் பெரும்பான்மையை நீங்கள் நிரூபிக்க வேண்டும் என்று என்னுடைய வாழ்த்துக்களை நேற்றே நான் பதிய வைத்திருக்கிறேன். அதேபோல முதலமைச்சர் அவர்கள் செய்த நல்ல விஷயங்களையும் நாம் பாராட்டியிருக்கிறோம். எதிர்க்கட்சிகளை எதிரிக் கட்சியாக நினைக்காமல் அனைவரையும் சந்தித்து அரசியலில் ஒரு மாண்பையும் மரபையும் நீங்கள் ஏற்படுத்தியிருக்கீங்க, வரவேற்கத்தக்கது.

அதுபோல உங்களுடைய முதல் அறிவிப்பிலேயே ‘சிங்கப்படை’ பெண்களைப் பாதுகாக்கவும், அதேபோல மதுக்கடைகளை மூடுவோம் என்று சொன்னதும் மக்களால் வரவேற்கப்பட்டது. அந்த வகையில் முதலில் 717 மதுக்கடைகளை மூடியது ஒட்டுமொத்த தமிழக மக்களால் வரவேற்கப்பட்டது. கோயில்கள் மற்றும் பள்ளி வளாகங்கள் அருகில் இருந்த மதுக்கடைகளை முதல் முறையாக நம்ம வந்து ஃபர்ஸ்ட் ஸ்டெப்ல இன்னைக்கு மூடியிருக்கோம். அடுத்தது இன்றைக்கு மீனவர்களைப் பாதுகாக்க ஒரு அறிவிப்பு அரசாங்கத்தின் மூலம் வந்திருக்கிறது, அதையும் தேமுதிக வரவேற்கிறது.

ADVERTISEMENT

இவையெல்லாம் இருப்பினும் முதல்வர் அவர்களே, நீங்கள் அன்றைக்குப் பதவியேற்ற அன்றைக்குச் சொன்னது—உங்களுடைய ஆட்சி வெளிப்படையான ஆட்சியாக இருக்கும், மக்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் ஒரு முன்னுதாரணமான ஆட்சியாக இருக்கும் அப்படின்னுதான் நீங்க அன்னைக்குச் சொன்னீங்க. அதுபோல அரச குடும்பத்திலிருந்து வந்தவரல்ல.. ஒரு எளிமையான குடும்பத்திலிருந்து வந்தவர்தான் என்பதை முதலமைச்சராக நீங்கள் பதவியேற்றதை அனைவருமே வரவேற்றோம், மக்களும் வரவேற்றனர். நாம் சொல்லும் சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அவையிலே இன்றைக்குப் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய தருணத்தில், முதல் முறையாக மனவேதனையோடு நான் பதிய வைக்கிறேன்—இங்கு ‘குதிரை பேரம்’ நடந்ததாக இன்றைக்கு எதிர்க்கட்சிகள் அத்தனை பேருமே அதை வந்து சொல்லும் பொழுது, இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் நடக்காத ஒரு விஷயம், அதுவும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அவையிலே, இந்த முக்கியமான நாளிலே அதைப் பற்றிப் பேச வேண்டிய ஒரு நிலையை ஏற்படுத்தியதற்காக உண்மையில் நான் மனம் வேதனைப்படுகிறேன்.

ADVERTISEMENT

அதேபோல முதலமைச்சர் அன்னைக்குச் சொன்னாரு, ‘இங்க முகம் மூடி யாரும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை, அனைவருக்கும் ஒரு வெளிப்படையான ஆட்சிதான் செய்வோம்’ என்று. அப்படியிருக்கையில் முதல்வர் அவர்களைச் சந்திக்க யார் முகத்தை மூடிக்கொண்டு அன்று வாகனத்தில் சென்றார்கள் என்பதை நிச்சயமாக மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதை இந்த நேரத்திலே நான் கேட்டுக்கொள்கிறேன். ஏன்னா, அதற்குக் காரணம் குதிரை பேரம் என்றால், இதைவிட ஒரு தலைகுனிவு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அவையில் எதுவுமே கிடையாது. நிச்சயம் முதல்வர் அதற்குப் பதில் சொல்வார் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

அதேபோல ‘அரசு குடும்பத்திலிருந்து நான் வந்தவன் இல்லை’ என்று முதல்வர் சொல்லும் பொழுது வரவேற்றார்கள் அனைவரும். ஆனால் இன்றைக்கு அவருடைய ராஜகுருவாக இருப்பவரை மிஸ்டர் ரத்தன் பண்டிட் என்பவரை அரசியல் சிறப்பு அதிகாரியாக அரசு வேலையில் அமர்த்தியதை ஒட்டுமொத்த தமிழக மக்கள் சார்பாக வன்மையாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அவையில் நான் அதைக் குறிப்பிடக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அப்படி உங்களுக்கு ராஜகுருவா இருந்தா உங்க பெர்சனலா அவரை வச்சுக்கணும். பட் அவரை வந்து அரசு உயர் பதவியிலே கொண்டு வந்து… இளைஞர்களை நம்பி மக்கள் வாக்களிச்சிருக்காங்க. இந்த இளைஞர்களுக்கு நீங்கள் என்ன உதாரணத்தைச் சொல்கிறீர்கள்? என்ன வரலாற்றை நீங்கள் சொல்ல விரும்புகிறீர்கள்? வருங்கால இளைஞர்களுக்கும் எதிர்காலத்திற்கும் இதன் மூலம் என்ன மெசேஜ் நீங்க சொல்றீங்க அப்படிங்கறத நிச்சயம் தெளிவுபடுத்தணும். ஏன்னா இன்னைக்கு மக்கள் ஜனநாயகத்தை நம்பி இளைஞர்கள் கையில ஆட்சியை கொடுத்திருக்கிறார்கள். அப்ப வருங்காலம் வந்து இளைஞர்களும் வருங்காலத்திற்கும் இந்த அரசு ஒரு முன் உதாரணமா இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரு கோரிக்கை என்பதை இந்த நேரத்தில் நான் ஆணித்தரமாகப் பதிய வைக்கிறேன்.

அதுமட்டுமல்ல இந்த ஆட்சி மக்களுக்கான ஒரு நேர்மையான ஆட்சியா இருக்கணும், ஜனநாயகத்தின் மீதும் மக்கள் மீதும் நம்பிக்கை கொண்டு, ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்று சொல்லக்கூடிய அளவு எதிர்காலத்தில் இந்த ஆட்சி நிச்சயமாக இளைஞர்களுக்கும் எதிர்காலத்திற்கும் நல்ல வகையிலே எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, நான் சார்ந்த இயக்கமான தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாகவும் எங்கள் நிறுவனத் தலைவர், அன்புத் தலைவர் கேப்டன் அவர்களை வணங்கி விடைபெறுகிறேன்.” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share