நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு சிபிஎம் ஆதரவு -செல்லசுவாமி

Published On:

| By Pandeeswari Gurusamy

CPM

தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை கூடியதும் முதலமைச்சர் விஜய் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு முன்மொழிந்தார்.

இதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் த.வெ.க. அரசுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. சட்டமன்றக்குழு தலைவர் செல்லசுவாமி பேசுகையில், “தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கும் வகையில் தமிழக மக்கள் தீர்ப்பு வழங்கவில்லை. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு 108 சட்டமன்ற உறுப்பினர்களை வழங்கி, தனிப்பெரும் கட்சியாகத் தமிழக மக்கள் தேர்வு செய்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்தியா முழுவதும் மக்களைப் பிளவுபடுத்தி பிளவு அரசியல் ஆதாயம் தேடிவரும் பிளவுவாத சக்திகளை இந்தத் தேர்தலில் தமிழக மக்கள் முற்றாக நிராகரித்துள்ளனர்.தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்தைப் பதவியேற்க அழைக்க வேண்டிய கடமையை நிறைவேற்றாமல், தமிழக ஆளுநர் மறைமுகமாகக் குடியரசுத் தலைவர் ஆட்சியை நோக்கி நகர்வதற்கான சதித் திட்டத்தை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டார்.

தமிழக மக்களின் தீர்ப்புக்கு மாறாகக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்கப்படும் ஆபத்திலிருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்றும் நோக்கத்தோடும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மக்கள் நலன் மற்றும் மாநில வளர்ச்சி என்ற குறிக்கோளுடன் நிலையான ஆட்சி அமைக்கத் தனக்கு ஆதரவளிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதென முடிவு செய்தது.

ADVERTISEMENT

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில், இந்த அரசு மக்கள் நலனுக்கான திட்டங்களை அறிவிக்கும்போது அதனை வரவேற்கும். அதே சமயம், மக்களுக்குப் பாதகம் அளிக்கும் முடிவுகள் எடுக்கப்பட்டால் அதனை எதிர்த்துக் குரல் கொடுப்பதற்கும் தயங்காது.அதேபோன்று, தமிழகத்திற்கு ஒன்றிய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய வரி வருவாயில் உரிய பங்கு, பேரிடர் நிவாரணம், கல்விக்கான நிதி உள்ளிட்டவற்றைப் பெறுவதற்கு நாங்கள் இந்த அரசுக்கு உறுதுணையாக இருப்போம்.

இந்த அரசுக்கு ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதோடு, மேலும் இந்த அரசாங்கம் மதச்சார்பின்மை, எளிய மக்களை உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி, கூட்டாட்சி மற்றும் சமூக நீதி கோட்பாடுகளை உயர்த்திப் பிடிக்கவும், தமிழக சட்டமன்றத்தின் பாரம்பரிய மரபுகளையும் மாண்புகளையும் காப்பாற்றவும், ஏழை எளிய உழைப்பாளி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் திறம்படச் செயல்படவும் வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த அரசுக்கு முழுமையான ஆதரவைத் தெரிவிக்கிறோம்” என்றார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share