தவெகவின் ’மெகா கூட்டணி’.. திருமாவளவனிடம் விஜய் சொன்ன ’அந்த’ தகவல்!

Published On:

| By Mathi

VCK Chief Thirumavalavan Meets CM Vijay

தவெகவின் தோழமை கட்சிகளின் அடுத்த கூட்டத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தம்மிடம் தவெக தலைவரும் முதல்வருமான விஜய் கூறியதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய்யை இன்று (ஆகஸ்ட் 18) தொல்.திருமாவளவன் சந்தித்து பேசினார். இச்சந்திப்புக்குப் பின்னர் தலைமை செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்று உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டுக்கு வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார் நம்முடைய முதலமைச்சர் மாண்புமிகு திரு.ஜோசப் விஜய் அவர்கள், அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் ஆட்சி அமைத்து 100 நாட்கள் வெற்றிகரமாக கடந்திருக்கிறது, 100 நாட்கள் வெற்றிகரமான ஆட்சியை நடத்தியிருக்கிற முதலமைச்சர் அவர்களை வாழ்த்துவதற்கும், இந்த ஆட்சி ஐந்தாண்டு காலம் எந்த இடையூறும் இல்லாமல் தொடர்வதற்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு என்பதை உறுதிப்படுத்துவதற்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்தித்து பேசினோம் நன்றி தெரிவித்தோம்!

ADVERTISEMENT

தமிழ்த்தாய் வாழ்த்துக்குத்தான் அனைத்து நிகழ்ச்சியிலும் முதலிடம் என்பதை உறுதிப்படுத்தி தீர்மானம் கொண்டு வந்ததற்காகவும் எங்கள் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டோம். அதேபோல நாடாளுமன்ற தொகுதி வரையறை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றி தமிழ்நாட்டில் அரசியல் ரீதியான வேறுபாடுகள் கட்சிகளுக்கு இடையே இருந்தாலும் தமிழர் அனைவரும் ஒரே அணியில் இருக்கிறோம் என்பதை இந்திய ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு உணர்த்திய அந்தப் பாங்கையும் நாங்கள் சுட்டிக் கட்டி அவருக்கு எங்கள் பாராட்டுகளை தெரிவித்தோம்.

தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டு தீர்மானங்களையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வழங்கினோம். ஏனென்றால் மாநில உரிமைகள் தொடர்பான அனைத்து தளங்களிலும் தமிழ்நாடு மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை 125 தீர்மானங்களாக வரையறுத்து இருக்கிறோம். அந்த தீர்மானங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் மாநில சுயாட்சியை ஓங்கி உரத்து முழங்குவது என்பதாகும். மாண்புமிகு முதலமைச்சர் மாநில சுயாட்சியை தமிழ்நாடு அரசு தவெக அரசு வலுவாக முன்னெடுக்க வேண்டும்; பேரறிஞர் அண்ணா, கலைஞர் காலத்தில் இந்த கோரிக்கை வலுவாக பேசப்பட்டது போல் அந்த தலைவர்களை தொடர்ந்து நீங்களும் அதே வழியில் மாநில சுயாட்சிக்கான குரலை ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதையும் முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.

ADVERTISEMENT

தமிழ்த்தேசியம் என்பது வெறும் மொழி உணர்வு இனஉணர்வு அல்ல பிற மொழி பேசும் இனத்திற்கு எதிரான வெறுப்பு அரசியலும் அல்ல. சாதி ஒழிப்பு, மதச்சார்பின்மை, மாநில சுயாட்சி, அகில இந்திய அளவில் தேசிய இனங்களின் ஐக்கியம் ஆகியவற்றை முன்னிறுத்துவது தான் தமிழ்த்தேசியம் என்பதை உணர்த்தும் மாநாடாக இந்த மாநாடு ஒருங்கிணைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறோம். அந்த வகையில் இந்த சந்திப்பு மிகவும் சிறப்பாக அமைந்தது. கூடுதலாக மேகமலை மற்றும் அமுதன் படுகொலை ஆகிய பிரச்சனைகளையும் முதலமைச்சரின் பார்வைக்கு கொண்டு சென்றோம்.

மேகமலையில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து அங்கே வசித்து வரும் மக்களை விவசாயம் செய்து வரும் மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தப்படக்கூடாது. அவர்களுக்கு எதிராக அளிக்கப்பட்டிருக்கிற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யும் என்ற கருத்தை ஏற்கனவே சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. நிர்மல் குமார் அவர்கள் கூறியிருக்கிறார். அதனை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். சீராய்வு மனுவை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் அந்த மக்களுக்கு உரிய நீதியை பெற்று தர வேண்டும் என்பதையும் முதலமைச்சரிடம் எடுத்து சொல்லி இருக்கிறோம்.

ADVERTISEMENT

அமுதன் படுகொலையில் போதை பொருள் புழக்கம் இருப்பதாக அமுதனின் பெற்றோர் உள்ளிட்ட பலரும் தொண்டு நிறுவனங்களைச் சார்ந்த பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிற நிலையில் அந்த குறிப்பிட்ட வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்பதையும் தாண்டி போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு போதை பொருள் ஒழிப்பு அதிரடி படை ஒன்றை உருவாக்கிட வேண்டும் அதற்கு முதலமைச்சரின் கூடுதல் கவனம் தேவை என்பதையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பிலே முன் வைத்திருக்கிறோம்.

செய்தியாளர்கள் கேள்விகளும் திருமாவளவன் பதில்களும்:

கேள்வி: விசிகவின் அடங்க மறு- அத்துமீறி என்ற கோஷம் இப்போதைய ஆட்சியில் குறைந்துள்ளதா?

பதில்: நாங்கள் நாங்களாகத்தான் இருக்கிறோம். எங்கள் வீரியம் எங்கேயும் நீர்த்துப் போகவில்லை. திட்டமிட்டு சிலர் அப்படி எங்களுக்கு எதிராக ஒரு உளவியல் சிக்கலை உருவாக்குவதற்காக பரப்புகிறார்கள். இது வெறும் அவதூறு, அவ்வளவுதானே தவிர எந்த இடத்தில் எப்படி எங்கள் குரலை உயர்த்த வேண்டுமோ அப்படி நாங்கள் உயர்த்தி கொண்டுதான் இருக்கிறோம்.

மக்களின் பார்வையிலிருந்துதான் எங்கள் நிலைப்பாடுகளை எடுக்கிறோம். எங்கள் செயல் திட்டங்களை வரையறுக்கிறோம். தனிப்பட்ட முறையில் எங்களின் நலன்களில் இருந்து, கட்சியின் நலன்களில் இருந்து நாங்கள் எந்த முடிவையும் எடுப்பதில்லை. எனவே உரிய நேரத்தில், உரிய பிரச்சினைகளில் நாங்கள் உரிய குரலை தொடர்ந்து எழுப்பி வருகிறோம்.

கேள்வி: திமுகவுடனான கூட்டணி; தவெகவுடன் கூட்டணி- எப்படி இருக்கிறது?

பதில்: இந்த ஒப்பீடு தேவையில்லாதது. தவெகவோடு நாங்கள் கைகோர்த்து இருக்கிறோம். தவெக ஆட்சி அமைப்பதற்கு எங்கள் ஆதரவை நாங்கள் வழங்கினோம். அந்த அடிப்படையில் எங்களையும் அமைச்சரவையில், கூட்டணி அமைச்சரவையில் இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தவெகவின் அனைத்து தோழமை கட்சிகளின் சார்பில் கூட்டணி அமைப்பது தொடர்பான முதல் கூட்டம் முதல் கட்டமாக நடந்து முடிந்துள்ளது. அது குறித்தும் இப்போது முதலமைச்சரோடு நாங்கள் பேசினோம்.

நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்த பிறகு, அந்த அடுத்த கூட்டத்தை ஒருங்கிணைப்பதற்கு ஏற்பாடுகள் நடக்கிறது என்று முதலமைச்சர் சொல்லியிருக்கிறார். தவெகவோடு தொடர்ந்து இணைவோம், தொடர்ந்து இணைந்து பயணிப்போம் என்பதை நேற்றைய மாநாட்டிலும் நாங்கள் உறுதிப்படுத்தி இருக்கிறோம்.

ஆளுங்கட்சிகளோடு பயணித்தோம், இனி ஆளுங்கட்சியாக பரிணமிப்போம் என்கிற ஒரு முழக்கத்தையும் இந்த மாநாட்டிலே நான் முன்வைத்தேன்.

இன்றைக்கு கூட்டணி அரசில் நாங்கள் அங்கம் வகிப்பதன் மூலம் நாங்களும் ஒரு ஆளுங்கட்சி என்கிற அடையாளத்தைப் பெற்றிருக்கிறோம் என்பது ஒரு வளர்ச்சி. இந்த வளர்ச்சியை தமிழநாட்டு மக்கள் எமக்கு வழங்கி இருக்கிறார்கள். அவர்கள் விருப்பப்படி எங்கள் அரசியல் நிலைப்பாடு இருக்கும்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share