தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினருமான வன்னி அரசும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஷாஜஹானும் இன்று (மே 22) அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.
ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம், தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஆகியவை பாடப்பட்டன. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில், முதல்வர் விஜய் முன்னிலையில் வன்னி அரசு மற்றும் ஷாஜஹான் இருவரும் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக்கொண்டனர். ஆளுநர் ஆர்லேகர் அவர்களுக்குப் பதவிப்பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
கூட்டணி ஆட்சியின் பின்னணி:
கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. தனிப் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற சூழலில், விஜய் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, தவெக ஆட்சி அமைக்கக் காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை அறிவித்தது.
மேலும், திமுக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விசிக, ஐ.யூ.எம்.எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் விஜய் கடந்த மே 10-ஆம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்றார். இதைத் தொடர்ந்துசட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ், விசிக, ஐ.யூ.எம்.எல் உள்ளிட்ட கட்சிகள் தவெக அரசுக்கு ஆதரவு அளித்தன. இதில் திடீர் திருப்பமாக, அதிமுகவின் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தரப்பினரும் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
அமைச்சரவை விரிவாக்கம்
முதற்கட்டமாக முதலமைச்சர் விஜய்யுடன் 10 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், நேற்று (மே 21) நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில் 23 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகியோரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இதன் மூலம் 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி தமிழக அமைச்சரவையில் மீண்டும் இடம் பிடித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, இன்று ஐ.யூ.எம்.எல் கட்சியைச் சேர்ந்த ஷாஜஹான் மற்றும் விசிகவைச் சேர்ந்த வன்னி அரசு ஆகிய இருவரும் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளதால், தற்போதைய தவெக ஆட்சியில் கூட்டணிக் கட்சிகளும் நேரடியாகப் பங்கேற்கும் சூழல் உருவாகியுள்ளது.
அரசியல் வரலாற்றில் புதிய மைல்கல்:
தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் இந்த அமைச்சரவை விரிவாக்கம் மிக முக்கியமான ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. “ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு” என்ற கோஷத்தை நீண்டகாலமாக முன்வைத்து வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தனது அரசியல் வரலாற்றில் முதன்முறையாகத் தமிழக ஆட்சியில் நேரடியாகப் பங்குபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க சூழல் இதன் மூலம் சாத்தியமாகியுள்ளது.
