காங்கிரஸ் தவெகவுடன் இணைந்திருப்பது திமுகவிற்கு செய்த துரோகம் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,“ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்தின்படி செயல்படக் கூடியவர். இதில் விருப்பு வெறுப்புகள் எதுவும் கிடையாது. சட்டம் என்ன சொல்கிறதோ, இருக்கும் அதிகாரம் என்னவோ அதைப் பின்பற்ற வேண்டும்” என்றார்.
காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி வைத்தது குறித்த கேள்விக்கு, “காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் வாழ்வு கொடுத்துள்ளது என்றால் அது திராவிட முன்னேற்றக் கழகம் தான். இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு சில நாட்களுக்குள் காங்கிரஸ் இதுபோன்ற முடிவுகளை எடுக்கிறார்கள் என்றால், எந்த அளவுக்கு காங்கிரஸ் திமுகவிற்கு துரோகம் செய்வதற்காகக் கூட இருந்திருப்பார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம். அவர்கள் அதிகாரமும் பதவியும் எங்கு கிடைக்கும் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.
திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாவது குறித்த கேள்விக்கு, “எனது தனிப்பட்ட நிலைப்பாடு இதில் எதுவும் இல்லை. எங்களுடையது தேசிய கட்சி. நாங்கள் எப்படி சென்னை கமலாலயத்தில் இருந்தா முடிவெடுக்க முடியும். கட்சியின் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதைத்தான் நாங்கள் சொல்ல முடியும்” என்றார்.
பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டப்பேரவை தான், ஆளுநர் மாளிகை அல்ல எனச் சொல்வது குறித்த கேள்விக்கு, “அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லையே. சட்டப்படி ஆளுநர் கேட்கும் ஆவணங்களை கொடுக்க வேண்டும் இல்லையா? இதைக் கூட கேட்கக்கூடாது என்று எப்படிச் சொல்ல முடியும்? என்றார். மேலும் “தவெக கட்சியினரே அமைதியாக இருக்கும் போது காங்கிரஸ் போராட்டம் நடத்துவது ஏன்? பாஜக மீது காங்கிரஸ் குற்றம் சாட்டுவது ஏன்? காங்கிரஸ் விரக்தியில் போராட்டம் நடத்துகிறது” என்றார்.
