திமுகவுக்கு குட்பை! தமிழக கூட்டணி கட்சிகளின் முதுகில் குத்திய காங்கிரஸின் வரலாறு!

Published On:

| By Mathi

Congress DMK AIADMK Alliance

மிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தவெக ஆட்சி அமைக்க மெஜாரிட்டிக்கு மேலும் 10 எம்.எல்.ஏக்கள் தேவை.

இந்த நிலையில் தவெக ஆட்சி அமைக்க 5 எம்.எல்.ஏக்களைக் கொண்ட காங்கிரஸ் தமது ஆதரவை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அத்துடன் இனிவரும் உள்ளாட்சித் தேர்தல், மக்களவைத் தேர்தலிலும் தவெகவுடன் கூட்டணி என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது காங்கிரஸ்.

இந்த அறிவிப்பின் மூலம் 20 ஆண்டுகளாக நீடித்து வந்த திமுக -காங்கிரஸ் கூட்டணி உறவு முடிவுக்கு வந்துள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில் தமிழ்நாட்டில் 1971 முதல் இன்று வரை காங்கிரஸ் கட்சி மாறி மாறி கூட்டணி வைத்த வரலாற்றை நமது மின்னம்பலம் வாசகர்களுக்காக தருகிறோம்.

1969-ம் ஆண்டு தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா மறைவுக்குப் பின்னர் முதல்வரானார் கலைஞர்.  அப்போது திமுகவில் கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன், எம்ஜிஆர் உள்ளிட்டோர் முதன்மை தலைவர்களாக இருந்தனர்.

ADVERTISEMENT

1971-ல் திமுக- காங்கிரஸ் கூட்டணி

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை பெரும் பிளவை சந்தித்த நேரம். 1969-ல் காங்கிரஸ் கட்சியான இந்திரா காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ் என இரண்டாக உடைந்தது. அதாவது ஸ்தாபன காங்கிரஸ் (INC-O) என்றும், இந்திரா காங்கிரஸ் (INC-R) என்றும் அழைக்கப்பட்டன.

தமிழ்நாட்டில் சி.சுப்பிரமணியம், இந்திரா காங்கிரஸுக்கு தலைமை வகித்தார். பெருந்தலைவர் காமராஜர் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸ் செயல்பட்டது. அப்போது காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ்தான் வலிமையானதாகவும் இருந்தது.

1971 மக்களவைத் தேர்தலின் போது ’இந்திரா காங்கிரஸ்’ – திமுக இடையே கூட்டணி அமைந்தது. அப்போது மக்களவைக்கும் சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என  தமது பதவிக் காலம் முடிவதற்கு ஓராண்டுக்கு முன்னரே 1971-ல் முதல்வர் பதவியை கலைஞர் ராஜினாமா செய்தார். இதனால் 1971-ல் மக்களவைக்கும் தமிழ்நாடு சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற்றது.

1971 மக்களவைத் தேர்தலில் தமிழகம்- புதுவையில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகளை கலைஞர் ஒதுக்கினார். திமுக 24 தொகுதிகளில் போட்டியிட்டது.

அதே நேரத்தில் சட்டசபை தேர்தலில்  இந்திராவின் காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் போட்டியிடவில்லை.

இந்த 1971-ம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் சிபிஐ, பார்வார்டு பிளாக் உள்ளிட்டவை இடம் பெற்றன. 203 தொகுதிகளில் போட்டியிட்ட  கலைஞர் தலைமையிலான திமுக 184 இடங்களைக் கைப்பற்றி சரித்திரம் படைத்தது.

இந்திரா காந்தியின் விளையாட்டும் திமுக பிளவும்

டெல்லியில் பிரதமராக இருந்தவர் இந்திரா காந்தி. அவரைப் பொறுத்தவரை மாநிலங்களில் ஒரு கட்சி அல்லது ஒரு தலைவர் வலிமையானவராக உருவெடுப்பதை எப்போதும் விரும்பியது இல்லை. அதனால் மேற்கு வங்கத்தில் சித்தார் சங்கர் ரே., கர்நாடகாவில் தேவராஜ் அர்ஸ் உள்ளிட்டோரை ஓரம்கட்டினார்.

தமிழ்நாட்டில் மிக வலிமையாக இருந்த திமுகவையும் உடைத்தவர் இந்திரா காந்தி அம்மையார். இதற்கு துணையாக இருந்தவர்கள் காங்கிரஸின் மோகன் குமாரமங்கலமும் கம்யூனிஸ்ட் கட்சியின் கல்யாணசுந்தரம், பால தண்டாயுதம் போன்றவர்கள்.

வருமான வரித்துறை மூலமாக திமுகவின் முன்னணி தலைவராக இருந்த நடிகர் எம்ஜிஆரை இலக்கு வைத்தார் இந்திரா காந்தி அம்மையார். வருமான வரித்துறையின் பிடியில் சிக்கிய எம்ஜிஆர், இந்திராவின் கட்டளைக்கு ஏற்ப திமுகவில் கலகமூட்ட திமுக இரண்டாகப் பிளவுபட்டது.

இன்றைய பாஜகவின் ”உறவாடி கெடுக்கும்” கொள்கைக்கு மூத்த முன்னோடி முன்னத்தி ஏர் காங்கிரஸ்தான். இதன் விளைவாக அண்ணா திமுக உதயமானது.

கலைஞர் ஆட்சியை டிஸ்மிஸ் செய்த இந்திரா

1977-ம் ஆண்டு தேர்தல்.. இந்திராவின் அவசரநிலை பிரகடனத்தை கலைஞர் முழுவீச்சில் எதிர்த்ததால் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.

தமிழ்நாடு 1977-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் (மார்ச் மாதம்), சட்டசபை தேர்தல் (ஜூன் மாதம்) இரண்டையும் எதிர்கொண்டது.

இந்திரா காந்தி- எம்ஜிஆர்

1977-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது நடந்த ஒரு சம்பவம் மிக முக்கியமானது. அந்த தேர்தலில் நாடு முழுவதும் இந்திரா காந்திக்கு பெரும் எதிர்ப்பு அலை வீசியது. இதனால் இந்திரா காந்தி அம்மையாரை தஞ்சாவூர் மக்களவை தொகுதியில் நிறுத்தி வெற்றி  பெற வைக்கிறேன் என உறுதி  அளித்தார் எம்ஜிஆர். ஆனால் திடீரென திமுகவினர் தாக்குதல் நடத்துவார்கள் என சொல்லி, இந்திரா காந்தியை தஞ்சாவூரில் நிற்க வேண்டாம் எனவும் சொல்லிவிட்டார் எம்ஜிஆர்.  இத்தகைய குழப்பமான நிலையை எடுத்த எம்ஜிஆர் மீது அதிருப்தியில் இருந்தார் இந்திரா காந்தி அம்மையார்.

1977 மக்களவைத் தேர்தலில் இந்திரா காந்தி தோல்வி அடைந்து மத்தியில் ஜனதா அரசு எனும் எதிர்க்கட்சிகளின் அரசு அமைந்தது. இந்த அரசை தொடக்கத்தில் எம்ஜிஆர் ஆதரிக்கவில்லை.

1977 ஜூன் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. அண்ணா திமுகவை தொடங்கி எம்ஜிஆர் சந்தித்த முதல் தேர்தல். ஏற்கனவே 1973-ல் திண்டுக்கல் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக இருந்தது 1977 தேர்தல்.

1977-ல் திமுக தனித்தே 230 தொகுதிகளில் களம் கண்டது. அந்த தேர்தலில் அதிமுக, சிபிஎம், பார்வார்டு பிளாக் , முஸ்லிம் லீக் இணைந்து ஒரு கூட்டணியாகவும், இந்திரா காங்கிரஸ், சிபிஐ இணைந்து இன்னொரு கூட்டணியாகவும் களம் கண்டன. ஜனதா கட்சி , அந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட 4 முனை போட்டி நிலவியது. இதில் அதிமுக 130 இடங்களில் வெற்றி பெற்றது. திமுகவுக்கு 48 , காங்கிரஸுக்கு 27 இடங்கள் கிடைத்தன.

தமிழ்நாட்டில் முதலாவது அதிமுக ஆட்சி அமைந்தது. 1979-ல் ஜனதா அரசின் 2-ம் அத்தியாயத்தில் சரண்சிங் பிரதமரான போது அவரது அரசில்  அதிமுகவும் இடம் பெற்றது. இதனால் காங்கிரஸின் எதிரியானது அதிமுக.மத்தியில் எதிர்க்கட்சிகளின் ஜனதா அரசு கவிழ்ந்த நிலையில் 1980-ல் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது.  அப்போது காமராஜர் மறைந்த நிலையில் ஸ்தாபன காங்கிரஸ்- இந்திரா காங்கிரஸுடன் இணைந்துவிட்டது.

1980-ல் மீண்டும் திமுக- காங்கிரஸ் கூட்டணி

இந்த தேர்தலில் மீண்டும் திமுக- காங்கிரஸ் கூட்டணி அமைந்தது. அவசர கால கொடுமைகளுக்கு சென்னை கடற்கரை பொதுக் கூட்டத்தில் இந்திரா காந்தி மன்னிப்பு கேட்க, கலைஞர் “நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக” என வரவேற்றார்.

மத்தியில் மீண்டும் காங்கிரஸ் அரசு அமைந்தது… தமிழகம் புதுவையில் இந்திராவின் காங்கிரஸ் போட்டியிட்ட 23 தொகுதிகளில் 21-ல் வென்றது. திமுக 16 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுகவுக்கு 2 இடங்கள் கிடைத்தன.

மத்தியில் இந்திரா காந்தி பிரதமரானார்.  இதனைத் தொடர்ந்து எம்ஜிஆரின் அண்ணா திமுக ஆட்சி, தமிழ்நாட்டில் டிஸ்மிஸ் செய்யப்பட்டது.

1980-ம் ஆண்டு மே மாதம் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தது. அத்தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி பங்கீடு எவ்வளவு தெரியுமா? திமுக 112 தொகுதிகள்; காங்கிரஸ் 114 தொகுதிகள்.  தமிழக வரலாற்றிலேயே கூட்டணியில் காங்கிரஸ் அதிக இடங்களைப் பெற்றது 1980-ல் மட்டும்தான்.

 ஆனால் தேர்தலில் திமுக 37 இடங்களையும் காங்கிரஸ் 31 இடங்களையுமே பெற முடிந்தது. அதிமுக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்தது.

1980-ல் தேர்தல்கள் நடைபெற்ற நிலையில் 1985-ல்தான் மக்களவை, தமிழக சட்டசபை தேர்தல்கள் நடைபெற வேண்டும். ஆனால் 6 மாதங்களுக்கு முன்னர் எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெற்றன.

1984-ல் அதிமுக- காங்கிரஸ் கூட்டணி

பிரதமராக இருந்த இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டு அவரது மகன் ராஜீவ் காந்தி பிரதமரானார்.

தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆர் உடல்நலன் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார். நாட்டின் பிரதமரான ராஜீவ் காந்தி, மக்களவைத் தேர்தலை நடத்த விரும்பினார். இதனால் 1984-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் முன்கூட்டியே தேர்தல் நடந்தது.

1984-ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. அந்த தேர்தலில் அதிமுக 155 இடங்களில் போட்டியிட்டது காங்கிரஸ் கட்சிக்கு 73 இடங்களை ஒதுக்கியது அதிமுக. இத்தேர்தலில் அதிமுக 132 இடங்களையும் காங்கிரஸ் 61 இடங்களையும் கைப்பற்றின.

1984-ல் வென்ற அதிமுகவின் இந்த ஆட்சி காலமும் முழுமையாக நீடிக்கவில்லை. 1987-ல் முதல்வராக இருந்த எம்ஜிஆர் மறைந்தார்.  எம்ஜிஆர் மறைவைத் தொடர்ந்து அவரது துணைவியார் ஜானகி அம்மையார் முதல்வரானார். ஆனால் அதிமுக பிளவுபட்டதால் அவர் முதல்வராக நீடிக்கவில்லை. அதிமுக ஆட்சி மீண்டும் டிஸ்மிஸ் செய்யப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது.

அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என உடைந்தது.

காங்கிரஸில் பிளவு

இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சியில் இருந்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வெளியேறி தமிழக முன்னேற்ற முன்னணி எனும் தனிக்கட்சியை தொடங்கி இருந்தார்.

1989 தேர்தலில் காங்கிரஸ்

1989-ம் ஆண்டு  ஜனவரி மாதம் தமிழக சட்டசபைக்கான தேர்தல் நடைபெற்றது. அப்போது தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தார் மூப்பனார். காங்கிரஸ் கட்சியும் யூசிபிஐ கட்சியும் கூட்டணி அமைத்தது. 214 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 26 தொகுதிகளில் வென்றது.

1989 சட்டசபை தேர்தலில் திமுக வென்று கலைஞர் மீண்டும் முதல்வரானார். பின்னர் அதிமுகவின் இரண்டு அணிகள் இணைந்தன.

1989 நவம்பர் மாதம் மக்களவைத் ர்தல் நடந்தது. இந்த தேர்தலில் விபி சிங் தலைமையில் தேசிய முன்னணி மத்தியில் உருவானது. இதில் கலைஞர் பங்கு முதன்மையானது. இந்த தேர்தலில் திமுக, ஜனதா தளம், சிபிஐ- சிபிஎம் ஒரு கூட்டணியாகவும் அதிமுக- காங்கிரஸ் மற்றொரு கூட்டணியாகவும் இடம் பெற்றன. 1989 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக- காங்கிரஸ் கூட்டணி பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

அதே நேரத்தில் மத்தியில் பாஜகவின் ஆதரவுடன் விபி சிங்கை பிரதமராக கொண்டு தேசிய முன்னணி அரசு அமைந்தது. இத்தேர்தலில் வெற்றி பெறாத நிலையிலும் மாநிலங்களவை எம்பியாக இருந்த திமுகவின் முரசொலி மாறன், விபிசிங் அமைச்சரவையில் இடம் பெற்றார்.  ஆனால் விபி சிங் அரசு தாக்கு பிடிக்கவில்லை. விபி சிங் பதவி விலக 1990-ம் ஆண்டு சந்திரசேகர் பிரதமரானார். இந்த சந்திரசேகர் அரசுக்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு தந்தது.

கலைஞர் ஆட்சியை மீண்டும் டிஸ்மிஸ் செய்த டெல்லி

இந்த பின்னணியில் 1991 ஜனவரி  மாதம் தமிழ்நாட்டின் திமுக அரசை கலைக்க வைத்தது காங்கிரஸ் . அப்போது கலைஞர், “ஆட்சியை கலைக்கும் சர்க்கார் நிலைக்குமா?” என கேள்வி கேட்டார். இதன்படியே  சந்திரசேகர் அரசுக்கு தந்த ஆதரவை காங்கிரஸ் திரும்பப் பெற ஆட்சி கவிழ்ந்தது. கலைஞர் வாக்கு பலித்தது.

இதனால் 1991-ல் மக்களவைக்கும் தமிழ்நாடு சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது.

1991-ல் மீண்டும் அதிமுக- காங்கிரஸ் கூட்டணி

1991 தேர்தலில் அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. தனிக்கட்சி நடத்திய சிவாஜிகணேசன் ஜனதா தளத்தில் இணைந்தார். 1991 தேர்தலில் அதிமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 65 இடங்கள் கொடுக்கப்பட்டன. 1991 தேர்தல் பிரசாரத்தின் போது ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட நிலையில் 65 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 60 தொகுதிகளைக் கைப்பற்றியது.

1991- 96-ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஜெயலலிதா முதல்வராக இருந்தார். அந்த ஆட்சி மீது மக்களுக்கு கடுமையான அதிருப்தி இருந்தது. மத்தியில் நரசிம்மராவ் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது.

அதிமுக- காங்கிரஸ் மோதல்

ஆனால் ஆட்சியை கைப்பற்றிய ஜெயலலிதா, “ராஜீவ் காந்தியின் ரத்தத்தால் நாங்கள் ஜெயிக்கவில்லை” என பேச காங்கிரஸ் கொந்தளித்தது. இதனால் அதிமுக- காங்கிரஸ் இடையேயான உறவில் மிகப் பெரிய விரிசல் உருவானது.

இரண்டாக பிளவுபட்ட காங்கிரஸ்

1996-ல் தமிழ்நாடு சட்டசபை தேர்தலும் மக்களவைத் தேர்தலும் சேர்ந்தே நடந்தது. 1996லும் அதிமுகவுடன் கூட்டணி என காங்கிரஸ் மேலிடம் முடிவு எடுத்தது. ஆனால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனையும் மீறி அதிமுக- காங்கிரஸ் கூட்டணி அமைய இந்த முறை காங்கிரஸ், தமிழ்நாட்டில் இரண்டாக பிளவுபட்டது. மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் உருவானது.

1996 தேர்தலில் மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ், திமுகவுடன் கூட்டணி அமைத்தது. மூப்பனார் தமாகாவுக்கு 40 தொகுதிகளைக் கொடுத்தார் கலைஞர். இதில் 39 இடங்களில் மூப்பனாரின் தமாகா வென்றது. கலைஞர் மீண்டும் முதல்வரானார்.

1996 முதல் 1999 வரை

ஆனால் 1996-ல் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. தனிப்பெரும்பான்மை இடங்களைப் பெற்ற பாஜகவின் வாஜ்பாய் பிரதமராக பொறுப்பேற்றார். ஆனால் மக்களவையில் அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போக 13 நாட்களில் அவரது அரசு கவிழ்ந்தது.

இதனைத் தொடர்ந்து திமுக உள்ளிட்ட மாநில கட்சிகள், இடதுசாரிகள் இணைந்து உருவாக்கிய ஐக்கிய முன்னணி ஆட்சியில் தேவகவுடாவும் குஜ்ராலும் பிரதமராக இருந்தனர்.  இந்த அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு தந்தது. இந்த கூட்டணி அரசில் திமுகவும் இடம் பெற்றது.

ஜனதா தளம் கட்சியின் குஜ்ரால் பிரதமராக இருந்த 1998-ல் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான ஜெயின் கமிஷன் அறிக்கை வெளியானது. இந்த அறிக்கையை முன்வைத்து குஜ்ரால் அரசில் இருந்து திமுகவின் மத்திய அமைச்சர்களை ராஜினாமா செய்ய சொன்னது காங்கிரஸ். இதனை பிரதமர் குஜ்ரால் ஏற்க மறுக்க, அவரது அரசுக்கான ஆதரவை காங்கிரஸ் திரும்பப் பெற்றது. அப்போது சீதாராம் கேசரி, காங்கிரஸ் தலைவராக இருந்தார். இதனால் 1998-ல் மக்களவைத் தேர்தல் மீண்டும் நடைபெற்றது.

1998 மக்களவைத் தேர்தலில் பாஜக- அதிமுக கூட்டணி அமைந்தது; திமுக கூட்டணியில் மூப்பனாரின் தமாகா இடம் பெற்றது. அப்போது காங்கிரஸ் தலைமையில் 3-வது அணி அமைக்கப்பட்டது. மத்தியில் அதிமுக ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைந்தது; வாஜ்பாய் பிரதமரானார். தமிழ்நாட்டில் அப்போது கலைஞர் தலைமையில் திமுக ஆட்சி நடைபெற்றது.

1998-ல் தமிழ்நாட்டில் கலைஞர் தலைமையிலான திமுக அரசை கலைத்தாக வேண்டும் என பிரதமர் வாஜ்பாய்க்கு ஜெயலலிதா கடும் நெருக்கடி கொடுத்தார். ஆனால் இதனை வாஜ்பாய் ஏற்கவே முடியாது என திட்டவட்டமாக மறுத்தார். இந்த கோபத்தால், வாஜ்பாய் அரசுக்கான ஆதரவை அதிமுக வாபஸ் பெற்றது. அப்போது ஜெயலலிதாவுடன் கை கோர்த்து நின்றவர் காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி அம்மையார்.

இதனையடுத்து 1999-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மீண்டும் நடைபெற்றது. அந்த தேர்தலின் போது காங்கிரஸில் சோனியா காந்தி ஆக்டிவ்வாக இயங்கினார். காங்கிரஸுடன் திமுக கூட்டணி அமைக்க முயற்சிகளை முன்னெடுத்தது. ஆனால் காங்கிரஸ் தரப்பில் இருந்து உரிய பதில் தரப்படவில்லை.

அப்போதைய சூழ்நிலையில் அதிமுக- காங்கிரஸ் இடையே இணக்கமான உறவு நிலவி இருந்தது. 1999-ம் ஆண்டு தேர்தலில் கூட்டணி குறித்து திமுக தீவிரமாக ஆலோசனை நடத்தியது. அப்போது கலைஞரின் மனசாட்சியான முரசொலி மாறன், ”அரசியலில் தற்கொலை செய்து கொள்ள முடியாது.. அதனால் கொள்கை எதிரியான பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாம்” என்றார். இது தேசிய அரசியலில் தமிழ்நாட்டில் மிக முக்கியமான நிகழ்வானது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 1998-ல் திமுக ஆதரவுடன் அமைந்தது. திமுகவும் அந்த அமைச்சரவையில் இடம் பெற்றது.

2001 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் பாஜகவும் இடம் பெற்றது. அந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் மூப்பனாரின் தமாகாவும் இணைந்தே இடம் பெற்றன. தமாகாவுக்கு 32, காங்கிரஸ் கட்சிக்கு 14 தொகுதிகள் கிடைத்தன. மீண்டும் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமைந்தது.

மீண்டும் திமுக- காங்கிரஸ் கூட்டணி

2002-ம் ஆண்டு குஜராத் கலவரங்களைத் தொடர்ந்து பாஜக- திமுக உறவில் சலசலப்பு தொடங்கியது. 2004ம் ஆண்டு பாஜகவுடனான உறவை முறித்துக் கொண்ட திமுக, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இணைந்தது.

2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இந்த உறவு தொடங்கியது. திமுக ஆட்சி கலைக்க மறுத்த வாஜ்பாய் அரசை கவிழ்த்த ஜெயலலிதாவை ஆதரித்த அதே சோனியா, நாட்டின் பிரதமராவதற்கு பெருந்தன்மையுடன் கலைஞர் முன்வந்து ஆதரவு தந்தார். ஆனால் சோனியா பிரதமராக மறுத்து மன்மோகன்சிங் பிரதமரானார்.

2006 தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 48 தொகுதிகள் கொடுக்கப்பட்டன. இதில் 34-ல் காங்கிரஸ் வென்றது.

2006-ம் ஆண்டு தேர்தலில் திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.  அந்த தேர்தலில் திமுக 96 இடங்களில் வென்றிருந்தது. பாமக, இடதுசாரிகள் ஆதரவுட்ன கலைஞர் ஆட்சியை அமைத்து நடத்தினார். 34 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சி, அமைச்சரவையில் சேர முயன்றது; ஆனால் அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்வர் கலைஞரை தொந்தரவு செய்ய கூடாது; அவரது ஆட்சிக்கு இடையூறு தரக் கூடாது என தமிழக காங்கிரஸ் கட்சிக்கு கடிவாளம் போட்டு ‘நன்றிக் கடன்’; செலுத்தினார்.

2004-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை திமுக- காங்கிரஸ் கூட்டணி நீடித்தது.

2011 சட்டசபை தேர்தலின் போது,திமுகவிடம் அதிக தொகுதிகளை காங்கிரஸ் கேட்டு நெருக்கடி கொடுத்தது. அப்போது 2ஜி வழக்கில் தயாளு அம்மாளிடம் விசாரணை நடத்தும் வகையில் அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் டிவியில் சோதனை நடத்தியது அமலாக்கத்துறை. அதே நேரத்தில் திமுகவுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையும் அண்ணா அறிவாலயத்திலேயே நடத்தியது காங்கிரஸ். இத்தகைய நெருக்கடிகள் மூலம் திமுகவிடம் இருந்து 63 தொகுதிகளைப் பறித்துக் கொண்டது. ஆனால் அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 5 இடங்களில்தான் வெற்றி கிடைத்தது. அப்போது ஆட்சியைக் கைப்பற்ற திமுக கூட்டணியால் முடியவில்லை. அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்தது.

திமுக- காங்கிரஸ் உறவு முறிவு

2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, காங்கிரஸுடனான உறவை ஈழத் தமிழர் பிரச்சனையை முன்வைத்து திமுக முறித்து கொண்டது; மத்திய அரசில் இருந்து திமுக விலகியது. இதனால் மக்களவைத் தேர்தலை திமுக- காங்கிரஸ் தனித்தனியே சந்தித்தன.

2016 முதல் 2026 வரை

2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில்  திமுக- காங்கிரஸ்  கூட்டணி மீண்டும் அமைந்தது. அந்த தேர்தலில் திமுகவிடம் 41 தொகுதிகளை வாங்கிய காங்கிரஸ் 8 இடங்களில்தான் ஜெயித்தது.

திமுக- காங்கிரஸ் உறவு வலுவடைந்தது. கலைஞர் மறைவுக்கு பின்னர் திமுக தலைவரானார் ஸ்டாலின். காங்கிரஸில் சோனியாவின் தீவிர பங்களிப்பு குறைந்த நிலையில் ராகுல் காந்தி கை ஓங்கியது. ராகுல்- ஸ்டாலின் நட்பு நல்லுறவாக இருந்தது.

2019-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முதல் முறையாக முன்மொழிந்தவர் ஸ்டாலின்.  அப்போது எல்லாம் தனது சகோதரர் என ஸ்டாலினை வாஞ்சையுடன் அழைத்தார் ராகுல்.

2021 சட்டசபை தேர்தலிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி உறவு நீடித்தது. அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன; காங்கிரஸ்18 இடங்களில்  ஜெயித்தது.

2024 மக்களவைத் தேர்தலிலும் திமுக- காங்கிரஸ் உறவு நீடித்தது.

2026 சட்டசபை தேர்தல் நடவடிக்கைகள்  தொடங்கும் போதே 2025-ம் ஆண்டு டிசம்பரில் இருந்தே காங்கிரஸ் வேறு முகத்தை காட்ட தொடங்கியது. தமிழகத்தில் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய நிலையில் விஜய் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி சேரும் முயற்சிகள் நடைபெற்றன. இதனால் திமுகவிடம் காங்கிரஸ் இரட்டை முகத்தை காட்டி வந்தது.

திமுகவுடன் பேசுவதற்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கான குழு அமைத்த பின்னரும் இந்த கண்ணாமுச்சி ஆட்டத்தை காங்கிரஸ் காட்டியது.

மீண்டும் திமுகவின் முதுகில் குத்திய காங்கிரஸ்

சட்டசபை தொகுதி பங்கீட்டில் திமுகவை அதீதமாக கடுப்பேற்றி சுகம் கண்டது காங்கிரஸ். விஜய் கட்சியை காரணம் காட்டி திமுகவிடம் பேரம் பேசி விளையாடியது காங்கிரஸ். பெரும் போராட்டங்களுக்கு பின்னர் காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்களைக் கொடுத்தது திமுக.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 5 இடங்களில்தான் வெற்றி பெற்றது. காங்கிரஸின் நேசத்துக்குரிய விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் தவெக ஆட்சி அமைக்க மெஜாரிட்டிக்கு 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. இதனால் ‘இயல்பாகவே’ தவெக- காங்கிரஸின் ஆதரவை கோரியது. காங்கிரஸ் கட்சியும் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது. அத்துடன் இனி வரும் காலங்களில் தவெகவுடன் உள்ளாட்சித் தேர்தல், மக்களவைத் தேர்தலில் கூட்டணி தொடரும் எனவும் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதன் மூலம் திமுகவுடனான கூட்டணியை மீண்டும் முறித்துக் கொண்டுவிட்டது காங்கிரஸ். இதனால், காங்கிரஸ் கட்சி, “முதுகில் குத்திவிட்டது” என திமுக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share