அதிமுகவுடன் கைகோர்த்து ஆட்சி அமைப்பதோ, அல்லது வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதோ பாசிச எதிர்ப்புப் போராட்டத்தைப் பலியிடும் ஒரு செயல் என தோழர் மருதையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க மேலும் 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தவெகவிற்கு ஆதரவு அளித்துள்ளது. பெரும்பான்மைக்கு 6 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் விசிக, இடதுசாரிகள் ஐயூஎம்எல் கட்சிகளிடம் விஜய் தரப்பு ஆதரவு கோரி உள்ளது.
இந்த குழப்பமான அரசியல் சூழலில் அதிமுகவிற்கு திமுக அதரவு அளிக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இதற்கு பல தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மு.க.ஸ்டாலின் ஈட்டிய நற்பெயர் அழியும் என தோழர் மருதையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து இடதுசாரி சிந்தனையாளர், தோழர் மருதையன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அதிமுகவுடன் கைகோர்த்து ஆட்சி அமைப்பதோ, அல்லது வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதோ முற்றிலும் கண்டிக்கத்தக்கது; அது அதிமுகவில் உள்ள இரண்டு பாஜக அடிமைகளை உயிர்ப்புடன் வைத்திருப்பது மட்டுமல்லாமல், திமுகவைத் தற்கொலை செய்துகொள்ளவும் வழிவகுத்து, ஒட்டுமொத்த திராவிட இயக்கத்தையே பயனற்றதாக்கிவிடும். இது, அற்பமான, உடனடி ஆதாயங்களுக்காக பாசிச எதிர்ப்புப் போராட்டத்தைப் பலியிடும் ஒரு செயலாகும்.
இதற்கு மேல் விஜய்க்கு வாக்கு கூடாது. மனம் திரும்புவோர்தான் உண்டு. ஜனாதிபதி ஆட்சிக்கு பின் தேர்தலில் திமுக மதிப்பு + பாஜக எதிர்ப்பு கூடும். தவெக கோழைகள் கேலிப்பொருளாவர். மாறாக ADMK வை ஆதரித்தால் திமுக கேலிப்பொருளாகும். தவெகவுக்கு ஒளிவட்டம் கூடும். மு.க.ஸ்டாலின் ஈட்டிய நற்பெயர் அழியும்.” என தெரிவித்துள்ளார்.
